ஒரே இரவில் இரண்டு குற்றங்கள் - சுவாரஸ்யத்தை தக்க வைக்கிறதா TEN HOURS..?
Ten Hours Movie Review(2 / 5)
காணாமல் போன பெண், கொலையான இளைஞர்... இவ்விரு சம்பவங்களைப் பற்றிய போலீஸ் விசாரணையே `டென் ஹவர்ஸ்'.
சேலம் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ (சிபிராஜ்) காவல் நிலையத்துக்கு காணாமல் போன ஒரு மாணவி பற்றிய வழக்கு வருகிறது. அதை விசாரித்துக் கொண்டிருக்கும் இதே வேளையில், சென்னையிலிருந்து புறப்பட்டு சேலம் வழியாக செல்லும் ஐம்பொன் டிராவல்ஸ் பேருந்தில் பெண்ணிடம் ஒருவர் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்ற தகவல் வர, அதை விசாரிக்க விரைகிறார் காஸ்ட்ரோ. அங்கு சென்று பார்த்தால் பேருந்தில் ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். காணாமல் போன மாணவி என்ன ஆனார்? இளைஞரை கொன்றது யார்? இந்த இரு சம்பவங்களுக்கும் என்ன தொடர்ப்பு என்பதை எல்லாம் பத்து மணிநேரத்துக்குள் எப்படி கண்டுபிடித்தார் காஸ்ட்ரோ என்பதே மீதிக் கதை.
ஒரே இரவுக்குள் வெவ்வேறு இடங்களில் நடக்கும் குற்றச் சம்பவங்கள், அவை எப்படி ஒன்றுக்கு ஒன்று தொடர்பானதாக இருக்கிறது என்பதை பரபரப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள். ஒரு பேருந்துக்குள் நடக்கும் கொலை, அந்தக் கொலையை செய்ய சாத்தியம் உள்ள சிலர் அந்த பேருந்துக்குள்ளேயே இருக்கிறார்கள் என்பதும் சுவாரஸ்யமான ஒன்று. க்ளைமாக்ஸில் கொலையாளி யார் என்ற டிவிஸ்டும் எதிர்பாரதாதாகவே இருந்தது. இப்படி சில பாசிட்டிவ் தவிர படத்தில் சொல்லிக் கொள்ளும்படியாகவோ, சுவாரஸ்யமாகவோ ஏதும் இல்லை. குற்றங்கள், அவற்றுக்கு இடையேயான தொடர்பு, எல்லாம் இணையும் ஒரு புள்ளி என்பதெல்லாம் எழுத்தளவில் இருக்கிறது என்பதாலேயே படம் சுவாரஸ்யமாகிவிடும் என நினைத்திருப்பதுதான் படத்தின் பெரிய குறை. படம் துவங்கியதில் இருந்து இயல்பாக ஏதும் இல்லாமல், எல்லாவற்றிலும் செயற்கைத் தானம், போலித்தனம்.
ஒரு பெண் கடத்தப்பட்டிருக்கிறாள் என்பதை இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ கண்டுபிடிக்கும் முறையும் அதற்கு சொல்லும் லாஜிக் எல்லாம், `தமிழ்ப்படம் பார்ட் 2' சிவா ரேஞ்சில் தான் இருக்கிறது. அதென்னவோ தடுக்கி விழுந்தால் க்ளூ கிடைக்கும் என்பது போல, காஸ்ட்ரோ உட்காந்து தரையைப் பார்த்தால் ஏதாவது க்ளூ கிடைத்துக் கொண்டே இருக்கிறது. மேலும் பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட் என்பது போல, "நான் ஆத்தூர் இன்ஸ்பெக்டர் காஸ்ட்ரோ பேசுறேன்" என டெரர் காட்டுகிறார். ஆனால் நமக்கு தான் அது காமெடியாக இருக்கிறது.
பேருந்துக்குள் நடக்கும் கொலையும், அதை காஸ்ட்ரோ விசாரிக்கும் விதமும், கோமாளித்தனமாக இருக்கிறது. சார் நான் அவன கொள்ள தான் வந்தேன் ஆனா நான் கொலை செய்யல என யார் என்ன சொன்னாலும் நம்புகிறார். படத்தின் மையக்கத்தை பேருந்து கொலை நோக்கி நகர்ந்த பின், முதலில் காணாமல் போன பெண் பற்றிய வழக்கு மறக்காமல் இருக்கவும், அதை வைத்து கதையில் ஒரு கனெக்ட் இருக்கிறது என்பதாலும் அடிக்கடி அது சார்ந்த காட்சிகளையும் வெறுமனே கடமைக்கு காட்டுகிறார்கள். எப்படிப்பட்ட வழக்கையும் காஸ்ட்ரோ கண்டுபிடிப்பார் என்பதை விவரிக்க, ஒரு பிளாஷ்பேக் சொல்லப்படுகிறது. அதிலும் சரி, மெய்ன் ஸ்டோரியிலும் சரி காஸ்ட்ரோ புத்திசாலித்தனமாக செய்தது என்பது எதுவுமே இல்லை.
இருட்டிலேயே நடக்கும் கதை என்பதால், த்ரில்லை கூட்ட முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக். படத்தில் இல்லாத பரபரப்பை தன் இசையால் தர முயன்று ஓவர் டோஸாக இறங்கியிருக்கிறார் சுந்தரமூர்த்தி. ஆங்கிலத்தில் வந்த Murder on the Orient Express போன்று ஒரு த்ரில்லரை கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால் எழுத்தளவில் அழுத்தமாக இல்லை என்பதும், உருவாக்கத்திலும் நேர்த்தி இல்லை என்பதும் படத்தை துளியும் சுவாரஸ்யம் இல்லாமல் கொடுத்திருக்கிறது. க்ளைமாக்ஸ் திருப்பம் எதிர்பாராதது என்றாலும், அது தலையை சுத்தி மூக்கை தொட்ட கதையாகத்தான் ஆகிறது. அதனாலேயே இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடும் படம், படத்தின் தலைப்பை போல பத்து மணி நேரம் ஓடும் அளவு அலுப்பை ஏற்படுத்துகிறது.
மொத்தத்தில் இன்னும் சிறப்பாக எழுதி இயக்கியிருந்தால், சுராஸ்யமான த்ரில்லராக கவர்ந்திருக்கும்.