இப்படியும் ஒரு ஹீரோவை உருவாக்க முடியுமா! ரசிகர்கள் கொண்டாட மறந்த படைப்பு - ‘காதலும் கடந்து போகும்’!

இப்படியும் ஒரு ஹீரோவை உருவாக்க முடியுமா என பிரமிக்கவைத்த தமிழ் ரசிகர்கள் கொண்டாட மறந்த ‘காதலும் கடந்து போகும்’ திரைப்படம் இதே நாளில் 2016 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் நாளில் வெளியானது.
காதலும் கடந்து போகும்
காதலும் கடந்து போகும்pt web

“பாரில் தகராறு செய்கிறார்கள் நீங்கள் தான் வந்து என்னனு கேட்கணும்” என்று அழைப்பு வந்ததும் ஹீரோ மிகவும் கெத்தாக கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு பாருக்கு செல்கிறான். பின்னணியில் ‘ஒரு ஊருல ஒரு வீரன்’ என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சிகரெட்டை ஊதிக்கொண்டே மாஸாக செல்கிறான். பாருக்குள் எண்ட்ரி ஆனதுமே ஸ்டைலான கூலிங் க்ளாஸை ஒரு பெரியவரிடம் கொடுத்துவிட்டு செல்வது என ஹீரோவுக்கு பில்டப் எகிறிக் கொண்டே செல்கிறது. அங்கே பாரில் குடித்துவிட்டு தகராறு செய்து கொண்டிருக்கும் இளைஞர்கள் 4 பேரை ஆவேசமாக மிரட்டுகிறான் ஹீரோ. அடுத்து என்ன நடக்கும் என்ற டெம்ப்ளேட் படத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ஆடியன்ஸ் கண்முன்னே ஏற்கனவே விரிவாகி இருக்கும். அதாவது, ஹீரோ அந்த 4 பேரை அடித்து துவம்சம் செய்யப்போகிறார் என்ற முன் அனுமானம் உருவாகி இருக்கும். ஆனால், அந்த காட்சி வழக்கமான எந்த பாணியிலும் இல்லை. ஹீரோ அடிக்க கை ஓங்குகிறான், ஆனால், அவனது அடியில் இருந்து அவர்கள் அசால்ட்டாக தப்பித்துக் கொள்கிறார்கள். அப்படியே அவன் ஒரு அடி அடித்தாலும் அதற்கும் அவர்கள் எல்லோரும் சேர்ந்து எக்கச்சக்க அடி அடித்து துவைத்து விடுகிறார்கள். என்ன ஹீரோவுக்கு இப்படியொரு எண்ட்ரி ஃபைட்டா என்று ஆச்சர்யமாக இருக்கும். ஆம், அப்படித்தான் காட்சிகளை உருவாக்கி இருப்பார் இயக்குநர் நலன் குமாரசாமி. உண்மையில் காதலும் கடந்து போகும் படம் முழுவதும் வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள் கைவிட்டு எண்ணக்கூடிய அளவிற்கு தான் இருக்கும். எல்லா காட்சிகளுமே மிகவும் இயல்பாகவே இருக்கும் இருக்கும். ஆனால், காட்சி எடுக்கப்பட்ட விதம் முற்றிலும் தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும். ஹீரோவுக்கு உரிய கெத்து என்று பெரிய அளவில் எதுவுமே இருக்காது.

‘காதலும் கடந்து போகும்’ படத்தின் ஒவ்வொரு சீன் குறித்தும் பேசுவதற்கு அவ்வளவு விஷயங்கள் இருக்கும். முதல் காட்சியில் வீட்டை விட்டு ஹீரோயின் வேலைக்காக ஓடி வரும் காட்சி தொடங்கி, கடைசி காட்சியில் பெட்ரோல் பங்கில் ஹீரோவும், அவருடன் மற்றொரு நபரும் வேலை பார்க்கும் காட்சி வரை எல்லா காட்சியிலும் பேசுவதற்கு அவ்வளவு விஷயங்களை கொட்டி வைத்திருக்கிறார் இயக்குநர் நலன் குமாரசாமி. சூது கவ்வும் படத்தில் எப்படி வழக்கத்திற்கு மாறான கதை சொல்லல் பாணி இருக்குமோ, பின்னணியில் எப்படி அரசியல் களம் இணைக்கப்படிருக்குமோ அப்படித்தான் இந்தப் படத்திலும். பொறியியல் கல்லூரியில் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் உலாவிக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் ஒரு சாம்பிள் ஆகத்தான் மடோனா செபாஸ்டியன் ஏற்று நடித்துள்ள யாழினி கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதேபோல், ஏழ்மை பின்னணி கொண்ட இளைஞர்களை அரசியல் பின்புலத்தை வைத்து ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கான ஒரு சாம்பிள்தான் விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள கதிர் (அ) கதிரவன் கதாபாத்திரம்

