ஆரஞ்சு மரத்துடன் பேசும் சிறுவன் - ’மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ’

ஆரஞ்சு மரத்துடன் பேசும் சிறுவன் - ’மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ’

ஆரஞ்சு மரத்துடன் பேசும் சிறுவன் - ’மை ஸ்வீட் ஆரஞ்ச் ட்ரீ’
Published on

இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தை மீது பெற்றோர்களின் கவனம் குறைவது இயல்பான ஒன்று.. ஆனால் அது தவறு. குழந்தைகள் தங்கள் மீதான கவன ஈர்ப்புக்காக எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்லக் கூடும். அம்மாவின் கவனத்தை பெற தங்களை, தாங்களே காயப்படுத்திக் கொள்ளக் கூடும். குழந்தைகள் ஒரு கண்ணாடிக் குடுவை போல. அவர்களை உடைத்து நொறுக்குவதும், நீர் நிரப்பி மீன் வளர்த்து மகிழ்வதும் நமது சாமர்த்தியம். 

இளைஞன் ஒருவன் கல்லறை ஒன்றின் மீது அமர்ந்து சிறு வயதில் தான் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகளை அசைபோடுவது போல துவங்குகிறது  “My Sweet Orange Tree” (2013). என்ற பிரேசில் நாட்டு சினிமா…

பிரேசிலில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வாழும் ஏழை குடும்பம் தான் எட்டு வயது சிறுவன் ’ஸிஸ்ஸே’வினுடையது. அவன் படு குறும்புக்காரன். மற்ற சிறுவர்களை காட்டிலும் கொஞ்சம் அதிகம் சுட்டி தான். தனது குடிகார தந்தையின் மீது வெறுப்பு கொள்கிறான். அவன் இயங்க நினைக்கும் உலகை அவனது தாய் தந்தையால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவன் ஒரு சிறந்த கதை சொல்லி. தன் கற்பனையில் பல ஆச்சர்யமூட்டும் கதைகளை உருவாக்குவான், ஆனால் கேட்க செவிகள் இல்லாததால் உடைந்து போகிறான். 

தேவாலயத்தில் ஏசுநாதர் முன் அமர்ந்து வேண்டும் காட்சியில் அச்சிறுவன் ”கிறுஸ்துமஸ் நாளில் தனது பிரிய தம்பி லுயிஸுக்கு” நல்ல பரிசுப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறான். உலகில் அப்போது அவனுக்கு ரொம்பவே பிடித்த ஒருவன் அவனது தம்பி மட்டும் தான். ஸிஸ்ஸே’விற்கு ஒரு ஆரஞ்சு மரம் அறிமுகமாகிறது. அந்த மரத்திற்கு ’பிங்கி’ என்று பெயர் சூட்டும் அவன் அந்த மரத்திடம் பேசுவான் கதைகள் சொல்வான். அவனுக்கு குதிரை சவாரி செய்யத்தோன்றும் போது அம்மரத்தின் கிளையில் அமர்ந்து குதிரை சவாரி செய்வது போல கற்பனை செய்வான்.

அக்கிராமத்தில் தனியாக தனது தோட்டத்து வீட்டில் வசித்து வரும் போர்ச்சுகல்’லை சேர்ந்த முதியவர் ’மணாவல்’ சிறுவன் ஸிஸ்ஸே’விற்கு நல்ல நண்பனாக கிடைக்கிறார். மணாவலிடம் ஒரு முறை சிறுவன் ஸிஸ்ஸே ”இன்று நான் சாகப் போகிறேன் என்னை இந்த உலகத்தில் யாருக்கும் பிடிக்கவில்லை. அப்பா அம்மா எல்லோரும் என்னை அடிக்கிறார்கள்” என்கிறான். அவனது வார்த்தைகளை கேட்டு பயந்து போன ‘மணாவல்’ அவனுக்கு குழந்தை மொழியிலேயே ”இப்படி எல்லாம் யோசிக்க கூடாது. வாழ்க்கையை தைரியாமாக வாழவேண்டும்” என அறிவுரை சொல்லி அனுப்புகிறார். ஆனாலும் அவனது வார்த்தைகள் அவரை உறங்கவிடவில்லை. மணாவல் அச் சிறுவனின் வீட்டு வாசலில் அந்த இரவு காவலிருக்கிறார். காரணம் அவனது வீட்டின் முன் இரயில் தண்டவாளம் உள்ளது. 

சாகசப் பிரியரான மணாவல், ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை ஒரு முறை தனது காரில் வேகமாக கடந்ததை ‘ஸிஸ்ஸே’ பார்த்திருக்கிறான். அவனுக்கு அந்த காரின் பின்பக்கம் தொற்றிக் கொண்டு பயணிக்க வேண்டும் என ஆசை அப்படி ஒருநாள் முயற்சித்த சிறுவன் ‘ஸிஸ்ஸே’ ‘மணாலிடம்’ அடி வாங்கியிருக்கிறான். அப்படி துவங்கியது தான் அவர்களின் உறவு. 

சிறுவர்களுக்கு எதன் மீது நாயக பிம்பம் உருவாகிறதோ அவர்கள் அதுவாகவே மாற முயற்சி செய்கிறார்கள். அவர்களது கற்பனை சற்று விபரீதமானாலும் அது அவர்களின் உயிரையே கூட பறித்துவிடும் அபாயமுண்டு. அதனால் தான் குழந்தைகளுக்கு நாம் எதை அறிமுகம் செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. அவ்வூரில் தெருப்பாடகன் ஒருவன் பாட்டு பாடி சி.டி’களை விற்கிறான். சிறுவன் ‘ஸிஸ்ஸே*’ அவனுடன் சேர்ந்து சி.டி விற்கிறான். அதில் கிடைக்கும் சிறிய பணத்தையும் அவனது குடிகார தந்தை பறித்துக் கொள்கிறார். அச்செயல் அவனை மேலும் தனிமைக்குள் தள்ளிவிடுகிறது.

