“தமிழ் நடிகரால் எனக்கு பாலியல் தொந்தரவா??.. மனிதர்களாக இருங்கள்!” - வதந்தியை மறுத்த நித்யா மேனன்!

தமிழ் நடிகர் குறித்தும், தமிழ் சினிமா இண்டஸ்டிரி குறித்தும் நித்யா மேனன் கூறியதாக சில வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
Nithya Menon
Nithya MenonPT

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என பல மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். தென்னிந்தியாவின் பல்துறை நடிகைகளில் ஒருவராக கலக்கி வரும் நித்யா, வித்தியாசமான வேடங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார். எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் ஒன்றிப்போகும் நித்யா மேனனின் நடிப்பிற்கு பல ரசிகர்கள் ஃபாலோவர்களாக இருக்கின்றனர்.

ஒரு தமிழ் நடிகர் துன்புறுத்தல் செய்தார்!

சமீபத்தில் நித்யா மேனன் பேட்டி ஒன்றில் பேசியதாக ஒரு மோசமான தகவல் வேகமாக பரப்பப்பட்டது. அதில், “நான் இதுவரை தெலுங்கு திரைத்துறையில் எந்தவிதமான பிரச்னைகளையும் சந்தித்ததில்லை. ஆனால் தமிழ் திரைத்துறையில் எனக்கு பல பிரச்னைகள் இருந்தன. ஒரு தமிழ் நடிகர் படப்பிடிப்பு தளத்தில் எனக்கு துன்புறுத்தலை ஏற்படுத்தினார்” என்று கூறியதாக வேகமாக பரவியது.

இந்த செய்தி வேகமாக பரவியதை அடுத்து, தமிழ் திரைத்துறை ரசிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு திரைத்துறை ரசிகர்களும் யார் அந்த நடிகர் என்ற சந்தேகத்தை எழுப்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் ஃபிலிம் ட்ரேட் ட்ரேக்கரான ஏபி ஜார்ஜ் என்பவர், நித்யா மேனன் உடன் பேசிய வாட்ஸ்அப் ஸ்கிரீன்ஷாட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் தனது தமிழ் சக நடிகர்களுக்கு எதிராக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்று நித்யா மேனன் தனிப்பட்ட முறையில் தெளிவுபடுத்தியுள்ளார்.

தயவு செய்து மனிதர்களாக இருங்கள்! - நித்யா மேனன்

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், தன்னுடைய சமூக வலைதளங்கள் மூலம் நித்யா மேனன் இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்தார். அவர் பதிவிட்டிருக்கும் அந்த பதிவில், “ஊடகத்தின் சில பிரிவுகள் இதுபோன்று மோசமான செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது. நான் உங்களிடம் ஒன்றை வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறேன், இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதில் சரியாக இருங்கள்” என்றும்,

தவறான செய்தி! முற்றிலும் பொய்! நான் இதுபோன்ற ஒரு பேட்டியை கொடுக்கவே இல்லை. யாருக்காவது தெரிந்தால் - தயவு செய்து இந்த வதந்தியை யார் ஆரம்பித்தார்கள் என்று எனக்குச் சுட்டிக்காட்டவும். வேகமான கிளிக்குகளைப் பெறுவதற்காக இது போன்ற தவறான செய்திகளை உருவாக்குவதற்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என்று பதிவிட்டிருந்தார்.

மேலும் சிறுது நேரம் கழித்து மீண்டும் ஒரு பதிவிட்டிருந்த நித்யா மேனன், யார் அந்த வதந்தியை பரப்பினார்கள் என்பதை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். @BuzZ Basket என்ற எக்ஸ் பக்கத்தை டேக் செய்து பதிவிட்டிருக்கும் பதிவில், “குறுகிய நேரத்திற்குத்தான் நாம் அனைவரும் இங்கு இருக்கிறோம். ஆனால் அந்த நேரத்தில் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது :). இவர்களின் பெயர்களை வெளியிடுவதன் மூலம் இதுபோன்ற மோசமான நடத்தையை தடுத்த நிறுத்தமுடியும் என்பதால் இதை நான் சுட்டிக்காட்டுகிறேன். @ursBuzzBasket, @letscinema மற்றும் இவர்களை பின் தொடர்ந்து பதிவிட்ட அனைவரும் சிறந்த மனிதர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இவர்களை சுட்டிக்காட்டிய அனைவருக்கும் நன்றிகளை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com