ஓடிடி திரைப் பார்வை: நவீன ஜிப்ஸிக்களின் வாழ்வைப் பேசும் ‘Nomadland’

ஓடிடி திரைப் பார்வை: நவீன ஜிப்ஸிக்களின் வாழ்வைப் பேசும் ‘Nomadland’
ஓடிடி திரைப் பார்வை: நவீன ஜிப்ஸிக்களின் வாழ்வைப் பேசும் ‘Nomadland’

Tracks (2013), intothe wild (2007). The Way Back (2010) என பயணங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படங்கள் ஏராளம். கிட்டத்தட்ட அனைத்து பயண திரைப்படங்களுக்கும் இடையே இருக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை அவற்றில் பலவும் யாரோ ஒரு பயணியின் காலக் குறிப்பிலிருந்து, பயோகிராபியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். காரணம் ஒரு பயணத்தை சினிமாவாக எடுக்க நாம் ஒரு நாடோடியாக இருந்திருக்க வேண்டும் அல்லது ஒரு நாடோடியின் வாழ்வை படித்திருக்க வேண்டும் இவை இரண்டுமற்று கற்பனையில் ஒரு பயண சினிமாவை உருவாக்குதல் என்பது நேர்மையானதாக இருக்காது. இப்போது நாம் அறிந்துகொள்ளவிருக்கும் nomadland (2020) என்ற அமெரிக்க சினிமாவும்கூட Nomadland: Surviving America in the Twenty-First Century என்ற கட்டுரைத்தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே. 2017ல் இந்த கட்டுரைத்தொகுப்பினை எழுதியவர் ஜெசிகா ப்ரூடர்.

பயணங்கள் வசீகரமானவை அதிலும் இலக்கற்ற பயணங்கள் இன்னுமே இதம். அமெரிக்காவில் ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக வேலை இழந்த பலரில் நாயகி ஃபெர்ன்னும் ஒருவர். 60 வயதைக் கடந்த ஃபெர்ன் கணவனை இழந்திருந்த நிலையில் கையில் இருக்கும் சிறிய அளவிலான பணத்தைக் கொண்டு தனக்கென ஒரு வேனை வடிவமைத்துக் கொள்கிறாள். அந்த வேன் தான் இனி வாழ்நாள் முழுமைக்குமான அவளது வீடு. அதில் ஏறி அமெரிக்காவின் வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு அவள் பயணிக்கிறாள். அவளது வேன் சக்கரம் கட்டிய எந்திரப் பறவை போல சாலையில் அசைந்து செல்கிறது. ஆங்காங்கே கிடைத்த வேலைகளை செய்து கொண்டு தன் நாள்களை வாழ்வதே ஃபெர்ன்னின் இப்போதைய விருப்பம். ஜிப்ஸிக்களின் பாணி அதுதானே. ஃபெர்ன் ஒரு நவீன ஜிப்ஸியாக இந்தக் கதையில் வாழ்கிறாள். அவளுக்கென உறவினர்கள் சிலர் ஊரில் இருந்தாலும் பயணத்தை விரும்பும் அவளது நாடோடி மனது அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறது.

பயணத்தின் போது ஒரு இடத்தில் அமேசான் நிறுவனத்தில் பேக்கிங் பிரிவில் அவளுக்கு தற்காலிக வேலையொன்று கிடைக்கிறது. பகலில் நிறுவனத்தில் வேலை செய்யும் அவள் இரவில் தனது வேனில் வந்து ஓய்வு எடுத்துக்கொள்வாள். பிறகு அந்த தற்காலிக வேலைக்கான கூலியை வாங்கிக் கொண்டு அடுத்த இடத்திற்கு பயணிக்கிறாள். இப்படியாக அமெரிக்காவின் பல்வேறு வகையான நிலப்பரப்புகளை சாலைவழியே நமக்கு அறிமுகம் செய்கிறார் பெண் இயக்குநர் Chloé Zhao. ஒளிப்பதிவாளர் Joshua James Richards கையில் கேமராவோடு ஒரு ஜிப்ஸியாகவே அலைந்திருக்கிறார். இயக்குநர் Chloé Zhao’ன் முந்தைய சினிமாக்களான ‘the rider’, 'Songs My Brot.hers Taught Me' ஆகியவற்றின் ஒளிப்பதிவாளரும் இவரே

