“டே சும்மா இர்ர்ரா..” நெஞ்சம் மறப்பதில்லை செல்வராகவனின் டிபிகல் படமா?
தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குநர் என பெயர் எடுத்ததோடு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி வைத்திருப்பவர் செல்வராகவன். செல்வராகவனின் பிறந்தநாளான இன்று அவரது இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது.
இந்தப் படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டு பின்பு பல்வேறு காரணங்களால் தள்ளிச் சென்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. வேலைக்காரப் பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொலை செய்யும் முதலாளி. அவரை பழிவாங்கும் பேய். இதுதான் படத்தின் ஒன்லைன். பேய்படங்களுக்கே உண்டான ஆதிகால ஒன்லைன் தான் இது. 1960களில் எடுக்கப்பட வேண்டிய படம் என்று சொல்லத்தக்க கதைதான். படத்தின் கதை இதுதான் என முன்பு வெளியான டீசர் வீடியோக்களிலேயே நாம் கணித்துவிட முடிந்தது என்றாலும் செல்வராகவனின் இயக்கம் என்பதால் படத்தின் ட்ரீட்மெண்ட் வேறாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் ரசிகர்கள் அரங்கில் நுழைந்தனர்.
படத்தின் முதல் பாதியில் குறுக்குவழியில் முதலாளியான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பும், நகைச்சுவையும் கலகலப்பூட்டுகிறது. எஸ்.ஜே.சூர்யாவின் மகனை பார்த்துக் கொள்ளும் வேலைக்காக வருகிறார் மரியம் கதாபாத்திரத்தில் வரும் ரெஜினா. மரியம் அடிப்படையில் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்த பெண் அன்பும் பாசமும் காட்டி எஸ்.ஜே.சூர்யாவின் மகனை பராமறிக்கிறார். ஆனால் முதலாளியின் வக்கிரமான பார்வைக்குள் சிக்கும் மரியத்தின் முடிவு துயரமானது. இறந்த பிறகு ரெஜினா எஸ்.ஜே.சூர்யாவையும் அவரது நண்பர்களையும் எப்படி பழிதீர்த்தார் என்பது தான் வொர்கவுட் ஆகாத திரைக்கதை. ஏன் அப்படி சொல்லவேண்டுமென்றால் எந்த ஒரு பெரிய திருப்பங்களும் இல்லாமல் மெல்ல மெல்ல நகரும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக பேய் படங்களில் இப்படி இருக்காது.
ஆவி, பேய் படங்களுக்கு முக்கிய பலமாக இருப்பது இசையும் ஒளிப்பதிவுமே. இப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா தனது பாணியில் இசையமைத்திருக்கிறார். பல இடங்களில் மிரட்டலான பின்னணி இசையும், சில இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தாதது போல பின்னணி இசையும் இருந்தது. அதாவது கதையுடன் பொருந்தாததுபோல் இருந்தது. அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் ஏமாற்றம். கதை சாதாரணமானது என்றாலும் கூட எஸ்.ஜே.சூர்யா, அவரது மனைவியாக வரும் நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசாண்ட்ரா, சிறுவன், பார்வையற்றவராக வரும் தாத்தா என எல்லோரும் நன்றாக நடித்திருக்கின்றனர். குறிப்பாக ராம்சே கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா மிரட்டியிருக்கிறார். அவர்தான் கதையில் ரசிகர்களை என்கேஜ் ஆக வைத்திருக்கும் பெரிய டூல்.
பார்த்துப் பார்த்து சலித்த கதை, சுவாரஸ்யமற்ற திரைக்கதை, அலுப்பூட்டும் பாடல்கள் என நெஞ்சம் மறப்பதில்லை ஒரு பலவீனமான சினிமாவாக வந்திருக்கிறது. செல்வராகவனின் டச் என சில விசயங்களைச் சொல்லலாம். ரெஜினா அவ்வீட்டிற்கு வேலைக்காக நுழையும் போதே அவளுக்கு ஒரு மின்னல் போன்ற சக்தி எதிர்ப்பு தெரிவிக்கிறது. கண்ணாடியில் ஒரு கீறல் விழுகிறது. இது அந்த பங்களாவில் நடக்கும் முதல் கொலை அல்ல என்பதைச் சொல்கிறது. அது போலவே ஏசுநாதரை சிலுவையில் அறையும் நிகழ்வுடன் மரியம் என்ற கதாபாத்திரத்தை ஒப்பிட்டுக் காட்சி அமைத்திருப்பது வித்யாசமான கோணம். மரியத்தை ஏசுநாதரின் தாயான மரியத்துடன் ஒப்பிடும் வகையில் காட்டியுள்ளார்கள்.
செல்வராகவனின் படம் என்கிற எதிர்பார்ப்பு இல்லாமல் சென்று பார்த்தால் ஓரளவு அதிருப்தியில் இருந்து தப்பிக்கலாம். செல்வராகவனின் 7ஜி, மயக்கம் என்ன போன்ற படங்களை தியேட்டரில் பார்த்து முடித்த உடன் ஒரு முழுமை உணர்வு வரும் அது இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.