‘ஜென்டில்மேன் 2‘ படத்தின் கதாநாயகி நயன்தாரா தான்; ஆனால் அது அவர் அல்ல - படக்குழு

‘ஜென்டில்மேன் 2‘ படத்தின் கதாநாயகி நயன்தாரா தான்; ஆனால் அது அவர் அல்ல - படக்குழு

‘ஜென்டில்மேன் 2‘ படத்தின் கதாநாயகி நயன்தாரா தான்; ஆனால் அது அவர் அல்ல - படக்குழு

‘ஜென்டில்மேன் 2’ படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வலம் வந்த நிலையில், மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நயன்தாரா சக்ரவர்த்தி என்பவர் அறிமுகமாகவுள்ளார்.

கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடித்து கடந்த 1993-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஜென்டில்மேன்’. பிரம்மாண்டாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் மூலம் தான் ஷங்கர் இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இந்தப் படத்தில் கவுண்டமணி, மதுபாலா, மனோரம்மா, சுபஸ்ரீ, செந்தில், நம்பியார், வினீத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்த இந்தப்படம், மாபெரும் வெற்றியடைந்தது. இதையடுத்து, கே.டி.குஞ்சுமோன் - ஷங்கர் - ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில், பிரபுதேவா, மறைந்த பாடகர் எஸ்.பி.பி, நக்மா ஆகியோரின் நடிப்பில், கடந்த 1994-ல் வெளியான ‘காதலன்’ திரைப்படமும் பெரும் வெற்றிபெற்றது.

அதன்பிறகு கே.டி.குஞ்சுமோன் - ஷங்கர் கூட்டணி சில கருத்துவேறுபாடுகள் காரணமாக பிரிந்தது. அதன்பின்னர் கே.டி.குஞ்சுமோனுக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. பல வெற்றிப் படங்களை மிகவும் பிரம்மாண்டமாகத் தயாரித்தநிலையில், நஷ்டம் காரணமாக சினிமாத் துறையில் எந்தப் படங்களையும் தயாரிக்காமல் கே.டி.குஞ்சுமோன் ஒதுங்கியிருந்தார்.

ஜென்டில்மேன் படம் வெளியாகி, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கடந்தநிலையில், தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க திட்டமிட்டு கே.டி.குஞ்சுமோன் அதற்கான அறிவிப்பையும் சமீபத்தில் வெளியிட்டு இருந்தார். அப்போது இந்தப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக போட்டிகள் வைத்து, பின்னர் அவரே யார் என்று தெரிவித்தார் கே.டி.குஞ்சுமோன். அதன்படி இந்தப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி இசையமைக்க உள்ளார்.

மேலும், ஜென்டில்மேன் 2 படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், மலையாள நடிகையான நயன்தாரா சக்ரவர்த்தி நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள இவர், தற்போது 'ஜென்டில்மேன் 2' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். எனினும் ‘ஜெனடில்மேன் 2’ படத்தின் கதாநாயகன், இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com