`வார் 2' தோல்வி, ஆனா `லோகா' வெற்றி | விநியோகஸ்தர் வம்சி சொன்ன விஷயம்! | War 2 | Lokha | Naga Vamsi
ரவி தேஜா நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் `மாஸ் ஜாதரா'. இப்படத்தை தயாரிப்பாளர் நாக வம்சி தனது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இவர் சமீபத்தில் தெலுங்கில் விநியோகம் செய்த படங்கள் ஜூனியர் என் டி ஆர் - ஹ்ரித்திக் ரோஷன் நடித்த `வார் 2', கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்த `லோகா'. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் `வார் 2' ரிலீஸுக்கு முன்பு படம் பற்றி பெரிய பில்டப் கொடுத்து மேடையில் பேசியது மற்றும் லோகா படத்தின் வரவேற்பு குறித்தும் பேசி இருந்தார்.
அந்தப் பேட்டியில் "அந்த நாளில் நான் மிகவும் உற்சாகத்தில் இருந்தேன். ஆனால் நாம் தவறுகள் செய்யாமல் இருப்போமா, தவறு நடந்துவிட்டது. நானாக இருந்தாலும் என் டி ஆர் ஆக இருந்தாலும், ஆதித்யா சோப்ரா என்ற பெரிய மனிதரையும், யஷ் ராஜ் ஃபிலிம்ஸையும் நம்பினோம். இது நாங்கள் எடுத்த படம் இல்லை, ஆனால் அவர்களுடையது பெரிய நிறுவனம் என்ற போது நம்பினோம், எங்கள் கணிப்பு தவறிவிட்டது.
கமர்ஷியல் படங்கள் வழக்கமாக இருக்கிறது என்கிறார்கள். ஆனால் அதில் கூட காட்சிகள் சுவாரஸ்யமாக இல்லை என்றால் ஓடாது. இப்போது சங்கராந்தி (பொங்கல்), தசரா போன்ற பண்டிகை காலங்களில் வரும் கமர்ஷியல் படங்களில் எந்த குறை இருந்தாலும் பரவாயில்லை என்றும், மற்ற நாட்களில் படம் மிக நேர்த்தியான சினிமா வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அவ்வாறு எப்படி நடக்கும்? இன்னொரு உதாரணம் கூட சொல்கிறேன்.
லோகா படத்தை தெலுங்கில் நானே வெளியிட்டேன். ஒருவேளை லோகா படத்தை தெலுங்கில் எடுத்திருந்தால், பார்த்திருக்க மாட்டார்கள். படத்தில் நிறைய குறைகள் சொல்லி இருப்பார்கள். தெலுங்கு ரசிகர்கள் எப்போது எதை ரசிக்கிறார்கள், ஒதுக்குகிறார்கள் என்பது தெரியாத ஒரு நிலையில் இருக்கிறோம். லிட்டில் ஹார்ட்ஸ் என்ற ஒரு புதுமுகங்கள் நடித்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. அதனுடன் வெளியான படங்கள் எதுவும் அந்த வரவேற்பு பெறவில்லை. இப்போது இவர்கள் எதை பார்க்கணும் என்று எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை." என்றார்.