ஓடிடி திரைப்பார்வை: ‘நரை எழுதும் சுயசரிதம்’ - இயக்குநராக ஜெயித்தாரா ‘ஜெய் பீம்’ மணிகண்டன்?

ஓடிடி திரைப்பார்வை: ‘நரை எழுதும் சுயசரிதம்’ - இயக்குநராக ஜெயித்தாரா ‘ஜெய் பீம்’ மணிகண்டன்?
ஓடிடி திரைப்பார்வை: ‘நரை எழுதும் சுயசரிதம்’ - இயக்குநராக ஜெயித்தாரா ‘ஜெய் பீம்’ மணிகண்டன்?

வேலையிலிருந்து ஓய்வு பெற்றதால் ’அவமான காஃபி’ குடிக்கும் முதியவர், வேலை கிடைக்காததால் வறுமையில் ’அவமான டீ’ குடிக்கும் இளைஞர். இருவரும் தி‘டீ’ரென்று சந்தித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்பதுதான் ’நரை எழுதும் சுயசரிதம்’ கதையின் ஒன்லைன்.

தனியார் ஏற்றுமதி நிறுவனத்தின் அதிகாரியான டெல்லி கணேஷ், காலத்திற்கு ஏற்றார்போல அப்டேட் ஆகாததால் ஓய்வுபெறுவதற்கு ஒரு வருடம் இருந்தாலும் கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்படுகிறார். அலுவலகம் மட்டுமல்லாமல் வீட்டிலும் அதிகாரம் செலுத்தி வந்தவர் வேலையிழப்புக்குப்பின், வேலைக்குப்போகும்போது சரியான நேரத்தில் வந்த ஒரு காஃபி கூட தாமதமாக கிடைக்கிறது. மனைவி, இரண்டு மகன்களிடம் அவர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஒருபுறம். சென்னையில் வேலை தேடும் இளைஞராக மணிகண்டன். சாப்பாட்டிற்குக்கூட வழியில்லாமல் டீயைக் குடித்தே உயிர் வாழ்ந்துகொண்டு கம்பெனி கம்பெனியாக ஏறி வெறுமையுடன் திரும்புகிறார். இப்படி ’வேலை இழந்த’ டெல்லி கணேஷ், ’வேலை தேடும்’ மணிகண்டன் இருவரும் சந்தித்துக்கொண்டால் இருவருக்கும் ஏற்படும் அப்டேட்டுகளே மீதிக்கதை.

ஆரம்பத்தில், திரைக்கதையும் முதியவரைப்போல ஸ்லோவாகத்தான் கடக்கிறது. இளைஞர் மணிகண்டன் வந்ததுமே கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ‘ஜெய் பீம்’ படத்தில் அப்பாவியாய் வந்த மணிகண்டன், நம் அப்பாக்களுக்காக இயக்குநராக இயக்கியிருக்கும் முதல்படம். காதல், கமர்ஷியலுடன் பயணிக்கும் இயக்குநர்களுக்கு மத்தியில் முதல் படத்தை முதியோர்களுக்காக எடுத்து படத்தைப் பார்க்கும் அப்பாக்கள் மட்டுமல்ல மகன்களின் மத்தியிலும் மணிகண்’டான்’னாய் மனதில் அமர்கிறார்.

வைத்தியநாதனாக டெல்லி கணேஷ். முதல் பாதியில் சிடு சிடு அப்பா + அதிகாரி என்று ரசிகர்களை கொஞ்சம் கடுப்பாக்குபவர், இரண்டாம் பாதியில் சிறப்பான நடிப்பால் கலகலக்க வைக்கிறார். அலுவலகத்தில் அப்டேட் ஆகாததால் ஏற்படும் விரக்தி, குடும்பத்தினருடன் கடிந்துகொள்ளுதல், பேத்தியுடன் ரகளை, மணிகண்டனுடனான நட்பு என நடிப்பில் ‘கில்லி’ கணேஷாக வலம் வருகிறார். படத்தில் நகைச்சுவை இல்லா குறையையும் அவரே தீர்த்து வைக்கிறார். ‘தாத்தா நீ லூசா’ என்று பேத்தி கேட்கும்போது டெல்லி கணேஷின் நடிப்பு இன்னும் பிடித்துப் போகிறது.

சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இப்படத்தினை ஷஷாங்க் வெண்ணெலகண்டி தயாரித்துள்ளார். ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளார்கள். மொத்தமே கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரப் படம்தான். பார்ப்பதற்கு குறும்படம் போல் இருந்தாலும் ஓய்வுபெறும் அப்பாக்களின் உளவியல் பிரச்னைகளை பெரும் படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் மணிகண்டன். ஆனால், முதல் பாதி முழுக்க அகம் சுளிக்கவைக்கும் திரைக்கதை இரண்டாம் பாதியில் முகம் மலரவைக்கிறது.

வயது ஆக ஆக அப்பாக்களுக்கும் மகன்களுக்குமான இடைவெளி ஏற்படத்தொடங்கி விடுகிறது. அந்த இடைவெளிக்கு காரணம், ’அப்டேட்’ ஆகாத அப்பாக்கள் மகன்களின் மனதிலிருந்து ’அவுட் டேட்’ ஆகிவிடுவார்கள் என்பதைச் சொல்லியுள்ளார். மகன் வயது மணிகண்டனிடம் நட்பு ஆவதற்குமுன், தன் மகன்களிடம் நண்பனாக பழகியிருந்தால் இப்படியெல்லாம் அப்பாக்கள் அப்டேட் ஆகாமல் இருந்திருக்கமாட்டார்கள்.

ஓய்வுக்குப்பின் குடும்பத்தினர் நடத்தும் விதத்தை மட்டுமே இறுதிவரை காட்டப்போகிறாரோ இயக்குநர் என்று அஞ்சி நடுங்கினால், அந்த சோகத்தையும் ஜாலியாக காட்டி இரண்டாம் பாதியில் ரசிக்க வைத்துவிடுகிறார். அதேபோல், மறுபாதியில் அப்பா தன்னை சூழ்நிலைக்கேற்றார்போல் மாற்றிக்கொண்டாலும் பிள்ளைகளாலும், குடும்பத்தினராலும் அதை திடீரென்று ஏற்றுக்கொள்ளமுடியவில்லை என்று மறுப்பதையும் காட்டி வேறு பாதையில் பயணிக்க வைத்துள்ளார்.

ஆண்ட்ராய்டு போன் அந்தளவுக்கு புழக்கத்தில் இல்லாத காலத்தில் கதை நடப்பதுபோல் காட்டியுள்ளார்கள். அதாவது, 10 வருடங்களுக்கு முன்பு நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வேலை தேடும் வறுமை இளைஞனாக கலங்கடித்துவிடுகிறார் மணிகண்டன். ’ஓட ஓட ஓட தூரம் குறையல.. பாட பாட பாட பாட்டும் முடியல’ பாடல் வரும் இடங்களிலெல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதுவும், தாடியை ஷேவ் செய்து ஷூவுடன் வரும் பளிச் மணிகண்டன் அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.

ஐந்தாறு நடிகர்கள், திரும்பத் திரும்ப வரும் வீட்டுக் காட்சிகள் கொஞ்சம் அலுப்பைத் தருகின்றன. மணிகண்டன், டெல்லி கணேஷைத் தவிர ’அவமான’ டீக்கடைக்காரர் மட்டுமே மனதில் நிற்கிறார். மற்ற கதாப்பாத்திரங்கள் மனதில் அமரவே இல்லை. இயக்குநராக மணிகண்டன் ஜெயித்திருக்கிறாரா என்றால், ’அவர் ஓட வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது’ என்றே சொல்லவேண்டும்.

- வினி சர்பனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com