‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்டிய இயக்குநர் மிஷ்கின்
‘பாரம்’ படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கினின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
தேசிய விருது பெற்ற திரைப்படம் ‘பாரம்’. இதற்கான ஊடகச் சந்திப்பு கடந்த 12-ம் தேதி நடைபெற்றது. இதில் இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டார். அப்போது பாராட்டும் நோக்கத்தில் ‘தான் மதுப்பழக்கத்தை விட்டுவிட்டதாகவும் இப்போதும் அருந்தும் பழக்கம் இருந்திருந்தால் ‘பாரம்’ இயக்குநரின் காலில் போய் விழுந்து பாராட்டி இருப்பேன். இந்தப் படத்துக்குப் போஸ்டர் அடிக்க பணமில்லை என்றார்கள். ஆகையால், தனது சொந்த செலவில் போஸ்டர் அடித்து நானே ஒட்ட உள்ளேன்’ எனப் பேசியிருந்தார். மேலும் ‘பாரம்’ போன்ற நல்ல படங்களைத் தயாரிக்காததற்காக தான் வெட்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தப் படைப்புக்கு மரியாதை செய்வதற்கான அடையாளமாக இப்படத்தின் சுவரொட்டிகளை ஒட்ட விரும்புகிறேன் என மிஷ்கின் பேசியதைக் கேட்ட பலர் வழக்கமான மேடைப் பேச்சாகவே அதனை எடுத்துக் கொண்டனர். ஆனால் மிஷ்கின் தான் கூறியதைப் போலவே நேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்படி ஒரு காரியத்தை செய்துள்ளார். அவர் ‘பாரம்’ படத்தின் சுவரொட்டிகளை சொன்னதை போலவே சுவர்களில் ஒட்டியுள்ளார். அதைப் பார்த்த பொதுமக்கள் பலர் ஆச்சரியப்பட்டனர்.
ப்ரியா கிருஷ்ணாசுவாமி இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'பாரம்'. இது 66-வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.