‘பாகுபலி 3’ வெப் சீரிஸ் பணி நிறுத்தம்? - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

‘பாகுபலி 3’ வெப் சீரிஸ் பணி நிறுத்தம்? - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்

‘பாகுபலி 3’ வெப் சீரிஸ் பணி நிறுத்தம்? - ட்ரோல் செய்யும் ரசிகர்கள்
Published on

பிரபல ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த ‘பாகுபலி : பிஃபோர் தி பிகினிங்’ வெப் சீரிஸ், தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல தெலுங்கு இயக்குநரான எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரானா டகுபதி, நாசர், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் மற்றும் பலர் நடிப்பில், கடந்த 2015-ம் ஆண்டு வெளிவந்த ‘பாகுபலி: தி பிகினிங்’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. சரித்திர கதையம்சம் கொண்ட இந்தப்படத்தில் ராஜமாதாவாக ரம்யா கிருஷ்ணனும், கட்டப்பாவாக சத்யராஜும், தேவசேனாவாக அனுஷ்காவும் திறம்பட நடித்து படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருந்தனர். ஹுரோவாக பிரபாஸும், வில்லனாக ரானா டகுபதியும் மிரட்டியிருந்தனர். கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தது ‘பாகுபலி’ முதல் பாகம்.

இதையடுத்து இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ‘பாகுபலி : தி கன்குளுஷன்’ என்ற 2-ம் பாகம் வெளியானது. முதல் பாகத்தைவிட, இரண்டாம் பாகம் வசூலை வாரிகுவித்தது. உலக அளவில், தென்னிந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்தப் படம், சுமார் 1,800 கோடிக்கு மேல் வசூலும் செய்தது.

இதையடுத்து, பிரபல ஓ.டி.டி தளமான நெட்பிளிக்ஸ், ‘பாகுபலி’ படக்கதையை வெப் சீரிஸாக தயாரிக்க முன்வந்தது. ‘பாகுபலி’யில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்த ராஜமாதா சிவகாமிதேவி கதாபாத்திரத்தின், இளம் வயது வாழ்க்கையை மையப்படுத்தி, இந்தத் தொடரை உருவாக்குவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்றன.

அதன்படி, 'பாகுபலி - பிஃபோர் தி பிகினிங்' என்ற அந்த வெப் தொடரை தயாரிப்பதற்காக, ராஜமௌலி திரைக்கதை எழுத, தேவ கட்டா என்பவர் இயக்கினார். சிவகாமி தேவியின் இளம் வயது கதாபாத்திரத்தில் மிருணால் தாக்கூர் நடித்து வந்தார். ஐதராபாத்தில் இதற்காக 100 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட செட் அமைத்து 6 மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பும் நடந்தது.

சுமார் 9 எபிசோடுகளை கொண்ட இந்த வெப் சீரிஸ், ரூ. 200 கோடி பட்ஜெட்டில் தயாராகி வந்தது. நடிகர்கள் ராகுல் போஸ் மற்றும் அதுல் குல்கர்னி, அதன்பின்னர் மேலும் இரண்டு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சேர்க்கப்பட்டனர். போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளிலும் அதிகளவு பணம் செலவிடப்பட்டது. படத்தை எடிட் செய்தப்பிறகு, திருப்தியில்லாததால், இயக்குநர் தேவ கட்டாவை மாற்றிவிட்டு, அவருக்குப் பதிலாக குணால் தேஷ்முக் மற்றும் ரிபு தாஸ்குப்தா ஆகியோர் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும் புதிய நடிகர்களை நடிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டதால், வாமிகா கபி சிவகாமியாக நடிக்க முன்வந்தார். இதனால் மிருணால் தாக்கூர் தொடரில் இருந்து வெளியேறினார். மேலும், நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகின. அதன்படி, 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மீண்டும், ‘பாகுபலி 3’ பணிகளும் தொடங்கியது.

இந்நிலையில் மீண்டும் ‘பாகுபலி 3’ வெப் சீரிஸ்  நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பாகுபலி 3 பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், இரண்டாவதாக வந்த புதிய இயக்குநர்களான குணால் தேஷ்முக் மற்றும் ரிபு தாஸ்குப்தா ஆகியோரின் பணியும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருப்தி அளவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், தற்போதைக்கு அந்த வெப் சீரிஸே வேண்டாமென கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடருக்காக இதுவரை 150 கோடி வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளதுடன், 150 கோடி ரூபாய் செலவு செய்தது வீணாகியதால், நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com