“விஜய் சேதுபதியுடன் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு”- சீனுராமசாமி
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராகி இருக்கிறார் விஜய் சேதுபதி. மாதத்திற்கு இரண்டு படங்கள் என்பதைக்கூட சர்வசாதாரணமாய் செயல்படுத்தி வருகிறார். அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கும் நிலையில் ஆஸ்தான இயக்குநர் சீனுராமசாமியுடன் மீண்டும் கைகோர்க்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த விஜய் சேதுபதி, ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’.தேனி, கம்பம் பகுதி மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் காதல், பாசம், துரோகம் எனப் பல பரிமாணங்கள் இந்தத் திரைப்படத்தில் எதிரொலித்தது.
இந்தப் படத்திற்கு பிறகே விஜய் சேதுபதி திரையுலகிற்கு தனி நாயகனாக அறிமுகம் ஆனார். தென்மேற்கு பருவக்காற்றின் வெற்றிக்குப் பின் சீனுராமசாமியுடன் அவர் கைகோர்த்த படம் ‘இடம் பொருள் ஏவல்’. விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த ‘இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், பல்வேறு பிரச்னைகளால் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்திருந்தார். இதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கிய ‘தர்மதுரை’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது நான்காவது முறையாக சீனு ராமசாமியுடன் கைகோர்க்கிறார் விஜய்சேதுபதி. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ள விஜய் சேதுபதி டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இசையமைக்கும் இத்திரைப்படத்தை யுவன் சங்கர் ராஜாவே தயாரிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் ‘மாமனிதன்’ என்ற பெயராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீனுராமசாமி - விஜய் சேதுபதி - யுவன் சங்கராஜா - இளையராஜா என்ற இந்த வெற்றிக்கூட்டணியை சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்