நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு
நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நோர்வே தமிழ்த் திரைப்பட விழா படிப்படியாக வளர்ச்சியடைந்து 9 வது ஆண்டை எட்டியுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் தேகதி முதல் 29 ஆம் தேதி வரை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் பல பிரிவுகளில் "தமிழர் விருது " வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து 2017 ஆண்டு வெளியான முழுநீளத் திரைப்படங்களுக்கான திரையிடல் தேர்வும், வெற்றிப் பெற்ற படங்களின் விபரங்களும் நடுவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியான 200 தமிழ்த் திரைப்படங்களில் இருந்து 20 படங்கள் நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. ‘அறம்’ திரைப்படம் சிறந்த படமாகவும், கோபி நயினார் சிறந்த இயக்குனராகவும், ‘விக்ரம்வேதா’ படத்திற்காக ரா.மாதவன் சிறந்த நடிகராவும், ‘அருவி’க்காக அதிதி பாலன் சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் ‘மெர்சல்’ ஆளப்போறான் தமிழன் எழுதிய விவேக் சிறந்த பாடலாசிரியராகவும், சிறந்த துணை நடிகராக வேல ராமமூர்த்தி, ‘காற்றுவெளியிடை’க்காக சிறந்த கேமிராமேனாக ரவிவர்மன், சிறந்த பின்னணி பாடகராக அனிருத், பாடகியாக ஷ்ரேயா கோஷல், இயக்குநர் பாலுமகேந்திரா விருதை ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சாமிநாதனும் இயக்குநர் பாலசந்தர் விருதை நடிகர் முனிஷ்காந்திற்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதை இயக்குநர் பாரதிராஜாவிற்கும் வழங்க உள்ளதாக விருது குழு அறிவித்துள்ளது.