THUNDERBOLTS REVIEW | ஓ இவுக தான் அந்த புது ஆட்டக்காரங்களா..!
THUNDERBOLTS REVIEW(3 / 5)
ஒரு மிஷனுக்காக செல்லும் நான்கு அஸாஸின்கள் அடுத்தடுத்து என்னவாக மாறுகிறார்கள் என்பதே மார்வெல்லின் தண்டர்போல்ட்ஸ் படத்தின் ஒன்லைன்.
CIA இயக்குநரான வேலன்டினா நான்கு ஆன்டி ஹீரோக்களுக்கு ஒரு பெரிய அசைன்மென்ட் தருகிறார். அதுவொரு Death Trap என்பதை அறியாமல் நால்வரும் உள்ளே செல்கிறார்கள். நால்வர் மூவர் ஆனதும் அவர்கள் சுதாரித்துக்கொள்ள, ' பொட்டிக்குள்ள போன பாப் இங்க வந்துட்டேன்' கதியாக அங்கே இன்னொருவர் இருக்கிறார்.யார் இந்த பாப் அவருக்கு இருக்கும் சக்திகள் என்ன; இந்தக் கதைக்கும் மார்வெல் கதைகளுக்கும் உள்ள தொடர்பு; நாம் ஏற்கெனவே பார்த்த மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் யாரெல்லாம் இதில் வருகிறார்கள் என்பதாக நீள்கிறது இந்த THUNDERBOLTS.
எலெனா பெலோவாவேகா ஃபுளோரென்ஸ் பக். பிளாக் விடோவின் மறைவால் வாடிக்கொண்டு இருக்கும் நபர். அதிரடி சண்டைக் காட்சிகளைவிடவும், எமோசன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். The Falcon and the Winter Soldier வெப் சீரிஸில் பார்த்த வியாட் ரஸலுக்கு இதில் கிட்டத்தட்ட கேப்டன் அமெரிக்கா ரோல். அதில் விட்டுப்போன பாத்திரத்தை இதில் தொடர்ந்திருக்கிறார். படத்தில் காமெடி போர்சனை கவனித்துக்கொள்கிறார் ரெட் கார்டியனாக வரும் டேவிட் ஹார்பர். பாப், சென்ட்ரி, வாய்டு என பல கதாபாத்திரங்களில் வருகிறார் லெவிஸ் புல்மேன். கிட்டத்தட்ட எல்லா அவெஞ்சர்ஸை விடவும், சக்தி வாய்ந்த நபராக சொல்லப்படும் பாப் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாம். லெவிஸ் புல்மேனும் சிறப்பாக நடிக்கவில்லை. THE BOYS தொடரில் வரும் காமெடி சூப்பர்ஹீரோவாகவே எஞ்சி நிற்கிறார். செபஸ்டியன் ஸ்டேன் மீண்டும் வின்டர் சோல்ஜராக வருகிறார். ஒரு சண்டைக் காட்சியில் மட்டும் சூப்பர். மத்தபடி ம்ஹூம். அப்படியே நம்மூர் ஜாடையில் இருக்கும் கெரால்டின் விஸ்வநாதனுக்கு (அப்பா தமிழர்) ஜாலியான ஒரு கதாபாத்திரம்.
எண்டுகேமுக்குப் பிறகு மார்வெல் கிட்டத்தட்ட இரண்டு டஜன் படைப்புகளை வெளியிட்டுவிட்டது( வெப் சீரிஸும் அடக்கம்). ஆனால், எதுவுமே மார்வெலுக்கு எண்டுகேமின் புகழை மீட்டு எடுக்கும் அளவுக்கு இல்லை. தேவையே இல்லாத இடத்தில் காமெடியை சேர்ப்பது; சம்பந்தமில்லாமல் பேசிக்கொண்டே இருப்பது; சம்பிரதாயத்துக்காக சில காட்சிகளை வைப்பது என மார்வெலுக்கு எதெல்லாம் வொர்க் அவுட் ஆனதோ,அதெல்லாம் இப்போது மார்வெலுக்கு தலைவலியாய் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் ரெட் கார்டியன் செய்யும் காமெடிகள் ஓரளவுக்கு வொர்க் ஆகியிருப்பதே ஆகப்பெறும் ஆறுதல்.
அவெஞ்சர்ஸ் இல்லாத சூழலில் ' என்ன என்னமோ செய்றியேண்ணா' என சொல்லும் அளவுக்குத்தான் மார்வெல்லின் படைப்புகள் வெளிவருகின்றன. இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல. ஆனால், இதில் அதுவே கதையாக வருவதால் கொஞ்சம் பார்க்க ஜாலியாக இருக்கிறது. ஆள் இல்லாத வரைக்கும் இவங்க தான் இனி அவங்க என முடிக்கும் இடமும், அதை மக்கள் லெஃப்ட்டில் டீல் செய்யும் விதமும் சூப்பர்.
முந்தைய படங்களுக்கு இது எவ்வளவோ பெட்டர் என்பதே தண்டர்போல்ட்ஸ் செய்திருக்கும் சாதனை. அடுத்து ஃபெண்டாஸ்டிக் 4ல் மீட் செய்வோம்.