நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ‘கெளரவ டாக்டர் பட்டம்’: நெகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட மனைவி
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது மைசூர் பல்கலைக்கழகம்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் கடந்த 17 ஆம் தேதி வெளியான ‘ஜேம்ஸ்’ வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ’ஜேம்ஸ்’ நான்கே நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனைப் படைத்துள்ளது. கர்நாடக தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாய், அவரது ரசிகர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ‘ஜேம்ஸ்’ படத்தின் வெளியீட்டுப் பணிகளின்போதே உடற்பயிற்சி செய்யும்போது கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் புனித் ராஜ்குமார் உயிரிழந்து நான்கு மாதங்கள் கடந்தாலும் இன்னும் அவரது நினைவிடம் மக்கள் கூட்டத்தால் நிரம்பிக்கொண்டுதான் இருக்கிறது. திரையில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாகவே வாழ்ந்திருப்பதால் கர்நாடக மக்களின் மனங்களில் பேரன்புக்குரிய அப்புவாய் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.
ஏழை குழந்தைகளின் கல்விக்கு பெரும் பங்காற்றியுள்ள புனித் ராஜ்குமாரை கெளரவிக்கும் விதமாக திரைத்துறையில், அவர் ஆற்றிய பங்களிப்பிற்கும் சமூக சேவைகளைப் போற்றும் விதமாகவும் மைசூர் பல்கலைக்கழகம் கடந்த மார்ச் 13 ஆம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருந்தது. அதற்கு கர்நாடக மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டும் ஒப்புதல் அளித்திருந்தார். இந்த நிலையில், இன்று மைசூர் பல்கலைக்கழகத்தின் 102 வது பட்டமளிப்பு விழாவில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி அதனைப் பெருமையுடனும் நெகிழ்ச்சியுடனும் பெற்றுக்கொண்டார். புனித் ராஜ்குமாரின் தந்தை மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாருக்கும் மைசூர் பல்கலைக் கழகம் கடந்த 1976 ஆம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.