கோவை மாணவி வன்கொடுமை | "முதலில், அந்தப் பெண் தவறு; இரண்டாவது.." - ஜேம்ஸ் வசந்தன் சர்ச்சை கருத்து!
கோவையில் மாணவி மீது நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மூன்று குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், மாணவியின் மீதுதான் முதல் தவறு என கருத்து தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் விவாதத்திற்குரியதாக மாறியுள்ளது.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவி தனது ஆண் நண்பருடன் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி இரவு பீளமேடு விமான நிலையம் பின்புறம் உள்ள ஒரு காலி இடத்தில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியால் கார் கண்ணாடியை உடைத்து மாணவியின் ஆண் நண்பரை தாக்கியுள்ளனர். அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்த நிலையில், மாணவியை வலுக்கட்டாயமாக 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடியது..
இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், 7 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்தனர்.. இந்தசூழலில் கோவை துடியலூர் அருகே பதுங்கியிருந்த 3 குற்றவாளிகளையும் போலீஸார் நேற்று இரவு சுட்டுப்பிடித்தனர்..
இந்தவிவகாரம் தொடர்ந்து பேசுபொருளாக இருந்துவரும் நிலையில், கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மீதுதான் முதல் தவறு என கூறியுள்ளார்..
முதலில், அந்தப் பெண் தவறு..
கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டிருக்கும் ஜேம்ஸ் வசந்தன், “கோவை மாணவி விவகாரம்
1. கோவை விமானநிலையத்தின் பின்புறம் இந்தக் கொடுமை நிகழ்ந்ததாக அந்த இடத்தைத் தொலைக்காட்சியில் காண்பித்தபோது அந்தப் பெண் மீதும், அவளது ஆண் நண்பன் மீதும் கோபம் வந்தது. பகலிலேயே ஆள்நடமாட்டமற்ற திகிலான அந்த இடத்திற்கு இரவு நேரத்தில் அவர்கள் போனது தவறு.
2. முதலில், அந்தப் பெண் தவறு.
இவ்வளவு தனிமையான இடத்திற்கு எப்படிப் போகலாம்?
பகலில் ஊருக்கு நடுவில் தெருவில் நடந்துபோகும்போதே கைபேசியைப் பிடுங்கிகொண்டு ஓடுவதும், கழுத்துச் சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடுவதும் சாதாரணமாகிவிட்ட காலத்தில் இந்த இடத்துக்கு, இரவில், எப்படி ஒருவனுடன் செல்லலாம்?
3. இரண்டாவது, அந்தப் பையன் தவறு.
அவ்வளவு தனிமையான இடத்துக்கு இரவில் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு போனால், அவளைக் காப்பாற்றக்கூடிய திராணி இருக்கவேண்டும். நிச்சயமாக அந்த இடத்தை இவன்தான் அவளுக்கு அறிமுகப்படுத்தி இருக்கமுடியும். இப்போது அவள் இழந்ததை அவன் மீட்டுத்தர முடியுமா?
4. அந்த மூன்று முட்டாள்களுக்கும் ஆளுக்கு மூன்று நிமிடங்கள் ஒரு அரைகுறை இன்பம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்களது வாழ்க்கையே முடிந்துபோனதல்லாவா இப்போது! இனி அழுது பயனில்லை.
5. ஒருவரையொருவர் குற்றம்சாட்டிக் கொள்வார்கள். மனம்நொந்து அழுவார்கள். பெற்றோரையும் மற்றோரையும் நேருக்குநேர் பார்க்கமுடியாமல் குனியும் அவர்கள் தலை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிமிராது.
6. இதைப்போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர் யாரும் சிக்காமல் தப்பிக்கவேமுடியாது. மாட்டித்தான் ஆவார்கள்.
7. இதை வாசிக்கிறவரில் இதைப்போன்ற வக்கிர சிந்தனையுள்ளவனும் இருப்பாய். எதிர்காலத்தில் இதைப்போல எதையாவது செய்துவிட்டு வருத்தப்படாதே. பெண்ணின் நலனைக்குறித்து கூட நீ சிந்திக்கவேண்டாம். உன் நலனுக்காக இதைப்போன்ற செயல்களில் ஈடுபடாதே. நீ சிறையில் தனிமையில் வருந்தி வருந்தி அழுதாலும், உன் வாழ்க்கை உனக்குத் திரும்பக் கிடைக்காது.
8. தவறான நண்பனைத் தவிர்” என பதிவிட்டுள்ளார்..
ஜேம்ஸ் வசந்தன் கருத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு!
ஜேம்ஸ் வசந்தன் கருத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கருத்திட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக மாற்ற முயற்சிப்பது மோசமான விஷயமாகும். அதுவும் ஜேம்ஸ் வசந்தன் பெண்ணே முதல் குற்றவாளி என்பது போல் சொல்கிறார்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் மீதுதான் தவறு என சிலர் நரேட்டிங் செட் செய்கிறார்களே என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு கோவை காவல் ஆணையர் ஆ.சரவண சுந்தர் பதில் அளிக்கையில், "VALUE JUDGEMENT பாஸ் பண்ணாதீங்க. எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது" என்று கூறியிருந்தார்.
குற்றம் செய்தவர்களுக்கு விரைந்து தண்டனை அளிப்பதை உறுதி செய்வதும் மேற்கொண்டு இதுபோன்ற கொடூரங்கள் நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்வதும் ஆளுகின்ற அரசுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் உள்ள கடமை ஆகும்.

