யஷுக்கு நல்ல Combackஆக அமைந்ததா டாக்ஸிக்? | Toxic Review | Yash | Nayanthara
யஷுக்கு நல்ல Combackஆக அமைந்ததா டாக்ஸிக்? (1.5 / 5)
கேங்ஸ்டர் ராயாவின் வளர்ச்சியும், வீழ்ச்சியுமே டாக்ஸிக்!
ராயா (யஷ்) அவரது அக்கா கங்கா (நயன்தாரா) பல கஷ்டங்களை கடந்து வளர்க்கிறார்கள். கோவாவை கட்டுக்குள் வைத்திருக்கும் சால்வடாரின் தம்பியால் தங்களின் தந்தை கொலை செய்யப்பட்டதால் அதற்கு பழிவாங்க வருகின்றனர். சால்வடாருக்கும் இவர்களின் துணிச்சல் பிடித்துப் போக, அவர்களை தன்னுடைய போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு பயன்படுத்த துவங்குகிறார். அந்த கும்பலில் ராயா, கங்கா முக்கியமான நபர்களாக மாறுகிறார்கள். தன் மகள் ரெபேக்கா (தாரா) மற்றும் தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தையும் ராயாவிடம் ஒப்படைக்க தயாராகிறார் சால்வடார். இந்த வேளையில் அதே ஊருக்கு சர்க்கஸ் போட வரும் நாடியாவை (க்யாரா அத்வானி) பார்த்ததும் காதல் கொள்கிறார். ராஜ்ஜியத்தை பெற கல்யாணமா? மனது விரும்பும் காதலியா? என்ற கேள்வி வரும் போது ராயா எடுக்கும் முடிவு என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதே டாக்ஸிக் பட மீதிக்கதை.
இந்தப் படத்துக்கு என தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கும் உலகத்தை நம்பும் படி திரையில் கொண்டு வந்திருக்கிறார் கீது மோகன் தாஸ். அதில் ஆக்ஷன், அதிரடியான மேக்கிங் என ஆச்சர்யப்பட வைக்கிறார். யஷ் வழக்கம் போல் தனது மாஸ் நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆரோஷம் + எமோஷானல் காட்சிகளில் மிரட்டுகிறார். ஆனால் இன்னும் ராக்கி பாய் ஹேங்ஓவர் தெளியவில்லை என்பது போல அதே டயலாக் மாட்டுலேஷன். டிக்கெட் என்ற இன்னொரு பாத்திரத்தில் இன்னும் மாறுபட்ட நடிப்பை காட்ட முயற்சிக்கிறார், ஆனால் அது அத்தனை ரசிக்கும் படி இல்லை. நயன்தாராவுக்கு மிகவும் சீரியஸான வேடம். தம்பியை காக்க எந்த எல்லைக்கும் போகும் நபராக கவனிக்க வைக்கிறார். ஹூமா குரேஷிக்கு ஒரு அழுத்தமான ரோல், அதனை சிறப்பாக நடித்திருக்கிறார். ஒரு கொலை செய்யும் காட்சியில் மிக சிறப்பு. க்யாரா அத்வானிக்கு மிகவும் முக்கியமான ரோல். சீரியஸ், ரொமான்ஸ், சோகம் என ஒவ்வொரு காட்சியிலும் நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். இவர்கள் தவிர தாரா, ருக்மினி வசந்தும் வந்து போகிறார்கள். அவர்களுக்கு பெரிய அழுத்தம் ஏதும் இல்லை.
தொழில்நுட்ப ரீதியாக ராஜீவ் ரவி ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய அளவில் உதவி இருக்கிறது. ஸ்டைலீஸ் ஃபிரேம், வித விதமான கோணங்கள் என படத்தை சுவாரஸ்யமாக்குகிறார். ரவி பஸ்ரூர் பின்னணி இசை படத்தின் மாஸ் மொமாண்ட்ஸ்க்கு வலு சேர்க்கிறது. படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கபட்டிருக்கும் விதம் இன்னொரு ப்ளஸ். ஒரு கேங்ஸ்டர் குழு, அதில் ஒருவனின் வளர்ச்சி, அதில் நடக்கும் சதிகள் என கதை அளவில் பல விஷயங்களை படத்தில் வைத்திருந்த விதம் சிறப்பு.
இந்தப் படத்தின் குறைகள் என சொல்வதென்றால், படத்தில் கொஞ்சமும் எமோஷனல் கநெக்ட் சுத்தமாக இல்லை என்பது தான். படத்தில் ஹீரோவின் ஒவ்வொரு முடிவுகளும் உணர்ச்சி சார்ந்து தான் இருக்கிறது. ஆனால் பார்வையாளர்களுக்கு அந்த உணர்வில் தாக்கம் ஏற்படவில்லை என்பதால் படத்தில் என்ன நடந்தாலும் சுவாரஸ்யம் இல்லை. ஹீரோவுக்கு என்ன பிரச்சனை என்பது கடைசியில் சொல்லப்பட்டாலும், அது அவ்வளவு அழுத்தமாக இல்லை. எனவே அது மற்றும் ஒரு காட்சியாக கடந்து போகிறது. ராயா பாத்திரத்தின் உளவியல் சிக்கல் படத்தில் எங்கும் வெளிப்படவே இல்லை.
படத்தின் வசனங்கள் எல்லாம் மிக மட்டமாக இருப்பது ஒருபுறம், அதனை தமிழில் மொழி பெயர்த்திருப்பது இன்னும் மோசம். தேவையே இல்லாமல் எல்லாவற்றுக்கும் ஒரு தத்துவம் சொல்வது, எதுகை மோனையாக பேசுவது என கடுப்பேற்றுகிறார்கள். படத்தின் இரண்டாம் பாதி எல்லாம் மிகவும் பொறுமையை சோதிக்கும்படி தான் சொல்கிறது. வித்தியாசமான எடிட்ஸ், ஸ்டைலான மேக்கிங் மட்டுமே போதும் என நினைத்து, படத்தின் கதை மற்றும் எமோஷானில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் படமே ஒரு ட்ரோல் மெட்டீரியல் போல மாறிவிடுகிறது. கிட்டத்தட்ட KGF க்கு ஒரு Spoof போல தான் படம் இருக்கிறது. கேங்ஸ்டர் ஒருவனின் தொழிலில் அடையும் வளர்ச்சியும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவனின் வீழ்ச்சியும் தான் படத்தின் களம். ஆனால் அதில் எந்த உணர்வு ரீதியான ஆழமும் இல்லாமல் படமாக்கப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் படத்தின் ஸ்டைலில் செலுத்திய கவனத்தை, கதையில் செலுத்தி இருந்தால் சிறப்பான ஆக்ஷன் படமாக இருந்திருக்கும்.

