\
Venkatesh Maha's Venkatesh Maha
VenkateshRao Bahadur

சினிமா ரசிகர்களுக்கான ட்ரீட் `ராவ் பகதூர்' | Rao Bahadur Review | Venkatesh Maha | Sathya Dev

சமூகத்தில் நிலவும் சமமின்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர் வெங்கடேஷ் மகா.
Published on
சினிமா ரசிகர்களுக்கான ட்ரீட் `ராவ் பகதூர்'(3.5 / 5)

ஒரு சந்தேகத்தால் நிம்மதி இழந்து அலையும் ஒருவனின் கதையே `ராவ் பகதூர்'

ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவர் ராவ் பகதூர் (சத்ய தேவ்). இப்போது தன் மரணப்படுக்கையில் இருக்கிறார். நிறைய குடித்ததனால், கேன்சர் வந்து எப்போது வேண்டுமானாலும் இறந்துபோகலாம் என்ற நிலையில் இருக்கும் ராவ் பகதூர், அதிர்ச்சிகரமாக சாதாரணமாக எழுந்து நடமாடுகிறார். அவர் உயிரைக் கையில் பிடித்தவாறு இருக்க இன்னொரு காரணம், சில காலமாய் அவரை வாட்டி வதைக்கும் ஒரு சந்தேகம்.

Rao Bahadur Review
Rao Bahadur Review

இயல்பில் ராவ் நல்லவர் என்றாலும்கூட, கடந்தகாலங்களில் தன் குடும்ப பாரம்பரியத்தின் பொருட்டு சில தவறுகளைச் செய்திருக்கிறார். அதில் ஏற்பட்ட கோபம் காரணமாக ராவின் மனைவி ரேணுகா (தீபா தாமஸ்) யாருடனும் பேசாமல் எட்டு ஆண்டுகளாக ஒரே அறையில் அடைந்து கிடைக்கிறார். ராவுக்கு இருக்கும் ஒரே தோழமை அவரது நண்பர் டாக்டர் ஆச்சாரி (விகாஷ்). ராவ் பகதூர் வாழ்வில் நடந்தது என்ன? அவருக்கு இருக்கும் சந்தேகம் என்ன? இதுவெல்லாம்தான் ராவ் பகதூர் மீதிக்கதை.

Venkatesh Maha's Venkatesh Maha
எப்படி இருக்கிறது `இதயம் முரளி'யின் ஒரு தலை ராகம்? | Idhayam Murali Review | Atharvaa

சமூகத்தில் நிலவும் சமமின்மை குறித்த கேள்விகளை எழுப்புகிறார் இயக்குநர் வெங்கடேஷ் மகா. பகுத்தறிவோடு சிந்திக்கும் ஒருவரின் மூளையில்கூட பரம்பரை, பாரம்பரியம் என்ற பெயரில் வீண் பெருமிதம் சேர்த்து மூளைcசலவை செய்யப்படும் சமூக எதார்த்தத்தை மிகவும் அழுத்தமாகச் சொல்லி இருக்கிறார்.

Rao Bahadur
Rao Bahadur

இப்படத்தின் மிகப்பெரிய பலம் ராவ் பகதூர் வேடத்தில் நடித்துள்ள சத்ய தேவ். வெவ்வேறு வயதில், வெவ்வேறு மனநிலைகளை வெளிப்படுத்தும் பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றி இருக்கிறார். நடிப்பு, குரல், உடல் மொழி என அந்தப் பாத்திரமாகவே மாறி முழுமூச்சாக ராவ் பகதூரை நம் கண்முன் காட்டுகிறார். மருத்துவர் ஆச்சாரியாக வரும் விகாஷ் நடிப்பும் அத்தனை சிறப்பு. மனதுக்குள் புதைத்து வைத்திருக்கும் ஒரு ரகசியத்தைப் பாதுகாத்து சுமக்கும் பாத்திரம்.

நண்பனைவிட்டுக் கொடுக்கவோ, அவன் கொடுமைகளைச் சகித்துக் கொள்ளவோ முடியாமல் அவரின் தவிப்பு திரையில் தெரிகிறது. மனைவி ரேணுகாவாக வரும் தீபா தாமஸ் துவக்கத்தில் ஒளிமிகுந்த துள்ளலான ஒரு பெண்ணாகத் தோன்றி பின் பெரும் இருளில் சிக்கக் கொள்ளும் உணர்ச்சிகளை அற்புதமாகக் கொடுத்திருக்கிறார். மூத்த மகனான வரும் ப்ராணய், இளைய மகனாக மாஸ்டர் கிரண் இருவரும் சிறப்பு.

Rao Bahadur Review
Rao Bahadur Review

எல்லோரும் சமம் என மனிதர்கள் நினைக்காதவரை இங்கு எதுவும் மாறாது என்று சொல்லும் ஒருவன், எப்படி அதற்கு முற்றிலும் நேர் எதிராக மாறுகிறான் என்ற கதையின் வழியாக சாதிய, வர்க்க பேதங்கள், அதிகாரம் எப்படி ஒருவனை மாற்றும், பிறப்பு, ரத்தம், வம்சம் என்ற அரசியல் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது படம்.

கார்த்திக் பார்மர் ஒளிப்பதிவு, சமரன் சாய் இசை போன்றவை படத்தின் தரத்தை பல மடங்கு கூட்டுகிறது. விதவிதமான கோணங்கள், ம்யூசிகள் படம்போல பாடல்களை இடையில் கொண்டுவந்தது என படத்தை சுவாரஸ்யப்படுத்துகிறார்கள். இப்படத்தின் குறை எனச் சொல்வதென்றால், ஒரு விஷயத்தை நன்கு புரியவைத்த பின்னரும், அதனை விளக்கிச் சொல்வது கொஞ்சம் அயர்ச்சியைத் தரலாம். ஆனால், அந்தக் காட்சிகளையும் மிக ரசனையாகக் கொடுத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில், ஓர் அற்புதமான அனுபவத்தைக் கொடுக்கும் சிறப்பான சினிமா இந்த `ராவ் பகதூர்'. சினிமா விரும்பிகள் தவறவிடக் கூடாத படம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com