Tourist Family Review | நல்லார் ஒருவர் உளரேல்..!
Tourist Family(3.5 / 5)
ஸ்ரீலங்காவில் இருந்து இந்தியாவுக்கு தஞ்சம் புகும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை.
தர்மதாஸ் (சசிக்குமார்) - வசந்தி (சிம்ரன்) தம்பதி தங்களது மகன்களுடன் இலங்கையிலிருந்து சட்டத்துக்குப் புறம்பாக இந்தியா வருகிறார்கள். ராமேஸ்வரம் வந்தடையும் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் குடி வைக்கிறார் சிம்ரனின் அண்ணன் பிரகாஷ் (யோகிபாபு). ஒரு பக்கம் இலங்கையில் இருந்து வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இக்குடும்பத்துக்கு, இன்னொரு பக்கம் ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைக்கு. இந்த இரு சவால்களும் ஒன்றுக்கொன்று எப்படி சம்பந்தப்படுகிறது? அதனால் என்ன பிரச்சனை வெடிக்கிறது? அதை அந்தக் குடும்பம் எப்படி சமாளித்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தின் மிகப்பெரிய பலம் எமோஷனலாகவும் - ஹுயூமராகவும் நம்மை கவர்வதுதான். படம் துவங்கி முதல் காட்சியில் "குடும்பமா சேர்ந்து மீன் பிடிக்க வந்து, வழி தவறி இங்க வந்துட்டோம்" என சொல்வதில் ஹுயூமரும், ஆகாஷ் என்ற பெயரை வைத்து எமோஷனும், மறு காட்சியிலேயே அதையும் காமெடி ஆக்குவது என அழகான ட்ரீட்மென்டில் அசத்தியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவிந்த். ' ஆதார் கார்டுல அழகா இருக்கேன்னு ஆச்சர்யமா பாக்காதே, அது ஃபேக் ஆதார்' என நக்கலடிப்பது முதல் பல இடங்களில் வசனங்களின் மூலம் ரசிக்க வைத்திருக்கிறார். கஸ்டடியில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்தும் அசிஸ்டண்ட் கமிஷ்னருக்கு பல்வான் சிங் என பெயர் வைத்தது ஸ்மார்ட் சாய்ஸ்.
நடிப்பு பொறுத்தவரை சசிக்குமார் எமோஷன் - ஹூமர் என இரண்டு மோடிலும் அசத்துகிறார். இன்னும் சொல்லப்போனால் ஹூமரை விட எமோஷன் காட்சிகளில் ஹெவியாக ஈர்க்கிறார். குறிப்பாக ஒரு இறுதிசடங்கு காட்சி, வேலை கிடைத்ததும் கார் ஓனரை அணைக்க செல்லும் காட்சி என நெகிழ்வும், மகிழ்வும் சேர்க்கிறார். சசிக்குமார் அட்டகாசமான ஒரு நடிகரை இப்படத்தில் வெளிக்காட்டியிருக்கிறார். சசி எமோஷனில் கவர்ந்ததால் ஹுயூமரில் அட்டகாச மீட்டர் பிடித்திருக்கிறார் சிம்ரன். "அண்ணாக்கும் கோஃபி", ஒன்னும் நடக்கல ஒன்ரை வருஷம் கழிச்சு நீதான் நடந்த" என ஒரு பன்ச்சையும் மிஸ் செய்யாமல் மாஸ் காட்டுகிறார். ஆவேஷம் படத்தில் கவர்ந்த மிதுன் ஜெய் ஷங்கர் தமிழிலும் நல்ல அறிமுகம். கனமான காட்சிகளையும், இலகுவான சூழலையும் அழகாக பிரதிபலிக்கிறார். அதிலும் சசிகுமாருக்கு, இவருக்கும் இடையே நடக்கும் கொதிப்பான உரையாடலில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் சூப்பர்ஸ்டார் சுட்டிப் பையன் கமலேஷ் தான். குறும்பு காட்சிகள், ஓணம் பண்டிகைக்கு போடும் கெட்டப், சர்ச்சில் அப்பா போட்டோ வைக்க வேண்டும் என தீர்மானமாக செல்வது என ஒவ்வொரு காட்சியிலும் சிக்சரும், பவுண்ட்ரியும் பறக்கவிடுகிறார். இலங்கைத் தமிழை வலிந்து பேசும் எந்த அவசியமும் எடுத்துக் கொள்ளாமல், அதே நேரம் அந்த உணர்வும் படத்தில் இருக்கும் படி பார்த்துக் கொண்டது சூப்பர் பேலன்ஸிங்.