ஒரே பிரேமில் வாழும் ஒரே மாதிரியான இரண்டு கதாபாத்திரங்கள் - ஒன்று தொடக்கம், மற்றொன்று முடிவு

படத்தின் முக்கியமான காட்சி அது. மொடாக்குமாரை எப்படியாவது கொலை செய்துவிட வேண்டும் என்று திலகர் - சம்பத் - கதிர் மூவரும் முடிவு எடுக்கிறார்கள். இந்தக் கொலையை நீ தான் செய்ய வேண்டும் என்று சம்பத் சொல்ல, முதலில் மறுத்தாலும் பின்னர் அதற்கு சம்மதம் சொல்கிறான் கதிர். சம்பத், கதிர் இருவரும் காரில் மொடாக்குமார் இருக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். அந்த காரில் இன்னொருவன் இருக்கிறார். அதுதான் முரளி. அதாவது, கதிர் மொடாக்குமாரை கொலை செய்துவிட்டால் அந்தப் பழியை போலீசாரிடம் சென்று ஏற்றுக் கொள்வதற்காக முரளியை தயார்படுத்தி வருகிறார்கள். சம்பந்த் காரில் வரும் பொழுது முரளியின் மனதை பிரைன்வாஸ் செய்து கொண்டே வருகிறான். “நீ கொலை செய்துவிட்டு வந்தபின் உன்னை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்; நீ ஒன்றும் பயப்படாதே, வீட்டை பார்த்துக்கொள்கிறோம்” என வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறான் சம்பத். முரளியிடம் சம்பத் சொல்லும் வார்த்தைகளை கதிர் கவனித்துக் கொண்டே வருகிறான்.

ஆம், அந்த வார்த்தைகள் அனைத்தும் ஒரு காலத்தில் கதிர் இடம் சொல்லப்பட்டவை. இன்று முரளி இருக்கும் அந்த இடத்தில் ஒரு காலத்தில் கதிரும் இருந்தான். அதாவது சம்பத் செய்த கொலைக்காக பழியை ஏற்று சிறை சென்றான் கதிர். 5 ஆண்டுகள் சிறையில் வாழ்க்கையை கழித்தவன். தன்னைப்போலவே பலிகடா ஆக்கப்படுவதற்காக ஒரு ஜீவனை கொண்டு வருகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்கிறான் கதிர். அதனால், சம்பத் சென்ற பின்னர், முரளியை அங்கிருந்து சென்றுவிடுமாறு கதிர் சொல்கிறான். ஆனால், முரளிக்கு ஒன்றுமே புரியவில்லை. தான் எப்படியும் சரியாக போலீசில் சரண் அடைந்துவிடுவேன், யாருடைய பெயரையும் அங்கே சொல்ல மாட்டேன் என்றெல்லாம் கதிரிடம் சொல்கிறான். கதிருக்கு இன்னும் கோபம் உச்சத்திற்கு செல்கிறது. தான் காப்பாற்ற நினைப்பது இவனுக்கு ஏன் புரியவே மாட்டேன்கிறது என பளார் பளார் என அறைவிட்டு முரளியை அங்கிருந்து போக வைக்கிறான் கதிர். முரளி - கதிர் இடையிலான இந்த பாண்ட் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் படத்தில் அதிக காட்சிகள் கதிர் உடன் முரளி கதாபாத்திரம் பயணிக்கும். 12 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்து இருப்பான் முரளி. குடும்ப சூழல் சரியாக இருக்காது. கிட்டதட்ட கதிர் வாழ்க்கையின் பின்னணியை போலவே கொண்ட ஒன்றும் அறியாத அப்பாவி இளைஞனாக திலகரிடம் வேலைக்கு சேர்வான் முரளி. தன்னை ஒத்ததுபோன்றே வாழ்க்கை உள்ள முரளிக்கு தன்னைப்போன்ற முடிவு வரக்கூடாது என்று எண்ணிதான் அந்த கொலை முயற்சியில் அவனை கழட்டிவிடுவான் கதிர்.

