‘நட்பே துணை’ – திரைப் பார்வை

‘நட்பே துணை’ – திரைப் பார்வை

‘நட்பே துணை’ – திரைப் பார்வை
Published on

ஹாக்கி விளையாட்டை மையப்படுத்திய திரைப்படம் ‘நட்பே துணை’. 

இது ஹிப்ஹாப் ஆதியின் இரண்டாவது படம்.  படத்தை பார்த்திபன் தேசிங்கு இயக்கி இருக்கிறார். ஆனால் கிரியேட்டிவ் இயக்குநர் ஆதிதான். முதல் படத்தில் சொந்த வாழ்க்கையை கொஞ்சம் கற்பனை கலந்து படமாக்கிய இவர், இந்த முறை ஹாக்கி, செண்டிமெண்ட், நட்பு, ஜாலி என கலர்ஃபுல் ரங்கோலி போட முயன்றிருக்கிறார்.
 
ஹாக்கி விளையாட்டையும் மைதனாத்தையும் தங்கள் உயிராக நினைத்து வாழ்ந்து வருகிறார்கள் காரைக்கால் அரங்கநாதன் திடல் பகுதி மக்கள். 

அந்த மைதனாத்தில் ஒரு ஆலையை அமைக்க திட்டமிடுகிறது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். உள்ளூர் அமைச்சரும் கோடிக் கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு அதற்கு ஒப்புதல் வழங்குகிறார். அந்த நேரத்தில் திடீரென ஹாக்கி மட்டையை கையில் எடுத்து மிரட்டலான வெற்றியைக் கொடுத்து கிரவுண்டை காப்பாற்றுகிறார் ஆதி. இதைப் படிக்கும்போது எப்படி இருக்கிறதோ? படம் பார்க்கும்போதும் அப்படித்தான் இருக்கிறது.
 
ஆதி பிரான்சில் குடியேறும் எண்ணத்துடன் திரியும் ஜாலி இளைஞன் பிரபாகரன். ‘ஆத்தாடி என்ன உடம்பு’ என அறிமுகமாகும்போது, ‘அட!’ என ஆச்சர்யம் கொள்ள வைக்கிறார். பாண்டிச்சேரியில் எதேச்சையாய் சந்தித்த நாயகியை காரைக்காலில் திரும்பவும் சந்திக்க தொடங்குகிறது காதல் கேம். 

அதன்பிறகு, காதலிக்காக ஹாக்கி மட்டையை கையிலெடுப்பவர், ப்ளாஷ்பேக்கில் இந்திய அணி வீரராக அதிர்ச்சிக் கொடுக்கிறார். இடையில் வரும் நண்பர் மரணம் எல்லாம் விளையாட்டு சினிமாக்களுக்கே உரியது.

 நாயகி அனகா பெரியளவில் ஸ்கோப் இல்லாமல் அவ்வப்போது திரையில் வருகிறார். படத்தில் ரசிக்க வைப்பவர், இயக்குநர் கரு.பழனியப்பன். விளையாட்டுத்துறை அமைச்சர் அரிச்சந்திரனாக திருக்குறள் சொல்வது, சீரியஸ் காட்சிகளிலும் ஜாலியாய் கலாய்ப்பது, சமகால அரசியல் நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி பகடி செய்வது என ஸ்கோர் செய்திருக்கிறார்.
 
‘நட்பே துணை’ படத்தில் ஆர்.ஜே.விக்னேஷ், எருமசாணி விஜய், அரவிந்த், பிஜிலி ரமேஷ், ராஜ்மோகன் என ‘யு-டியூப் பிரபலங்கள்’ பலர் இருக்கிறார்கள். 

சில இடங்களில் சிலரின் காமெடி சிரிக்க வைக்கிறது. இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி‘ஆத்தாடி என்ன ஒடம்பு’ பாடலின் மூலம் படத்திற்கான ஜாலி மூடை உருவாக்குகிறார். அதே நேரம், பின்னணி இசை கொஞ்சம் அதிகமோ எனும் எண்ணமும் தோன்றுகிறது.

 ஹாக்கி விளையாட்டு படத்தின் கரு என்ற பிறகு, இடைவேளைக்கு முந்தையக் காட்சியில்தான் அதை தொடங்குகிறார்கள். 

அரங்கநாதனின் தியாக வரலாறோடு தொடங்கும் படம், பின்னர் ஹாக்கிக்கு வருவதற்கு ஏன் அவ்வளவு நேரம் எனத் தெரியவில்லை. அதேபோல், தொழில்முறை வீரர்களை எளிமையாக கையாள்வதும், எழுந்து நடக்க முடியாத ஆதி, சில நிமிடங்களில் மைதானத்திற்கு வந்து அதிரடி காட்டுவதும் திரைக்கதையின் நம்பகத் தன்மையைக் குறைக்கின்றன. 

‘ChakDe India’ திரைப்படமும் சில இடங்கில் எட்டிப் பார்க்கின்றது. இதில் எல்லாம் கவனம் செலுத்தி, திரைக்கதையில் இன்னும் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் ‘நட்பே துணை’ திரைப்படத்திற்கு நாங்கள் துணை எனக் கொண்டாடியிருப்பார்கள் ரசிகர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com