த்ரில்லரில் மிரட்டும் நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ ட்ரெய்லர்: ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகை நயன்தாராவின் ’நெற்றிக்கண்’ படத்தின் ட்ரெய்லரும், ஓடிடி ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம் என்று தற்போது வெளியாகி இருக்கும் ட்ரெய்லர் உணர்த்துகிறது.
ட்ரெய்லரில் சைக்கோ கில்லராக மிரட்டும் அஜ்மல், பெண்களைக் கடத்திக் கொலை செய்கிறார். 13-ஆவதாக நயன்தாராவை கடத்த திட்டமிடும்போது அவருக்கு ஏற்படும் விபத்து, பார்வைச் சவால் நயன்தாரா தனது நெற்றிக்கண்ணால் கொடூர சைக்கோ கில்லரான அஜ்மலை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை கதையின் முன்னோட்டமாக ட்ரெய்லர் உணர்த்துக்கிறது.
அதோடு, ”நான் உன்னை என்னல்லாம் பண்ணப்போறேங்கிறதை நீ பார்க்கப்போற பாரு.. அதை நினைச்சாதான்டா எனக்கு பாவமா இருக்கு” என்று நயன்தாரா பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. மேலும், ‘நெற்றிக்கண்’ வரும் ஆகஸ்ட் 13-ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவிருக்கிறது என்பதையும் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

