தடையை தகர்த்தெறிந்த "நெஞ்சம் மறப்பதில்லை" - சொன்னபடி வருகிறார் செல்வராகவன்!
செல்வராகவன் இயக்கத்தில் நாளை வெளியாக உள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு விதிக்கபட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'நெஞ்சம் மறப்பதில்லை'. நீண்ட நாட்களாக பணவர்த்தனைப் பிரச்னை காரணமாக நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த நெஞ்சம் மறப்பதில்லை நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே இந்தப்படத்திற்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று கூறி ரேடியன்ஸ் மீடியா சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது.
அந்த மனுவில், “எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்காக எஸ்க்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பு நிறுவனம் தங்களிடம் ரூபாய் 2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கினர். அதில் 1 கோடியே 75 லட்சம் கடனை கொடுத்துவிட்டனர். மீதமுள்ள 1 கோடியே 24 லட்சம் ரூபாய் தரவேண்டியிருக்கிறது. ஆகையால் அந்தத்தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 2 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா படத்திற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் தரப்பில், 60 லட்சம் ரூபாயை திரும்பி செலுத்தி விட்டது. மீதமுள்ள 81 லட்சத்து 34 ஆயிரத்து 846 ரூபாயை வட்டியுடன் வருகின்ற ஜூலை 31க்குள் 12% வட்டியுடன் திருப்பி கொடுப்பதாக உத்தரவாதம் கொடுத்துள்ளது. ஆகையால் படத்தின் மீதான தடையை நீக்க வேண்டும்.” என்று குறிப்ப்டப்பட்டது. இதையடுத்து, 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்கு விதிக்கபட்ட இடைக்கால தடையை நீக்கி மனுவை முடித்துவைத்தி நீதிபதி உத்தரவிட்டார்.