இன்று ஹீரோவாக சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் மணிகண்டன் முரளியாக அசத்தி இருப்பார். தன்னுடைய இயல்பான நடிப்பால் மிரட்டி இருப்பார். மொடாக்குமார் கேரக்டரில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட போலீசாக, மாமூல் வசூல் செய்யும் நபராக அதகளப்படுத்தி இருப்பார் சமுத்திரக்கனி.

கதிர் கேரக்கடரின் பின்னணி!!

கதிர் கேரக்டருக்கு பெரிய பின்னணி எதுவும் நிறுத்தி நிதானமாக சொல்லப்பட்டிருக்காது. போகிற போக்கில் பல காட்சிகளின் வழியாக அப்படியே அவன் வாழ்க்கையை நமக்கு உணர்த்தியிருப்பார்கள். தாயின் முகத்தை கூட பார்த்திராதவன் கதிர். ஏரியா கவுன்சிலர் திலகர் (ஜி.எம்.சுந்தர்). அவனுடைய சகோதரன் சம்பத். இவர்களுடன் இருக்கிறான். அதாவது, சம்பத் செய்த கொலைக்காக பழியை ஒப்புக்கொண்டு 5 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து அப்பொழுதுதான் வெளியே வந்திருப்பான். கவுன்சிலரான திலகர் அரசியல் கட்சியில் முக்கியப் புள்ளியாக இருக்கிறார். கட்ட பஞ்சாயத்துகள் செய்வதும், பார் டெண்டர் எடுத்து வருமானம் ஈட்டுவதும் தான் அவனுடைய பணி. அவனுக்கு உறுதுணையாக சம்பத் இருக்கிறார். கொலைப்பழியை ஏற்றுச் செல்லும் முன், ‘நீ வெளியே வந்ததும் உன்னை ராஜா மாதிரி பார்த்துக்கிறோம்’ என்று சொல்லி இருப்பார்கள். ஆனால், சிறையில் இருந்து வெளியே வந்தது நிலைமை அவர்கள் சொன்னபடி இருக்காது. ஒரு வேளை உணவிற்கே இன்னொருவரை எதிர்பார்த்து இருக்கும் மிக மோசமான நிலையில் கதிர் இருப்பான். கொலைப்பழியை ஏற்றிருந்தாலும் ஒருவனை அடிக்கும் அளவிற்கு அவனுக்கு துணிச்சல் இருக்காது. ஆனாலும், ஒரு ஒயின் ஷாப் பாரை ஏலம் எடுத்து நடத்த வேண்டும் என்று எண்ணுகிறான்.

“எங்க குடும்பம் 3 தலைமுறையா எங்க முதலாளி குடும்பத்துல குப்ப கொட்டிக்கிட்டு இருக்கோம். நான் ஒரு படி மேலே போயி ஓனர் ஆகலாம்னு முடிவு பண்ணிருக்கேன்” என்று கதிர் சொல்லும் இந்த வார்த்தைகளே அவன் வாழ்க்கைகான ஒரே லட்சியம். ஆனால், கதிருக்கு ஏதும் செய்து கொடுக்கும் முடிவில் திலகர் இல்லை. கதிரால் எந்தப் புரோஜனமும் இல்லை என்று அவனுடைய நினைப்பு. ஆனால் கடைசியில் அவனையே கொலை செய்யும் வேலைக்கு அனுப்புகிறான். மொடாக்குமாரை கொலை செய்யும் கதிருக்கு என்ன நேர்ந்தது என்பது மிகவும் இயல்பான முடிவு.

க்ளைமேக்ஸ் காட்சியை முக்கியமான இடத்தில் முடித்து இருப்பார் இயக்குநர் நலன் குமாரசாமி. அதாவது, முரளிக்கு என்ன சொல்லி கதிர் அனுப்புவான் என்றால், பெட்ரோல் பங்க் என எதாவது ஒரு இடத்தில் வேலை செய்து பிழைத்துக் கொள். இது வேண்டாம் என்றுதான் சொல்வான். கடைசியில் முரளி, கதிர் இருவரும் ஒரு பெட்ரோல் பங்கில் தான் வேலை பார்ப்பது போல் படம் முடியும்.