ஃபெர்ன்னைப் போலவே நாடோடி வாழ்வை விரும்பும், நாடோடி வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் பலரையும் அவள் தனது பயணத்தில் சந்திக்கிறாள். அவர்களில் பலரும் 60 வயதைக் கடந்தவர்கள். எல்லோருமே ஃபெர்ன்னைப் போல ஒரு வேனை வடிவமைத்துக் கொண்டு அமெரிக்க சாலைகளில் பறந்துகொண்டிருப்பவர்கள். இன்னொரு நாடோடியான ஸ்வாங்கியின் அறிமுகம் ஃபெர்ன்னுக்கு கிடைக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்கிறார்கள். ஸ்வாங்கி அடுத்த சில மாதங்களில் இறந்து போகப் போகும் புற்றுநோயாளி. ஒரு காட்சியில் சக நாடோடிகளுக்கு விடைகொடுத்து விட்டு பிரிந்து செல்லும் ஸ்வாங்கி இறந்தும் போகிறாள். ஸ்வாங்கியின் பயணம் முடிந்தாலும் மற்ற நாடோடிகளின் பயணம் மிச்சமிருக்கிறது. ஸ்வாங்கி கதாபாத்திரத்தில் ச்சார்லன் ஸ்வாங்கி நடித்திருக்கிறார்.



டேவ் கதாபாத்திரத்தில் டேவிட் ஸ்ட்ராதைரின் நடித்திருக்கிறார். ஃபெர்ன்னுக்கு உற்ற நண்பனாகக் கிடைக்கிறார் டேவ். நாடோடியான அவர் தனக்கு பேரன் பிறந்திருப்பதாக செய்தி வந்திருப்பதை ஃபெர்னுக்கு சொல்லிவிட்டு சொந்த ஊர் புறப்படுகிறார். தொலைவில் செல்லும் டேவிட்டின் வேனை ஃபெர்ன் மவுனமாக பார்த்து நிற்கிறாள். இவ்விருவருக்கும் இடையிலான அன்பு இதம்.

இன்னொரு நாடோடி ஃபெர்ன்னிடம் “தன் மகனுக்கு இன்று 32 வயது. ஆனால் அவன் 5 வருடங்களுக்கு முன் தன் வாழ்வை முடித்துக் கொண்டான். அவனது நினைவாக மக்களுக்கு சேவை செய்யவே நான் நாடோடியாக அலைகிறேன்.” என்கிறார். இப்படி ஒவ்வொரு நாடோடிக்குப் பின்னேயும் சொல்ல ஒரு அழுத்தமான கதை இருக்கிறது., அவற்றை எல்லாம் காட்சிக் கோர்வையாக்கி நவீன ஜிப்ஸிக்களின் வாழ்வை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் Chloé Zhao.சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் பிறந்தவர் Chloé Zhao.Nomadl and'ற்கு முன் ‘the rider’, 'Songs My Brothers Taught Me', 'Daughters' உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி இருக்கிறார்.

வெனிஸ் படவிழாவில் விருது வென்ற இப்படம் பிறகு கோல்டன் குளோப் விருதினைப் பெற்றது. 2021ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவில் சிறந்த படத்திற்கான விருது, சிறந்த இயக்குநருக்கான விருதுகளை இப்படம் வென்றது., மேலும் இப்படத்தில் ஃபெர்ன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரான்சஸ் மெக்டார்மெண்ட் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுனைப் பெற்றார். இவை மட்டுமல்லாது பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளையும் இந்த சினிமா வாங்கிக் குவித்து வருகிறது. தற்போது இந்த சினிமாவை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம்.

பக்குவப்பட்ட மனது பயணத்தை நேசிக்கும். பயணங்களே மனிதனை பக்குவப்படுத்தும். நீ,நான்,அதிகாரம்,ஆணவம் என அனைத்தையும் ஒரு பயணத்தில் தொலைத்துவிட்டு ஃபெர்னைப் போலொரு பறவையாக கரைந்து போவோம்.

- சத்யா சுப்ரமணி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com