“எங்கள் குடும்பத்தை கண்டந்துண்டமாக்கியது கமீலாதான்” - கதறிய நாசரின் தம்பி
குடும்பத்தில் இருந்து என்னுடைய அண்ணனை பிரித்துவிட்டார் கமீலா என நாசரின் தம்பி ஜவஹர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னுடைய பெயர் ஜவஹர். நான் நாசரின் தம்பி. எனக்கு ஒரு தம்பியும் ஒரு மகனும் இருக்கிறார்கள். என் தம்பி மனவளர்ச்சி குன்றியவர். அவரால் தனக்கு தானே எந்த வேலையும் செய்து கொள்ள முடியாது. இதேபோல் என்னுடைய தாய்க்கு தற்போது கை உடைந்து முடியாமல் உள்ளார். அவருக்கும் அனைத்து வேலைகளும் நான்தான் பார்த்து கொள்கிறேன்.
கடந்த 10 வருடமாக இவர்களை பார்த்துக்கொள்வதுதான் எனக்கு வேலை. இதனால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன். பெற்றோரை நான் கைதிகளாக வைத்திருப்பதாக நாசர் செய்தி அனுப்பினார். நான் அவரிடம் ஏன் இவ்வாறு செய்தி அனுப்பினார் என்று கேட்டேன். ஆனால் அவர் என்னுடனான தொடர்பை துண்டித்து கொண்டார்.
இதுகுறித்து நடிகர் சிவக்குமாரிடம் புகார் தெரிவித்தேன். அவர் முதலில் நம்பவில்லை. பின் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்தார். அந்த நன்றியை மறக்கமாட்டேன். அதன்பின் நாசர் வந்து சென்றுகொண்டிருந்தார். நாசர் மிகவும் கீழ்தனமாக நடந்து கொள்கிறார். இதற்கு எல்லாம் காரணம் கமீலாதான். எங்கள் குடும்பத்தை கண்டந்துண்டமாக்கியது கமீலாதான். நாசர் ஒரு அப்பாவி. அவருக்கு முழு விஷயமும் தெரியாது. நாசர் சூட்டிங் சென்றுவிடுவார். கமீலாதான் அவருக்கு மேனேஜர். அவர் உங்க அம்மா வீட்டுக்கு போங்க, அவங்களை கவனித்து கொள்ளுங்கள் என்று சொல்லிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை.
என்னுடைய அம்மா அப்பா அவர்களுடைய பேரக் குழைந்தைகளை கூட பார்க்கவில்லை. இதுவரை இரண்டு முறை மட்டுமே
பார்த்திருப்பார். இந்தப் பிரச்னையை நடிகர் சங்கத்திற்கு எடுத்து சென்றேன். ஆனால் அங்கு எனக்கு ஒரு டீ கொடுத்து அனுப்பி விட்டார்கள். சிவக்குமாரை தவிர வேறு யாரும் இந்தப் பிரச்னை குறித்து கண்டு கொள்ளவில்லை.
என் தம்பி விஷயமாகத்தான் பேச விஷாலை பார்க்கச் சென்றேன். ஆனால் அவர் என்னைப் பார்க்க விரும்பவில்லை. கமல் கட்சியில் மத்திய சென்னை வேட்பாளராக கமீலா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டுக்கு என்ன செய்து விடுவார். மனதில் கொஞ்சமாவது இரக்க குணம் வேண்டும். அது கமீலாவிடம் உள்ளதா? அவ்வாறு இருந்தால் அவருடைய மாமனார் மாமியாரை ஏன் இவ்வாறு அவர் வைத்திருக்க வேண்டும்.
அவருடைய அம்மா அப்பாவை மட்டும் நல்லா வைத்திருக்கிறார். மீட்டிங்கில் நாசர் மிகவும் அற்புதமான மனிதராக பேசுவார். கடந்த 10 வருடங்களாக நான் சரியாக தூங்கவே இல்லை. எனக்கு ஒரே ஒரு ஆசை. ஒரு நாள் நான் நன்றாக தூங்க வேண்டும். ஆனால் அது வரவில்லை. ஏன் நாசர் என் குடும்பத்தில் பங்கெடுத்து கொள்ளவில்லை. நான் அரசியல் செய்யவில்லை. என் பிரச்னைக்கு தீர்வு வேண்டும்.
நாசரே எனக்கு உதவி செய்யாதபோது அரசியல்வாதிகள் எப்படி உதவி செய்வார்கள். எனக்கு தற்போது எந்த வருமானமும் இல்லை. 20 ஆயிரம் ரூபாய் வாடகை வருகிறது. அதை வைத்துதான் நான் பிழைப்பு நடத்துகிறேன். இன்றைக்கும் நான் நினைத்தால் பிரான்ஸ் சென்று நிறைய சம்பாதிக்க முடியும். ஆனால் என் தாயை விட்டு நான் செல்லமாட்டேன்.
ஏற்கனவே நான் பிரான்ஸில் மாதம் 2 லட்சம் ரூபாய் சம்பாதித்து வந்தவன்தான். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையென்றால் நாசரையே கேளுங்கள். நான் நடிகர் சங்கத்திற்குச் சென்று வந்த பிறகு நாசர் 25 ஆயிரம் என்னுடைய அம்மா செலவுக்காக கொடுத்தார். ஆனால் அதை எனது அம்மா பயன்படுத்தவே இல்லை. எங்கள் குடும்பத்தை நாசமாக்கிவிட்டு கமீலா பிரச்சாரம் செய்யப்போறார். வெற்றி பெற போகிறாராம். மக்கள் நல்ல சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.