‘மணால்’ “நீங்கள் தனியாகத் தானே வாழ்கிறீர்கள்…? உங்கள் மகள் போர்ச்சுக்கல்லில் தானே இருக்கிறாள்…? இரண்டு பறவைகளுடன் தனியாக வாழும் நீங்கள் ஏன் என்னை வளர்க்கக் கூடாது…?” என்ற சிறுவனின் கேள்வியில் கண்கலங்குகிறார் ‘மணால்’. அவருக்கு அவனது ஆசை மகிழ்ச்சியை கொடுத்தாலும் நடைமுறை சாத்தியம் என்ன என்பதை அறிந்த வயதல்லவா அவருக்கு. 

பெரியவனானதும் தன்னை தினமும் அடித்து துன்புறுத்தும் தந்தையை கொல்ல வேண்டும். கார் வாங்க வேண்டும் நகரத்துக்கு போக வேண்டும். அங்கு தான் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். என ஏதேதோ கற்பனைகள் ஸிஸ்ஸேவுக்கு. இவை எல்லாம் அவன் வாழும் சூழல் தான் உருவாக்கித் தந்திருக்கிறது என்கிறார் இயக்குநர் ‘மார்க்கோஸ் பர்ன்ஸ்டியன்’. குழந்தைகளுக்குள் நாம் திணிக்க முயலும் உலகின் மீது கேள்விகள் எழுப்புகிறார் அவர்.

ஸிஸ்ஸே தனது ப்ரிய ஆரஞ்சு மரத்தின் அடியில் படுத்து தனியாக மரத்துடன் பேசும் காட்சி, உண்மையில் குழந்தைகளுக்கு செவி கொடுக்காத பெரியவர்களுக்கு அவமானத்தையும் குற்ற உணர்ச்சியினையும் கொடுக்கும். ஆற்றில் மீன் பிடிப்பது, உண்டியலில் காசு சேர்ப்பது, இரயில், மரம், ஏரோபிளைன் விளையாட்டு, தோட்டத்தில் மாம்பழம் திருடுவது என ’ ஸிஸ்ஸே’வை முன்னிருத்தி நம் குழந்தைமையை நமக்கு மறு அறிமுகம் செய்கிறார் இயக்குநர். 

இப்போது காட்சி இளைஞன் அமர்ந்திருக்கும் கல்லறையை அடைகிறது. அந்த இளைஞன் தான் ஸிஸ்ஸே. அந்த கல்லறை அவனது பிரிய நண்பர் மணாவ’லுடையது. ஆம் அவர் அடிக்கடி ஆளில்லா இரயில்வே கிராஸிங்கை கடப்பார் இல்லையா..? அப்படி ஒரு நாளில் நடந்த இரயில் விபத்தில் அவர் இறந்தும் போனார். அது ‘ஸிஸ்ஸே’ வின் மனதை ரொம்பவே பாதித்திருக்கிறது. இப்போது ஸிஸ்ஸேஒரு நாவலாசிரியர் அவன் தனது நாவலின் கடைசி அத்தியாயத்தை மணாவலின் கல்லறையில் அமர்ந்து எழுதி முடிக்கிறான்.

ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, படப்பிடிப்புகான களத்தேர்வு என எல்லாவற்றிலும் இயக்குநர் ’மார்க்கோஸ் பர்ன்ஸ்டிய’னின் குழு பெருங் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். பிரேசிலின் சிறந்த குழந்தைகள் திரைப் படத்துக்கான விருது, கோல்டன் ஸ்லிப்பர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளது ’மை ஸ்வீட் ஆரஞ்சு ட்ரீ’.

1920ல் பிறந்த பிரேசில் நாட்டு எழுத்தாளர் ’ஜோஸ் மரோ’ எழுதிய ‘My Sweet Orange Tree’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இத் திரைப்படத்திற்கும் அதே பெயர் தான். 1968ல் வெளியான இந்த நாவல் பிரேசிலில் துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கான பாடத்திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது.  

‘ஸிஸ்ஸே’ வை போல எல்லா குழந்தைகளுக்கும் ‘மணாவல்’ கிடைக்கமாட்டார்கள். நீங்கள் தான் குழந்தைகளின் முதல் நண்பன்.

குழந்தைகளுக்கு இந்த உலகை ஆள்காட்டி விரலால் அல்லாமல் அன்பால் அறிமுகம் செய்து வையுங்கள். உங்கள் குழந்தைகளை உங்களுடன் சுதந்திரமாக பேச அனுமதிப்பதன் மூலம் நீங்கள் உங்கள் குரலுக்கு தான் வலு சேர்க்கின்றீர்கள். உங்கள் குழந்தை உங்களின் பிரதி என்பதை ஒருபோதும் மறவாதிருங்கள். குழந்தைகள் நம் காதில் ஏதோ சொல்ல வருகிறார்கள். நாம் செய்ய வேண்டியது ஒன்றுதான். அவர்களை பேச அனுமதிப்பது. யார் கண்டது உங்க குழந்தையும் ’ஸிஸ்ஸே’வை போல நல்ல கதை சொல்லியாகக் கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com