
25 ஆண்டுகால திரை வாழ்க்கை குறித்து நடிகர் அருண் விஜய் சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ள திரைப்படம் ‘மாஃபியா’. இந்தப் படம் வரும் 21 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் அருண் விஜய் உடன் பிரசன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா புரொடக்ஷன் தயாரித்துள்ளது. கார்த்திக் நரேனின் முந்தைய படங்கள் அதிகம் பேசப்பட்டதால் இந்தப் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றியது குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஊடக சந்திப்பு நடந்தது. அதில், படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய நடிகர் அருண் விஜய், திரைப்படத்தில் நடிக்க வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், “திரைத்துறையில் எனது 25 ஆண்டுகால பயணம் மிகவும் சவாலானது. நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறேன். மேலும், பல ஏற்றத் தாழ்வுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தும் எனது குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களின் மகத்தான ஆதரவினால் சமாளிக்க முடிந்தது” என்றார்.
மேலும், “என்னால் சிறந்ததைத் தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. ‘மாஃபியா’ ஒரு தனித்துவமான சதித்திட்டத்தை வைத்து எனது கதாபாத்திரம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கதையில் ஒரு தீவிர தன்மை இருக்கும். இந்தப் படத்தின் முழு பாராட்டும் கார்த்திக் நரேனுக்கே சொந்தம். அவர் இந்த ஸ்கிரிப்ட்டில் மிகச் சிறந்த வேலையைச் செய்தார். ஆகவே எந்த மன அழுத்தமும் இல்லாமல் இந்தப் படத்தில் எங்களால் வேலை செய்ய முடிந்தது. மிக எளிதாக இருந்தது.
இந்த படத்தில் பிரசன்னா ஒரு சிறந்த வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அவரது கேரக்டர் மிகவும் கவனிக்கப்படும். அதிகம் பாராட்டப்படும் என்று நான் நம்புகிறேன். பிரியா பவானி சங்கர் ஒரு திறமையான நடிகை. இந்த நாட்களில் தமிழ்ப் பேசும் கதாநாயகிகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம் இருக்கிறது.
மேலும், அவர் இந்தப் படத்திற்காக முழுமையாக மாறியிருக்கிறார். நான் கார்த்திக் நரேனிடம் சில வீடியோ ரஷ்களை என்னால் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, இறுதி காட்சிகளை முடிக்கும் வரை காத்திருந்து பார்க்கும்படி அவர் என்னை வற்புறுத்தினார். ஒரு முழுமையான திரை அனுபவத்தைத் தர இந்த குழு நிறைய உழைத்துள்ளது” என்றார்.