நடிகை அட்ரஸ் தெரியவில்லை: பிக்பாஸுக்கு சம்மன் அனுப்பிய போலீஸ்!
போதை பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் நடிகை முமைத்கானின் அட்ரஸ் தெரியாததால் அவர் கலந்துகொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் தொடர்பாக, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கெல்வின் என்பவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்தார். போலீசார் பியூஸின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் ஏராளமான நடிகர், நடிகைகள் எண்கள் இருந்தன. இந்த விவகாரத்தில் நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக அழைப்பு விடுத்திருந்தனர்.
மற்ற நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீசார், முமைத்கானுக்கு எங்கு சம்மன் அனுப்ப என்று குழம்பினர். ஏனென்றால், அவரது வீடு மும்பையில் இருக்கிறது. இதையடுத்து தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த நிகழ்ச்சியை நடத்துபவர்களை தொடர்பு கொண்டு வரும் 27-ம் தேதி அவரை ஆஜராக சொல்லும்படி சம்மன் அனுப்பினர். முமைத்கான் அன்று கண்டிப்பாக ஆஜராவார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.