'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம்

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது.
'மிஸ்டர் லோக்கல்' பட சம்பள பாக்கி விவகாரம்: சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் சமரசம்

மிஸ்டர் லோக்கல் படத்தின் சம்பள பாக்கி தொடர்பான விவகாரத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கில் மத்தியஸ்த பேச்சுவார்த்தை மூலம் சமரசம் எட்டப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படத்தை தயாரிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு, 15 கோடி ரூபாய் சம்பளம் பேசியதாக தெரிகிறது.

2019ஆம் ஆண்டு மே மாதமே படம் வெளியான நிலையில், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுக்கப்பட்டு, 4 கோடி ரூபாய் பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பள பாக்கியை தர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினரும் சமரசம் ஏற்படுத்தி கொள்வதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரனை மத்தியஸ்தராக நியமித்து உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சார்பில் இரு தரப்புக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்து, அதற்கான மனு அளிக்கப்பட்டது. இதன்மூலம் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com