`தெற்கின் ஸ்வாரா பாஸ்கர்' சித்தார்த்: நெட்டிசன்கள் புகழாரமும் பின்னணியும்

`தெற்கின் ஸ்வாரா பாஸ்கர்' சித்தார்த்: நெட்டிசன்கள் புகழாரமும் பின்னணியும்
`தெற்கின் ஸ்வாரா பாஸ்கர்'  சித்தார்த்: நெட்டிசன்கள் புகழாரமும் பின்னணியும்

நடிகர் சித்தார்த், பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் இடையேயான டுவிட்டர் உரையாடல்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை தொடர்ச்சியாக முன் வைத்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைத்தால் இலவச தடுப்பூசி போடப்படும் என்ற ட்வீட்டை பகிர்ந்து "பாஜக எப்போது ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறியப்படுகிறதோ, அப்போதுதான் இந்த நாடும் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அர்த்தம்" என்று கருத்து தெரிவித்திருந்தார்.

அதேபோல், 'உ.பி மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதாக பொய் சொன்னால், சட்ட ரீதியிலான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்’ என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளதை குறிப்பிட்ட நடிகர் சித்தார்த், அதை ரீட்வீட் செய்து "ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொய் சொன்னால் முகத்தில் ஓங்கி ஒரு அறை விழும்” என கூறியிருந்தார்.

இதுபோல அவ்வப்போது பாஜக அரசு குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதற்கிடையே, தற்போது நெட்டிசன் ஒருவர், சித்தார்த்தை `தெற்கின் ஸ்வாரா பாஸ்கர்' என்று குறிப்பிட்டு இருந்தார். சித்தார்த்தை போலவே, ஸ்வாரா பாஸ்கரும் அரசுகளின் தவறுகளை கடுமையாக எதிர்த்து பேசிவருபவர் என்பதால் அவர் ஸ்வாரா பாஸ்கருடன் இணைத்து பேசப்பட்டார்.

இதையடுத்து புதிதாக ஒரு ட்வீட்டில், ஸ்வாரா பாஸ்கருக்கு டேக் செய்து நடிகர் சித்தார்த், "இந்தி பேசும் மக்கள் என்னை `தெற்கின் ஸ்வாரா பாஸ்கர்' என அழைக்கிறார்கள். அவர்களின் தெளிவுக்காக சொல்கிறேன். நான் எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் மகிழ்ச்சியுடன் ஸ்வாராவாக இருப்பதை மனதார ஏற்றுக்கொள்வேன். ஏனென்றால் ஸ்வாரா அவ்வளவு அருமையானவர் மற்றும் அழகானவர்" என்று குறிப்பிட்டு இருந்தார்.

சித்தார்த்தின் ட்வீட்டை கவனித்து அதற்கு பதிலளித்த ஸ்வாரா, "நீங்கள் இந்தியாவின் சித்தார்த், நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்!" என்று பதிவிட்டு இருந்தார். இவர்களின் இந்த உரையாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

ட்விட்டர் பயனர் ஒருவர், "நீங்கள் இருவரும் பாதுகாப்பாக இருங்கள், ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருங்கள், உங்களைப் போன்ற மில்லியன் கணக்கான குரல்களை நாங்கள் விரும்புகிறோம்!"" என்றும், மற்றொரு பயனர், "உங்களுக்கும் சித்தார்த்திற்கும் நேர்மை, தார்மீக தைரியம் மற்றும் மதவெறிக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்க முதுகெலும்பு உள்ளது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்!" என்று குறிப்பிட்டு இருந்தார். தொடர்ந்து இவர்களின் உரையாடல்கள் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com