கமாலா கான் | கரோல் டென்வர்ஸ் | The Marvels
கமாலா கான் | கரோல் டென்வர்ஸ் | The Marvels The marvels

The Marvels Review | க்யூட் Ms marvel... செம்ம க்யூட் GOOSE... எப்படியிருக்கிறது தி மார்வெல்ஸ்?

MCUவின் இந்த phase கொஞ்சம் பரிதாபமாகவே இருக்கிறது. மார்வெல்ஸை சரிவிலிருந்து இந்தப் பாகமாவது மீட்குமா..?
The Marvels (3 / 5)

க்ரீ மக்களின் தாயகத்தில் நிகழும் ஒரு பிரச்னை எப்படி மற்ற உலகங்களுக்கு பரவுகிறது என்பதும், கேப்டன் மார்வெல் தான் செய்த பிழைக்காக என்ன பிராய்ச்சித்தம் செய்கிறார் என்பதுமே இந்த THE MARVELS திரைப்படத்தின் ஒன் லைன் சாரி டூலைன்.

பேரண்டத்தைக் காத்துக்கொண்டு தனிமையில் இருக்கிறார் கரோல் டென்வர்ஸ் என்கிற கேப்டன் மார்வெல். ஒரு நாள் 'வார்ம்ஃஹோலில் என்னடா சத்தம்' என கேப்டன் ஒரு எட்டு போய் பார்க்க சில அமானுஷ்யங்கள் நிகழ்ந்துவிடுகிறது. கரோல் டென்வர்ஸ், மோனிகா ராம்ப்யூ , கமலா கான் மூவரின் சக்திகளும் இடம் மாறிவிடுகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மூவரும் இடம் மாறிவிடுகிறார்கள். ஆனால், இது தொடர்கதையாக மூவருக்கும் பெரும் சிக்கல்கள் உண்டாகின்றன. இதற்கிடையே இதற்கெல்லாம் காரணமானவர்கள் யார், அவர்களுக்கும் கரோல் டென்வர்ஸுக்கும் அப்படியென்ன தீராத பகை போன்றவற்றுக்கு எல்லாம் பதில் சொல்லியிருக்கிறது THE MARVELS.

கரோல் டென்வர்ஸாக பிரை லார்சன்.உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ROOM படத்தின் மூலம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர் பிரை லார்சன். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணாக பிரை லார்சனும், அவர் மகனாக ஜேக்கப் டிரம்லேவும் பிரமாதப்படுத்தியிருப்பார்கள். இப்படியான பிரை லார்சன் தான் MCUவின் மிகப்பெரிய கதாபாத்திரமான கரோல் டென்வர்ஸை ஏற்று நடிக்கப்போகிறார் என்னும் செய்தி வெளியான நாள் முதலே அவர் மீதான கவனம் பன்மடங்கு அதிகரித்தது. கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் ENDGAME தொடர்ந்து, இந்தப் படத்திலும் அவருக்குத்தான் முக்கிய கதாபாத்திரம். மிகச்சிறந்த நடிகை என்றாலும், சூப்பர்ஹீரோவுக்கான மேஜிக் அவரிடம் மிஸ்ஸிங். அது இந்தப் படத்திலும் தொடர்கிறது. அசகாய சக்திகளைக் கொண்டு கேப்டன் மார்வெல் சாகசங்கள் செய்யும் போது, நமக்குள் ஒரு எனெர்ஜி தொற்றிக்கொள்ள வேண்டும் அல்லவா, ம்ஹூம். போதாக்குறைக்கு நடிப்புக்கான ஸ்கோப்பைக் குறைத்துவிட்டு அதிரடியில் இறங்குங்க லார்சன் என படக்குழு சொல்லிவிட்டது போல. ' என்ன என்னமோ செய்றியேம்மா' என்று தான் நம் மைண்டுவாய்ஸ் RRR ஜூனியர் NTR போல் சொல்லிக்கொண்டு இருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

கரோல் டென்வர்ஸ்
கரோல் டென்வர்ஸ்

மூன்று நாயகிகள் இரண்டாவது மோகினா ராம்ப்யூவாக வரும் டெயோனா பாரீஸ். கேப்டன் மார்வெலுக்கும் இவருக்கான பிணைப்புக்கான காட்சிகள் போதிய அளவில் இல்லையென்றாலும், டெயோனா பாரீஸின் நடிப்பு அந்தக் கதாபாத்திரத்துடன் நம்மை ஒன்றச் செய்கிறது. அதே போல், அடுத்தடுத்து வரவிருக்கும் படங்களுக்கான லீடும் அவர் தான் என்பதால் மன்னித்துவிடலாம். இந்தக் கதாபாத்திரம் பற்றி மேலும் அறிய நீங்கள் ஹாட்ஸ்டாரில் வெளியான WANDA VISIONஐயும் பார்த்திருத்தல் அவசியம்.

