நட்பு, துரோகம்; மனித வாழ்வின் ரகசிய முகங்களை படம் பிடித்திருக்கும் ‘நடுவன்’ - திரைப்பார்வை

நட்பு, துரோகம்; மனித வாழ்வின் ரகசிய முகங்களை படம் பிடித்திருக்கும் ‘நடுவன்’ - திரைப்பார்வை

நட்பு, துரோகம்; மனித வாழ்வின் ரகசிய முகங்களை படம் பிடித்திருக்கும் ‘நடுவன்’ - திரைப்பார்வை
Published on

திரில்லர் கதைகளைப் பொறுத்தவரை புதிய கதையம்சம் என்பது இரண்டாம் பட்சம் தான் நமக்கு நன்கு பரிட்சயமான கதையாக இருந்தாலும் அதனை திரைக்கதை மூலம் எப்படி சுவாரஸ்யமாக வழங்கியிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் ரிசல்ட் அமையும். அது போலத்தான் நடுவன் எனும் இந்த சினிமாவும்.

பரத், அபர்ணா விநோத், கோகுல் ஆனந்த், ஜார்ஜ் மரியான், அருவி பாலா உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படமான நடுவன் சோனி லைவில் காணக் கிடைக்கிறது. இத்திரைப்படம் கொடைக்கானல் நிலப் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கிறது. கார்த்திக்காக நடித்திருக்கும் பரத் தனது நண்பருடன் சேர்ந்து தேயிலை தொழிற்சாலையொன்றை நடத்தி வருகிறார். எப்போதும் குடித்துக் கொண்டிருக்கும் நண்பரும் பார்ட்னருமான சிவா தனது நட்பிலும் சரி தொழிலிலும் சரி நேர்மையுடன் இல்லை. தூரத்து உறவுக்காரப் பையனான குரு இவர்களின் தொழிற்சாலையில் பணிக்கு அமர்த்தப்படுகிறார். குருவாக வரும் அருவி பாலாவிற்கு கார்த்திக் குடும்பத்தின் ரகசியமொன்று தற்செயலாக தெரிய வருகிறது. அதன் பிறகு அதனைச் சுற்றி நடக்கும் வன்முறைகளும் கொள்ளைச் சம்பவங்களும் துரோகங்களும் தான் படத்தின் திரைக்கதை.

இப்படத்தின் இயக்குநர் ஷாரங் இக்கதையினை நேரான திரைக்கதையாக எழுதியிருந்தால் சில குழப்பங்களைத் தவிர்த்திருக்கலாம். படத்தின் துவக்கத்தில் தரும் பில்டப்புகளுக்கு நியாயம் செய்வதாக படத்தின் நிறைவு அமையவில்லை. துரோகத்தின் பின்னனியும் கூட வழக்கமான காரணமாக இருக்கிறது. மதுபோதையில் குரு தன் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு விபத்தை ஏற்படுத்திவிடுகிறார். அதற்கு விலையாக பெரும்தொகையினைக் கேட்கிறார் காவல்துறை அதிகாரி. லாஜிக் இல்லாத இந்த கிளைக்கதை க்ளைமேக்ஸ் காட்சியுடன் இணைக்கப்படுவதால் கதை தன் மூலபலத்தை இழந்து நிற்கிறது.

இப்படத்தின் திரைக்கதையினை 6 பகுதிகளாக பிரித்துக் காண்பிக்கிறார் இயக்குநர். ஆனால் அது அவசியமற்ற ஒன்று. இடைச் சொறுகலாக அப்படியொரு அறிவிப்பு இல்லாமலேயே படம்தன் போக்கில் போயிருக்கலாம். யுவராஜின் ஒளிப்பதிவும் தரன் குமாரின் இசையும் கொஞ்சம் ஆறுதல். நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அருவி பாலா. ரீஎண்ட்ரிக்காக காத்திருக்கும் பரத்திற்கு நடுவனும் நல்வாய்ப்பாக அமையவில்லை.

அப்படி இப்படி திரைக்கதையை சுற்றிச் சுற்றி அமைத்திருந்தாலும் படம் பார்வையாளனை சோர்வடையச் செய்யவில்லை. இது இப்படத்தின் இன்னுமொரு பலம். க்ளைமேக்ஸில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் அடிக்கும் ஸ்டெண்ட் ரொம்பவே செயற்கை. அதன் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து காவல்துறை அதிகாரி தரும் விளக்கத்தில் துளியும் நம்பகத்தன்மையில்லை. நடுவன் மோசமும் அல்லாத சூப்பரும் அல்லாத ஒரு நடுநிலை திருப்தியினைத் தரும் சினிமாவாக அமைந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com