“சினிமாவை விமர்சித்த பெரியாரே கலந்து கொண்டு படத்தை பாராட்டினார்” - நடிகர் சிவகுமார்

“சினிமாவை விமர்சித்த பெரியாரே கலந்து கொண்டு படத்தை பாராட்டினார்” - நடிகர் சிவகுமார்
“சினிமாவை விமர்சித்த பெரியாரே கலந்து கொண்டு படத்தை பாராட்டினார்” - நடிகர் சிவகுமார்

முக்தா ஃபிலிம்ஸின் 60ஆவது ஆண்டு வைர விழா சென்னை நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் மிக பழமையான நிறுவனம் முக்தா ஃபிலிம்ஸ். இதன் 60 ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜி.கே. வாசன் கலந்து இந்நிறுவனத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நினைவுக் கேடயங்கள் வழங்கி கவுரவித்தார். இதில் பேசிய நடிகர் சிவகுமார்,“1954 இல் 'அந்தநாள்' படம் எடுத்தபோது அதில் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957இல் அவர் ‘முதலாளி’ என்ற படம் எடுத்தார். அதில் வரும் 'ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே' பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. அதில்தான் தேவிகா அறிமுகமானார். அந்தப் படத்தை நான் எட்டாவது படிக்கும்போது பார்த்தவன். அதற்குப் பிறகு 12 வது முடித்துவிட்டு, ஓவியக் கல்லூரியில் படித்தேன். அதன்பின் சினிமாவுக்கு வந்தபோது அதே தேவிகா எனக்கு ஜோடியாக நடித்தார்.

‘இந்தப் பையனா ஹீரோ?’ என்று என்னை அவர் பார்த்தது என் நினைவில் இன்னும் இருக்கிறது. 1961இல் முக்தா, சொந்தக் கம்பெனி தொடங்கினார். இதில் ஜெமினி கணேசன் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அவர் முக்தா பிலிம்ஸின் ஆரம்ப காலத்தில் ஆதரவாக இருந்தவர் என்பதை மறக்க முடியாது. ஏ.ஜி.எஸ்ஆபீஸில் வேலை பார்த்து வந்த கே.பாலச்சந்தர், ‘லாஸ் ஆப் பே’யில் நிறைய லீவ் போட்டுவிட்டு சினிமாவில் சம்பளம் இல்லாமல் ஈடுபட்டார். அப்படி வந்த அவர் முக்தா நிறுவனத்துக்காக 'பூஜைக்கு வந்த மலர்' என்ற படத்திற்கு வசனம் எழுதினார். சினிமாவை நம்பி வேலையை விடுவதா? சினிமாவை நம்பலாமா என்று குடும்ப நிலைமையை நினைத்து கவலையாக இருந்தார். முக்தா வீட்டிலிருந்து மாதம் 500 ரூபாய் வரும். அதனால் வீடு நிம்மதி அடைந்தது. அப்படி கே.பிக்கு தைரியம் கொடுத்தது முக்தா நிறுவனம்.

‘சூரியகாந்தி’ என ஒரு படம் எடுத்தார்கள். அதில் கதாநாயகன் முத்துராமன். ஜெயலலிதா நடித்த படம். இந்தப் படத்தின் நூறாவது நாள் விழாவில், எப்போதும் சினிமாவை வெறுக்கும், சினிமாவை விமர்சிக்கக் கூடிய பெரியார் கலந்து கொண்டு சிறப்பித்தார். அது பெரிய பெருமை. இந்த நிறுவனத்தில் சிவாஜி 11 படங்கள் நடித்தார். ரஜினி ஒரு படத்தில் நடித்துள்ளார். கமல் இரண்டு படங்களில் நடித்தார். நான் இரண்டு படங்களில் நடித்தேன். சினிமாவில் சொன்ன சொல்லை யாரும் காப்பாற்றுவது இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் சினிமாவில் மூன்று பேர் விதிவிலக்காக இருந்தார்கள். ஒன்று; மாடர்ன் தியேட்டர்ஸ், இரண்டு; சின்னப்ப தேவரின் தேவர் பிலிம்ஸ், மூன்றாவது முக்தா பிலிம்ஸ் நிறுவனம்” என்றார்.

இந்த விழாவில் பழம்பெரும் நடிகைகள் செளகார் ஜானகி, வாணிஸ்ரீ, சங்கீதா, சச்சு, எஸ்.என். லட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com