நலன் குமாரசாமி பேசிய உலக, உள்ளூர் அரசியல்!!

இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான காட்சி, ஏரியாப் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இருவர் சூப்பர் மார்க்கெட்டில் திருடி மாட்டிக் கொள்ளும் அந்தக் காட்சிதான். திருடிய சிறுவர்களை பிடித்து மிரட்டிக் கொண்டிருப்பான் அந்த சூப்பர் மார்க்கெட்டின் ஊழியன். அப்பொழுது கதிர் அங்கு சென்று பேசி அந்த சிறுவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பான். அதாவது, ஜெயிலுக்கு இரண்டு முறை சென்று வந்துவிட்டால் அவர்கள் கிரிமினில் ஆகிவிடுவார்கள், அதனால் கண்டித்து அனுப்பலாம் அல்லது பெற்றோர்களிடம் அழைத்துச் சொல்லலாம் என்று கதிர் சொல்லி அந்த ஊழியரை கன்வீன்ஸ் செய்வான். அந்த சிறுவர்கள் வெளியே செல்லும்போது, அவர்களை பார்த்து இனிமே இந்த கடை பக்க வரவே கூடாது என்று எச்சரிக்கும் தொணியில் கூறுவான் அந்த ஊழியன். உடனே கோபப்படும் கதிர், சொல்லும் வசனம் தான் முக்கியமானது. ‘திருடாதே என்று சொல்லு; உள்ள வரவேண்டாம்னு எப்படி சொல்லுவ; எங்க ஏரியாவுலயே கடைய போட்டு எங்களயே உள்ள வரவேண்டாம்னு சொல்லுவியா..” என்று மிரட்டும் தொணியில் சொல்வான் கதிர்.

மற்றொரு காட்சியில், யாழினி உடன் ஹோட்டலின் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது வரும் வசனம் ப்ளீச் என்று இருக்கும். “வேலை இல்லாதவர்கள் நம்ம ஊர்ல தான் சாஃப்ட்டா இருக்கானுங்க. அதே வெளிநாட்டுல பாரு அடிச்சு தொம்சம் பண்றானுக வேலை கேட்டு. வேலை இல்லாதது உன்னோட தப்பு இல்லை; அது இந்த நாட்டோட தப்பு” என்று கதிர் மிகத் தெளிவாக யாழினிக்கு ஆறுதல் சொல்வான். இந்தக்காட்சியின் தொடக்கத்தில் ரிசனைன் என்று தெளிவில்லாத ஆங்கிலத்தில் பொருளாதார நெருக்கடி குறித்து குறிப்பிடுவான்.

பொறியியல் படித்தவர்களின் பரிதாபம் - யாழினியின் யதார்த்த கதாபாத்திர வடிவமைப்பு!!

யாழியின் வழியாகத்தான் கதையை தொடங்கி இருப்பார் நலன். விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றொரின் கட்டுப்பாட்டிற்குள் வளர்ந்தவள், அவர்களின் ஆசைக்காக அங்கே உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படித்தவள் ஐடி துறையில் பெரிய ஆளாக வர வேண்டும் என்ற ஆசையில் வீட்டை எப்படியோ சமாளித்து சென்னை வருகிறாள். வேலையும் கிடைத்து கொண்டாட்டமான வாழ்க்கையும் ஆரம்பிக்கிறது. காதலனாக ஒருவனும் அதே அலுவலகத்தில் கிடைக்கிறான். ஆனால், இந்த எல்லாமும் ஒரே நொடியில் நின்று போகிறது. யாழினியே சொல்வது போல், ‘எல்லா சந்தோஷங்களும் ஒரே நாளில் நின்று போனால், அதை என்ன வென்று சொல்வது’. அப்படிதான் அவளுடைய வாழ்க்கை ஒரே நாளில் மாறிவிடுகிறது.

