ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் நயன்தாரா. அவர் நடிப்பில் வெளியான‘அறம்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்திற்கும் ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது.
இதனையடுத்து, ‘லக்ஷ்மி’, ‘மா’ குறும்படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் கே.எம்.சர்ஜுன் இயக்கும் புதிய படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ‘அறம்’ படத்தைத் தயாரித்த கோட்டபாடி ஜே ராஜேஷ், கேஜேஆர் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ‘ஐரா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இரட்டை வேடத்தில் முதன்முறையாக இந்தப் படத்தில் நயன் நடிக்கிறார்.
ஒருவர் மிகவும் கருப்பாகவும், மற்றொருவர் மாநிறத்திலும் இருக்கின்றனர். இரண்டு முகங்களை பார்ப்பதற்கு மிகவும் அழுத்தமான உணர்வை பிரதிபலிப்பது போல் உள்ளது. ‘ஐரா’ என்ற படத்தின் பெயரின் மீதும் சிகப்பு நிறத்தில் ரத்தம் போல் தெளிக்கப்பட்டுள்ளது. ‘ரா’என்ற எழுத்தில் இரண்டு முகங்கள் தெரிகிறது. அதேபோல், ‘ஐரா’ என்ற எழுத்தின் ஒரு முனையில் பட்டாம்பூச்சிகள் பறப்பது போல் உள்ளது.
இந்தப் படத்தில், கலையரசன் மற்றும் யோகி பாபு இருவரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகிவருகிறது.