விஜய்யின் 63வது படத்தில் ஒப்பந்தமாகினார் நயன்தாரா
அட்லி இயக்கத்தில் உருவாக இருக்கும் விஜய்யின் 63வது படத்தில் நடிகை நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி தீபாவளியன்று வெளியாகி இப்படம் வசூலை குவித்தது. சர்காரை தொடர்ந்து விஜய்யின் அடுத்தப்படத்தை அட்லீ இயக்குவார் என்று ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்த நிலையில் விஜய்யின் 63 வது படத்தை அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது.
இதுகுறித்து ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில், எங்கள் நிறுவனத்தின் 20வது திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாகவும், இது எங்களின் நீண்ட நாள் கனவு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘தளபதி63’ திரைப்படத்தின் இயக்குநர் அட்லி எனவும் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விஜய்யை வைத்து அட்லி கூட்டணியில் உருவான ‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியில் பெரும் வெற்றிப் பெற்றன. விஜய்யின் படத்தை அட்லி இயக்குவார் என்ற தகவல் வெளிவந்தாலும் நடிகையாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழும்பி கொண்டே இருந்தது. இந்நிலையில், விஜய்யின் 63வது படத்தில் நடிகையாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.