அஜித் படத்தில் நடிக்கவில்லை: நிவின் பாலி விளக்கம்
அஜித்தின் ‘விசுவாசம்’ படத்தில் தான் நடிக்கவில்லை என்று நடிகர் நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.
மிக வித்தியாசமான திரைக்கதை அமைப்பு மூலம் பெரிய அளவு பேசப்பட்ட திரைப்படம் ‘நேரம்’. அந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நிவின் பாலி. அடிப்படையில் இது டப்பிங் படமாக இருந்தாலும் அந்த சாயலே இல்லாமல் இருந்ததினால் நிவின் பாலியின் சினிமா கிராஃப் மலையாள சினிமா அளவுக்கு தமிழிலும் உயர்ந்தது. ஆனால் அதன் பின் நிவின் தமிழில் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. நேரடியான ஒரு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அவர் அடிக்கடி கருத்து தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் அவர் நடித்துள்ள ‘ரிச்சி’ சில தினங்களுக்கு முன் வெளியானது. ஆனால் ‘நேரம்’ அளவுக்கு இதற்கு ஓபனிங் இல்லை. அதற்கு நிவின் அஜித் நடிக்க உள்ள ‘விசுவாசம்’ படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் பரவ ஆரம்பித்தது. இந்தத் தகவல் குறித்து நிவின் பாலி, “நான் அஜித் படத்தில் நடிக்கவில்லை. எனக்கு அப்படி ஒரு எந்த அழைப்பும் வரவில்லை. பலரையும் போல நானும் மீடியாக்களில் வெளியான செய்தியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன். அந்த செய்தியில் உண்மை இல்லை” என்று கூறியுள்ளார்.
‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களைத் தொடர்ந்து அஜித், இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகும் நான்காவது படம் ‘விசுவாசம்’. இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.