அவள் வேலை பார்த்த கம்பெனியை மூடிவிடுகிறார்கள். இப்பொழுது வேலை இல்லை. பழைய வாழ்க்கை இல்லை. காதலன் என்று வந்தவனும் தற்போது இல்லை. மீண்டும் ஒரு வேலை தேட வேண்டும் அதுவரை இருப்பதற்கு குறைவான பட்ஜெட்டில் வீடும், பார்ட் டைம் வேலையும் வேண்டும். இப்படித்தான் யாழினியின் கதை தொடங்குகிறது. அவள் குறைவான பட்ஜெட்டில் வந்து தங்கும் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கிறான் கதிர். இப்படிதான் இருவருக்குள்ளும் தொடர்பு ஏற்படுகிறது.

யாழினியின் வழியாக பல விஷயங்களை கடத்தி இருக்கிறார் இயக்குநர். பொறியியல் படித்துவிட்டு வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர் பட்டாளத்தின் வேதனை. முக்கியமான சில கல்லூரிகளை தவிர்த்து இண்டீரியரில் உள்ள கல்லூரிகளில் படித்து வரும் இளைஞர்களுக்கு சரியான வேலை அமைவது எவ்வளவு பெரும்பாடாக இருக்கிறது என்பதை யாழினி வரும் பெரும்பாலான காட்சியிலும் நமக்கு உணர்த்தி இருப்பார் நலன். “எதற்காக இத்தனை பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள்; நாங்களே இவ்வளவு பேர் படித்துவிட்டு வேலை இல்லாமல் சுற்றுகிறோம்” என்று யாழினி ஓரிடத்தில் ஆதங்கப்படுவார்.

காதலன் என்று வந்தவன் கஷ்டம் வரும் பொழுது அவனை விட்டு போய்விடுகிறான். ஆனால், யாரை அவள் அருவருக்கத்தக்க ஒருவனாக நினைத்தாலோ அவன் மீதே அவள் மையம் கொள்கிறாள்.

கதிரை ரவுடி என நினைத்து அவனிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பெப்பர் ஸ்பிரேவை கடையில் வாங்குவாள் யாழினி. ஆனால், படித்த ஐடி துறையில் உயர் இடத்தில் இருக்கும் ஒருவன் தான் வேலைக்காக படுக்கை அறைக்கைக்கு கூப்பிடும் போது அவன் மீது அதே பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்துவாள் யாழினி. அதாவது, அப்பியரன்ஸ் என்பதைவிட நடத்தைதான் முக்கியமானது.

தமிழ் சினிமா கண்டிராத காதல் கதை!

யாழினி - கதிர் இடையிலான உறவு என்பது இதுவரை தமிழ் சினிமா பாத்திராத எவ்வித ஸ்டீரியோ டைப் இல்லாத ஒரு காதல். கடைசி நிமிடம் வரை இருவரும் பரஸ்பரம் அப்படி ஏதும் பேசிக் கொள்ள மாட்டார்கள். யாழினிக்கு கொஞ்சம் கொஞ்சமாக கதிர் மீது நம்பிக்கையும், பின்னர் விருப்பமும் வருவதை நம்மை உணர வைத்திருப்பார்கள். ஆனால், வெளிப்படையாக கடைசி காட்சி வரை எதுவும் சொல்லி இருக்கமாட்டார்கள்.

ஒரே அறையில் இரவில் தங்குகிறார்கள், இருவரும் குடிக்கிறார்கள். ஆனால், எந்தவொரு காட்சியையும் ஆபாசமாக இயக்குநர் காட்சிப்படுத்தவில்லை. காதலனாக இருந்திருந்தாலும் செய்ய துணியாத காரியத்தை அவளுக்கான அவன் செய்த பின்னரே கொஞ்சம் நெருக்கமாகிறாள். கதிர் நல்லவனாக அவளுக்கு பட்டாளும் ஒரு ரவுடி தானே என்ற எண்ணம் அவளுக்கு மேலோங்குகிறது.

