தேன்குழைத்த இசையால் ரசிகர்களை வசீகரித்த 'மேஸ்ட்ரோ'

தேன்குழைத்த இசையால் ரசிகர்களை வசீகரித்த 'மேஸ்ட்ரோ'
தேன்குழைத்த இசையால் ரசிகர்களை வசீகரித்த 'மேஸ்ட்ரோ'

பத்ம விபூஷண் என்ற மாவிருதால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் இசைஞானி இளையராஜா, இசையில் தேன்குழைத்து காற்றில் கலக்கவிட்டவர்.

தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் புறப்பட்டு, பண்டிதர்கள் முதல் பாமரர்கள் வரை  உலகை தம்மிசையால் வசீகரித்தவர். எந்த தலைமுறையும் எக்காலத்திலும் ரசிக்கும் இசையை படைத்தவர். ராகதேவன், மேஸ்ட்ரோ, இசைஞானி என போற்றப்படும் இளையராஜாவின் இசைப்பயணம் 1976-ஆம் ஆண்டு வெளியான அன்னக்கிளியில் தொடங்கியது. அந்த படத்தில் மேற்கத்திய இசையில் தமிழ் மரபை புகுத்தி அவர் உருவாக்கிய மச்சானைப் பாத்திங்களா ? என்ற பாடல் பட்டிதொட்டியெங்கும் இன்றும் காற்றில் கலந்து கிடக்கிறது.

இதன்பின்னர், தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, மராத்தி என பன்மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தன் இசை பிரவாகத்தை பரவவிட்டிருக்கிறார் இளையராஜா.

ராயல் ஃபில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டராவில் சிம்பொனி இசையமைத்து மேஸ்ட்ரோ என போற்றப்பட்டிருக்கிறார். பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தை உருவாக்கி தந்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இசை ரசிகர்களுக்கு புதிய உணர்வை ஏற்படுத்திய HOW TO NAME IT என்ற இசைத் தொகுப்பையும் வெளியிட்டு இசை ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் இளையராஜா.

கீதாஞ்சலி என்ற தமிழ்ப் பக்தி இசைத் தொகுப்பினையும், மூகாம்பிகை என்ற கன்னட பக்தி இசைத் தொகுப்பையும் வெளியிட்டவர். திரை இசையில் தித்திப்பை கூட்டியது மட்டுமின்றி, ஆதி சங்கரர் எழுதிய மீனாட்சி ஸ்தோத்திரம் உள்ளிட்ட ஏராளமான பக்தி இசைக்கும் இசையமைத்திருக்கிறார் இந்த இசைராஜா.

1988 தமிழ்நாடு அரசின் கலைமாமணி, 2010-ஆம் ஆண்டு பத்ம பூஷன், 2012-ஆம் ஆண்டு சங்கித நாடக அகாடமி என பல்வேறு விருதுகளால் ஏற்கனவே அலங்கரிக்கப்பட்டவருக்கு இப்போது மற்றொரு மணிமகுடம். சாகர சங்கமம், சிந்துபைரவி, ருத்ர வீணா, பழசி ராஜா ஆகிய திரைப்படங்களுக்காக தேசிய விருதுகளை வென்றவர்.

16 வயதினிலே, நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கரகாட்டக்காரன் உள்ளிட்ட படங்களுக்காக மாநில அரசின் ஏராள விருதுகளை அள்ளியவர் இளையராஜா.

சம்மோஹனம், காலாபாணி, கள்ளு கொண்டொரு பொண்ணு ஆகிய மலையாள மொழி திரைப்படங்களில் தன் தென்னல் இசைவண்ணத்தை தீட்டி அம்மாநில அரசின் விருதுகளை வென்றிருக்கிறார். இளையராஜா என்னும் இசைக்கடலில் மற்றொரு விருது பத்ம விபூஷனாக இப்போது சங்கமித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com