‘நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது’ - உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சங்கத் தேர்தல் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. இந்தத் தேர்தலை சென்னை உயர்நீதிமன்றம் செல்லாது என அறிவித்துள்ளது. இதற்கான தீர்ப்பை நீதிபதி கல்யாண சுந்தரம் இன்று வழங்கினார். நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிந்த பின் எடுத்த முடிவு என்பதாலும் அவர்கள் நியமித்த நீதிபதி பத்மநாபன் நடத்திய தேர்தல் என்பதாலும் அது செல்லாது எனத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மறுத்தேர்தல் முடியும் வரை சிறப்பு அதிகாரியாக கீதாவே சங்கத்தை நிர்வகிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சங்கத்திற்கு புதிய தேர்தல் 3 மாதத்தில் நடைபெறும் என்றும் புதிய உறுப்பினர்கள் பட்டியலை தயாரித்த பின்பு நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் புதிய தேர்தல் நடைபெறும் என்றும் கூறிய நீதிமன்றம், நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால், கார்த்தி, நாசர் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு குறித்து ஐசரி கணேசன் கூறும்போது, நடிகர் சங்கத் தீர்ப்பின் மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது என்றும் மறுதேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.