Until Dawn | வீடியோ கேம் டூ சினிமா.. செத்து செத்து விளையாடுவோமா..?
Until Dawn(3 / 5)
ஐந்து நண்பர்கள் கொடூர வில்லனிடம் மாட்டிக்கொள்ள, விடிவதற்குள் தப்பித்தார்களா இல்லையா என்பதே Until Dawn படத்தின் ஒன்லைன்.
தன் தங்கை மெலனி காணாமல் போய்விட, அவரை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என முடிவெடுக்கிறார் மெலனியின் அக்கா க்ளோவர். காணாமல் போன தங்கை சென்ற இடத்துக்கு நண்பர்களை அழைத்துச் செல்கிறார் க்ளோவர். விடாது மழை துரத்த, ஐவரும் தப்பித்து ஒரு வீட்டுக்குள் நுழைகிறார்கள். எல்லோரும் வீட்டை சுற்றிப் பார்க்க , கண்ணிமைக்கும் நேரத்தில் ஐவரையும் ஒரு முகமூடி அணிந்த மனிதன் கொடூரமாக கொலை செய்கிறான். 'மாநாடு' ஸ்டைலில் ஐவரும் மீண்டும் பிழைக்கிறார்கள். அவர்கள் ஒரு லூப்புக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது அதற்கு பின்பு தான் அவர்களுக்கு தெரிகிறது. லூப்பில் இருந்து தப்பித்தார்களா இல்லையா ; யார் அந்த வில்லன் ; க்ளோவர் தன் தங்கையை கண்டுபிடித்தாரா என்பதை த்ரில்லராய் சொல்லியிருக்கிறார் இயக்குநர் டேவிட் சேண்ட்பெர்க்.
2015ம் ஆண்டு சோனி பிளே ஸ்டேஷனில் வெளியான வீடியோ கேம் தான் until dawn. வெளியான போது சக்கைப் போடு போட்ட கேமை, ' மானே தேனே' போட்டு சினிமாவாக மாற்றியிருக்கிறது சோனி நிறுவனம். Lights Out படம் மூலம் பிரபலமானவர் இயக்குநர் டேவிட் சேண்ட்பெர்க். படம் பயங்கர ஹிட் அடிக்க, Annabelle: Creation வாய்ப்புக் கிடைத்தது. ஹாரர் சினிமாவாக எடுத்துக்கொண்டிருந்தவருக்கு சட்டென Shazam! வாய்ப்புக் கிடைக்க, அதிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். Until Dawn படத்தில் காமெடி, ஹாரர் , எமோசன் என எல்லாம் கலந்து கலவையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றபடி சிறப்பாக செய்துகொடுத்திருக்கிறார்.
' இந்த மாதிரி நிறைய படம் வந்திருக்கு' என ஒரு நபர் சொல்ல , இன்னொருவரோ, " ஆனா, இதுல செத்தா புதுசு புதுசா வில்லன் வர்றாங்களே" என பதில் சொல்ல, " அப்ப இது வேற படம் தான்" என படத்துக்குள்ளேயே படத்தை நக்கலடித்திருக்கிறார்கள். புதுப்புது வில்லன்கள், புது புது லொக்கேசன் என நம்மை போரடிக்க வைத்துவிடாமல் லூப்புக்குள் சுவாரஸ்யத்தை சேர்த்திருக்கிறார்கள். அதே சமயம், சில காட்சிகள் பழைய படங்களை நினைவு படுத்தாமல் இல்லை. அதே போல் வில்லனுக்கான பின் கதையில் எந்தவித அழுத்தமும் இல்லை. அதனாலேயே ' என்ன என்னமோ சொல்றியேண்ணே' லெவலில் அந்த காட்சிகளை டீல் செய்ய வேண்டியதிருக்கிறது.
' நண்பேண்டா' என முடிவெடுக்கும் நண்பர்கள் போன்ற விஷயங்களுக்காகவும் சரி லூப்புக்குள் முடிந்தளவு சுவாரஸ்யத்தை இணைத்ததற்காகவும் நிச்சயம் இந்த Until Dawnஐ விசிட் செய்யலாம். ஒரே நபர்கள் மீண்டும் மீண்டும் வித்தியாசமாக கொலை செய்யப்படுகிறார்கள் என்பதால், சில கொலைகள் Rated ரகமாக இருக்கின்றன. அதனால் சிறுவர்கள் தவிர்த்தல் நலம்.