அது ஒட்டுமொத்த ரசிகர்களின் கருத்து: ஏ.ஆர்.முருகதாஸ்
’தேசிய விருது தொடர்பாக நான் சொன்ன கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கருத்து’ என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அக்ஷய் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்த் திரைப்படமாக ‘ஜோக்கர்’ தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவுக்கு ஏழாவது முறையாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ’தேசிய விருதில் நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே தெரிகிறது, பாரபட்சமாக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் மீண்டும் அந்த சர்ச்சைக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
‘தேசிய விருது தொடர்பாக நான் சொன்ன கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்தல்ல. அது ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கருத்து. இதுபற்றி விவாதிப்பதை விட்டுவிட்டு உண்மையை வெளியே கொண்டு வாருங்கள்’ என்று கூறியுள்ளார்.