இந்தப் படத்தில் நம்மை எனெர்ஜி வைபில் வைத்திருப்பது குட்டி சூப்பர் ஹீரோவான கமாலா கான் தான். ஹாட்ஸ்டாரில் வெளியான MS MARVEL தொடர் மூலம் இமான் வெல்லானி செம்ம வைரல். இந்திய பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவில் வாழ்ந்து வேறு வழியின்றி வேறு தேசம் சென்ற இஸ்லாமியர்கள் போன்றவற்றைப் பற்றி சூப்பர் ஹீரோ உலகத்துக்குள் பேசியது MS MARVEL தொடர். அந்தத் தொடர் அதன் கதைத் தன்மையாலேயே நம்மை எளிதாக ஈர்த்தது. அதன் முதன்மை கதாபாத்திற்கு உயிர்கொடுத்தவர் கனடா வாழ் பாகிஸ்தான் வம்சாவளியான இமான் வெல்லானி. கேப்டன் மார்வெல்லின் அதிதீவிர விசிறியான கமலா கான் செய்யும் சாகசங்கள் தான் அந்தத் தொடர் என்பதால், அதன் மிட் கிரெடிட் காட்சியில் இந்தப் படத்தின் ஆரம்ப காட்சியை இணைத்திருப்பார்கள். கிட்டத்தட்ட டாம் ஹோலாண்டு ஏற்று நடிக்கும் ஸ்பைடர்மேன் கதாபாத்திரம் அளவுக்கு ஜாலி கேலிகளைச் செய்கிறார் கமாலா கானாக வரும் வெல்லானி. ' நம்ம டீமுக்கு ஒரு பெயர் வைக்கணும்; மோகினா ராம்ப்யூக்கு ஒரு பெயர் வைக்கணும்' போன்ற காட்சிகள் சிரிப்பு ரகம். டாம் ஹோலாண்டு ராபர்ட் டௌனி ஜூனியர் காட்சிகளைப் போலவே, கமாலா கானுக்கும் , பிரை லார்சனுக்குமான காட்சிகளில் கெமிஸ்டிரி பக்காவாக வொர்க் ஆகியிருக்கிறது. கமலா கானின் குடும்பத்தைக் கூட்டி வந்து ஸ்பேஸில் உலவ விட்டது தான் கொஞ்சம் ஓவர் டோஸ்..!

goose
goose

மூன்று நாயகிகளும் மாறிக்கொண்டே இருப்பது; கூஸ் பூனையின் செய்யும் அட்டகாசம்; பாடல்களைத் தங்கள் மொழியாக வைத்திருக்கும் கிராமம்; ஹாலா கிரக பிரச்னைகள் எல்லாம் சரி. ஆனால், ஒரு படத்திற்கு இது மட்டும் போதாதே. போதாவிட்டால் என்ன, அங்க அங்க 'மானே தேனே ' போட்டு ஒப்பேற்றிவிடலாம் என நினைத்துவிட்டார்களோ என்னவோ. ஒரு மாஸ் காட்சிக்கும் அடுத்த மாஸ் காட்சிக்கும் இடையே விழும் இடைவெளியில் நாம் ஒரு குட்டித் தூக்கமே போட்டுவிடலாம் போல. அதிலும் க்ரீ மக்களின் போராளித் தலைவரான டார் பென்னாக வரும் ஜா ஆஷ்டனின் ரொம்பவே சோதிக்கிறார்.

இதற்கு முந்தைய எதிர்மறை கதாபாத்திரங்களைவிடவும் வீக்காக இருக்கிறது டார் பென்னின் கதாபாத்திரம். தன் கிரகத்துக்கு ஏற்பட்ட அவலச் சூழலுக்காக மற்றவர்களை பழி வாங்கக்கூடிய கதாபாத்திரம் . ஆனால் ஒப்பேற்றிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஸ்கிரல் உலகம் , க்ரீ உலகம் இரண்டுக்குமான காட்சிகளை ஜஸ்ட் லைக் தட் கடந்து போனது; எதுக்கு அந்த பாடல் உலகம்; என்பதாக ஏகப்பட்ட பிரச்னைகள். அதிலும் நிக் ப்யூரி எல்லாம் ' இருங்க பாயிண்ட் வரட்டும்' மோடிலேயே டீல் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கான எல்லா காட்சியையும் தொலைக்காட்சி தொடரிலேயே எழுதித் தீர்த்துவிட்டார்கள் போல.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் விசுவல் எஃபெக்ட்ஸ். இந்த ஃபேஸின் முந்தைய படங்களில் கார்டியன்ஸ் தவிர எல்லாமே விசுவலாக டொங்கலாகவே இருந்தன. அதை இந்தப் படத்தில் நிவர்த்தி செய்திருக்கிறார்கள். ஸ்பேஸில் நடக்கும் காட்சிகள், வித்தியாசமான உலகங்கள், அந்த மனிதர்களின் உடைகள், கூஸ் பூனை செய்யும் அட்டகாசம் என எல்லாமே பக்கா. அதிலும் கூஸ் குடும்பம் செய்யும் லூட்டி செம்ம க்யூட் ரகம்.மாறிக்கொண்டே மூவரும் பயிற்சி செய்யும் காட்சிக்கும், பிற சண்டைக்காட்சிகளும் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன. தொலைக்காட்சித் தொடர்கள், படங்கள், புதிய சூப்பர் ஹீரோக்கள் என இந்த ஃபேஸில் நிறைய சிக்கல்கள். இந்தப் படம் முழுமையாக புரிய வேண்டும் என்றால்கூட நாம் சில தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்திருத்தல் அவசியம். ஒரு பக்கம் லோகிக்கு சாகாவரமாக மிகப்பிரமாண்டமான முடிவுறையை எழுதியிருக்கிறது மார்வெல். அதே சமயம், அடுத்தடுத்த படைப்புகளுக்கான சேஃப் லேண்டிங்கையும் இந்தப் படத்தின் மூலம் உறுதி செய்திருக்கிறார்கள்.

மார்வெல்லின் அடுத்தடுத்த படங்களில் வரவிருக்கும் குட்டி சூப்பர் ஹீரோக்களுக்காகவும், விசுவல் எஃபெக்ட்ஸ்க்காகவும் இந்த THE MARVELS படைப்புக்கு ஒரு தம்ஸ் அப் கொடுக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com