இது அன்பைப் பற்றி பேசும் படம் என்பதால் படம் நெடுகிலும் அன்பின் தூரல் நில்லாமல் பொழிகிறது. யாரிடமும் பேசாமல் மனைவியிடம் மட்டும் அன்பை காட்டும் ஒரு கணவர், நல்ல குணம் எல்லாம் உள்ளே வைத்துக் கொண்டு சிடு சிடுவென இருக்கும் எதிர்வீட்டுக்காரர், குறை சொல்ல மட்டும் கூடும் ஏரியா வாசிகள் என அத்தனை பேரிடமும் மறைந்திருக்கும் மனிதம் வெளிப்படும் தருணம், படத்தில் அலாதியாக காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. சின்ன கதாப்பாத்திரத்தில் வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார் ரமேஷ் திலக்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு மிக எதார்த்தமான ஒரு சூழலில் கதை நடப்பதை போன்ற உணர்வை கொடுக்கிறது. படத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து, அதே சமயம் வள வள காட்சிகள் ஏதும் இல்லாமல் நச் எனக் கொடுத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் பரத் விக்ரமன். ஷான் பின்னணி இசை படத்தின் உணர்வுகளை அழகாக கடத்துகிறது. முகை மழை பாடல் அத்தனை இதம்.
படத்தின் குறைகளாக பார்த்தால், சசிக்குமார் குடும்பம், அவர்கள் அந்த நகர் மக்களுடன் பழகுவது எவ்வளவு இயல்பாக இருக்கிறதோ, அதற்கு நேர்மாறாக இருக்கிறது காவல் துறை சார்ந்த காட்சிகள். திடீரென நிகழும் ஒரு குண்டு வெடிப்பு, தொலைந்து போன நாய் என இயல்பாக இல்லாமல், செயற்கைத் தனமாக, மிக வசதியாக எழுதப்பட்ட விதத்திலேயே அவை நகர்கிறது. அவற்றை இன்னும் அழுத்தமாக கொடுத்திருந்தால், அக்குடும்பத்திற்கு வரும் ஆபத்தை நாம் இன்னும் கொஞ்சம் பதற்றத்துடன் அணுகி இருப்போம். ஒட்டுமொத்த குடும்பமுமே முழு வாக்கியத்தையும் தமிழில் பேசிவிட்டு, கடைசி வார்த்தையில் மட்டும் ஈழத்தமிழுக்கு ஷிப்ஃட் ஆவது போல் பேசியிருப்பது துருத்திக்கொண்டு தெரிகிறது. அதே போல், எல்லோருமே நல்லவர்கள் என்னும் அளவுக்கு மாறிப்போவது ஃபேன்டஸி ஃபீலைத் தந்தாலும், நடந்தா நல்லாத்தான்பா இருக்கும் என தோன்றும் இடத்தில் வென்றுவிடுகிறார் இயக்குநர் அபிஷான் ஜீவிந்த்.
மொத்தத்தில் நம்மை நெகிழ வைத்து, அழ வைத்து நிறைய சிரிக்கவும் வைக்கும் ஒரு படமாக பளிச் என கவர்கிறது இந்த டூரிஸ்ட் ஃபேமிலி.