யாழினிக்காக எதையும் செய்யும் அளவிற்கு கதிர் இருக்கிறான். யாழினிக்கு வேலை கிடைக்க சில அசாத்தியமான காரியங்களையும் செய்கிறான். ஆனால், அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையும் பொழுது அவளை நெருங்க மறுக்கிறான். அதுதான் அவள் மீது அவன் வைத்திருக்கும் அன்பு. ஏனெனில், கொலை பாதக செயலை செய்வது என்று முடிவெடித்த பின்னர் இனி யாழினியை பார்ப்பது சரியாக இருக்காது தன்னால் அவளுக்கு தொந்தரவு வரக்கூடாது என்று விலகிவிடுகிறான். இதுதான் அவனின் அன்பின் வெளிப்பாடு. அதேபோல், தனக்கு வேலை கிடைத்ததும் அவனை பார்க்க பல நாட்கள் அவள் காத்திருக்கும் அந்த காட்சிகளும், அவளுக்கு வரும் கனவும் தான் அன்பின் வெளிப்பாடு. இறுதியில் க்ளைமேக்ஸில் இருவருக்குமான அந்த பார்வையுடன் படத்தை முடித்தவிதம் மிகவும் அருமை.

போகிற போக்கில் இந்தப்படத்தில் பல விஷயங்களுக்கு கவுண்ட்டர் கொடுத்திருப்பார் இயக்குநர். அதில் பிரதானமானது ஆர்கானிக் எனும் இயற்கை உணவு பற்றியது. யாழினியின் குடும்பம் அதாவது பெற்றோர் இயற்கை உணவின் மீது நாட்டம் கொண்டவர்கள். அதனை சப்டிலாக கலாய்த்து இருப்பார் இயக்குநர். அதேபோல், டீ ஷோவில் சிலாட் ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கையுடன் ஆரம்பத்தில் வருபவரும் இயற்கை உணவுதான் சாப்பிடுவதாக சொல்வார். ஏனெனில், இயற்கை உணவு என்று ஒரு நேரத்தில் அப்படி சேட்டை செய்து கொண்டிருந்தார்கள்.

அதேபோல், யாழினியின் தந்தை மூலமாக ஆன்மீக உலகை சற்றே கலாய்த்து இருப்பார். ‘இப்பொழுதுதான் பெருவெடிப்பு கொள்கை உருவாகி இருக்கு. ஆனால் நம்முடைய முன்னோர்கள்..’ என்று ஆரம்பிப்பார் யாழியின் தந்தை. அத்துடன், பெருவெடிப்பின் போது வந்தது தான் ஓம் ஒன்ற ஒலி என்று அவர் கதை சொல்ல சொல்ல வேறுவழியில்லாமல் கதிர் கேட்பதுபோல் காட்சி அமைத்து அசத்தியிருப்பார் இயக்குநர். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

இறுதியாக, இந்தப்படத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான ஒன்று. இது ஹீரோவுக்கான எல்லா இலக்கணங்களையும் உடைத்து புதிய பாணியில் கதை சொல்லி இருக்கிறது. ஹீரோவை கதை முழுக்க பலரும் அடித்துக் கொண்டே இருப்பார்கள். அவர் பேச்சை யாருமே கேட்கவே மாட்டார்கள். கலாய்த்துக் கொண்டே இருப்பார்கள். ஹோட்டலில் வாய மூடிட்டு சாப்பிடுங்க என்று அவன் சத்தம் போட ‘வாய மூடிட்டு எப்படி சாப்ட்றது’ என்று உடனே கவுண்ட்டர் வரும், சாப்பாடு வாங்கிக்கிட்டு வானு கெஞ்சினாலும் அவனுக்காக யாரும் வாங்கி வரமாட்டார்கள்.

இப்படி படம் முழுக்க மொக்கை வாங்கிக் கொண்டே இருப்பான். சில காட்சிகள் மட்டுமே அவனை ஹீரோவாக மாற்றும். ஒன்று அந்த சூப்பர் மார்க்கெட்டில் அந்த சிறுவர்களுக்காக பேசும்பொழுது, யாழினிக்காக அந்த ஐடி அதிகாரியை வெளுத்து வாங்குவது இதுபோன்ற சில இடங்களில் தான் வித்தியாசமாக தெரிவார். அதுவும் யதார்த்த பாணியில் தான் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

‘காதலும் கடந்து போகும்’ .. உண்மையில் வித்தியாசமான அனுபவம்.. பல விஷயங்களை போகிற போக்கில் உணர்த்தும் அசாத்தியமான படைப்பு!

பின் குறிப்பு: இது ஒரு கொரியன் படத்தின் தழுவல் தான் என்றாலும் நம்முடைய மண்ணிற்கே உரித்தான மொழியில் அனைத்தையும் மாற்றி படைப்பை உருவாக்கி இருப்பார் நலன் குமாரசாமி!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com