சாதி, ட்ரெஸ்ஸிங் குறித்து சர்ச்சை கருத்துகள்... சிக்கலில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!

சாதி, ட்ரெஸ்ஸிங் குறித்து சர்ச்சை கருத்துகள்... சிக்கலில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!
சாதி, ட்ரெஸ்ஸிங் குறித்து சர்ச்சை கருத்துகள்... சிக்கலில் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்!

நடிகர் ஒருவரை விமர்சிக்கும்போது சாதிய ரீதியிலும், நடிகை ஒருவரின் ஆடை பற்றி அதிருப்தி வெளியிட்டும் பேசி, தெலுங்கு திரையுலகில் கடும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.

தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தல் பல்வேறு விவாதங்களையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரகாஷ் ராஜ் நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. இப்போது தமிழ், தெலுங்கில் முன்னணி வில்லன் - உறுதுணை நடிகராக திகழும் கோட்டா சீனிவாச ராவ் மூலமாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

நடிகர் சங்கத் தேர்தலில் பிரகாஷ் ராஜுக்கு எதிராக கோட்டா சீனிவாச ராவ் சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். பிரகாஷ் ராஜ் அணியைச் சேர்ந்த நடிகர் நாக பாபு, கோட்டா சீனிவாச ராவுக்கு கடும் எதிர்வினையை பதிவு செய்திருந்தார். ``தனது வாழ்க்கையின் இறுதி நாட்களில் இருக்கும் கோட்டா சீனிவாச ராவ், பிரகாஷ் ராஜ் மீது ஏன் பொறாமைப்படுகிறார் என்று தெரியவில்லை" என்று நாக பாபு பேசியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய கோட்டா சீனிவாச ராவ், ``சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் புகழால் நாக பாபு உயிர் பிழைத்திருக்கிறார். அவர் எப்படி இத்தகைய கருத்துகளை கூற முடியும்? நான் அவரை எப்போதாவது காயப்படுத்தினேனா? அவரைப் பற்றி நான் இதேபோன்ற கருத்துகளைச் சொல்லியிருந்தால், ஊடகங்கள் மூலமாக நான் என்ன மாதிரியான பின்னடைவை சந்தித்திருப்பேன் என்று கற்பனை செய்து பாருங்கள்" என்றவர், சாதி தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் இப்போதும்கூட தான் சாதிக்கு ஆதரவாக இருப்பத்தை அந்தப் பேட்டியில் ஒப்புக்கொண்ட நடிகர் கோட்டா சீனிவாச ராவ், ``கம்மா சமூகத்துக்கு நான் எப்போதும் விசுவாசமாக இருப்பேன். ஏனெனில் எனது வாழ்க்கையில் நான் உண்ட 95 சதவீத உணவு அந்த சமூகத்தின் காரணமாக எனக்கு கிடைத்தது. அவர்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு உணவளித்திருக்கின்றனர். இதனால் நான் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் சாப்பிட்ட 95% உணவு அவர்களால் கிடைத்தது என்றால், மீதமுள்ள 5% ரெட்டி மற்றும் ராஜூஸ் சமூகங்களிடம் இருந்து கிடைத்தது. இந்த உண்மையை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை" என்றவர், நடிகர் நாக பாபு மீது சாதி ரீதியாக கருத்துகளை தெரிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

இதே பேட்டியில் தெலுங்கு நடிகையின் ஆடை குறித்தும் அவர் தெரிவித்த கருத்துக்களும் மேலும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றின் நிகழ்ச்சி பற்றி பேசும்போது, அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் நடிகை அனுசுயா பரத்வாஜ் என்பவரின் உடை குறித்து பேசினார். அதில் , ``அனுசுயா ஒரு திறமையான நடிகை. அவர் அழகான நடிகை மட்டுமல்ல, மிகவும் வெளிப்படையான நடிகையும்கூட. ஆனால் தனிப்பட்ட முறையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவர் ஆடை அணிவது எனக்குப் பிடிக்கவில்லை. அதே நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடிகை ரோஜா நன்றாக உடையணிந்துள்ளார், ஆனால் அனுசுயாவின் ஆடை எனக்கு பிடிக்கவில்லை" என்றார்.

அப்போது பேட்டி எடுத்த பத்திரிகையாளர், கோட்டாவிடம் டிரஸ்ஸிங் ஸ்டைல் ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று சொல்ல முயன்றார். இருப்பினும், நடிகர் கோட்டா சீனிவாச ராவ் அந்த கருத்தை ஏற்கவில்லை. தொடர்ந்து அவர் ஆடை சரியில்லை என்றே பேசினார். இதனைத் தொடர்ந்து தற்போது நெட்டிசன்கள் பலரும் நடிகர் கோட்டா சீனிவாச ராவுக்கு கருத்துக்கு எதிராக கடும் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

``இரண்டு திரையுலகில் மூத்த நடிகராக இருக்கும் ஒரு நபர் இப்படி மோசமான கருத்துக்களை தெரிவிக்கலாமா" என்று ரசிகர்கள் பலரும் பொங்கி வருகின்றனர்.

இதனிடையே, கோட்டா சீனிவாச ராவ் கருத்து குறித்து நடிகை அனுசுயா பேசியுள்ளார். ``இந்த அளவிற்கு நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது சிலர் வன்மமாக பேசியிருப்பது கவலை அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார். சிலர் அவர் மீது போலீஸில் புகார் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com