குடும்பம் + காதல்.. என்ன சொல்கிறது விஸ்வநாத் & சன்ஸ்? | Vishwanath and Sons Review | Suriya
குடும்பம் + காதல்... என்ன சொல்கிறது விஸ்வநாத் & சன்ஸ்?(3 / 5)
குழந்தையை குணப்படுத்த நினைக்கும் ஹீரோ குடும்பத்தையும், தன்னையும் சரி செய்வதே விஸ்வநாத் & சன்ஸ்!
சஞ்சய் விஸ்வநாத் (சூர்யா) மிகப்பெரிய தொழிலதிபர். வேளைகளில் பொறுப்பு, அம்மா நிர்மலாவிடம் (ராதிகா) அன்பு என வாழும் நபர். சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தால் சஞ்சய்க்கு திருமணத்தின் மீது நாட்டமில்லை. ஆனால் தன் குடுப்பத்துக்கு அடுத்து வாரிசே இல்லை என கவலைப்படும் அம்மாவுக்காக, வாடகை தாய் மூலம் மகனை பெறுகிறார் சஞ்சய். மகனுக்கு திருமணம் ஆகவில்லை என்ற கவலை இருந்தாலும், வாரிசு வந்த மகிழ்ச்சியில் இருக்கிறது குடும்பம். அந்த மகிழ்ச்சிக்கு தடையாக, சஞ்சய் மகனுக்கு ஒரு மருத்துவ பிரச்சனை வருகிறது. அதனை சரி செய்ய அந்த குழந்தையை பெற்றெடுத்த வாடகை தாய் தான் வர வேண்டும் என்ற சூழல். அந்த தாய் தான் மேடி. மேடியின் வருகை விஸ்வநாத் குடும்பத்தில் கொண்டு வரும் மாற்றங்கள் என்ன? 42 வயது சஞ்சய் 22 வயசு மேடி இடையேயான உறவு எப்படியானதாக இருக்கிறது? இதை எல்லாம் சொல்கிறது மீதிக்கதை.
படத்தின் முதல் ப்ளஸ் சூர்யாவின் நடிப்பு தான். லுக் ஆக செம்ம ஃப்ரெஷாக, பழைய ரொமான்டிக் சூர்யாவாக வந்திருக்கிறார். மமிதாவை கையாள முடியாமல் தவிப்பது, ஒரு கதப்பாத்திரத்தை நினைத்து அழுவது, மாஸ் சண்டை என பல சீன்ஸ் கெத்து காட்டி இருக்கிறார். சூர்யாவுக்கு சமமாக மமிதாவும் நடித்திருக்கிறார். துரு துரு என அவர் செய்யும் சேட்டை எல்லாம் ரசிக்கும் படியும், எமோஷன் சீன்ல கலங்கும் படியும் இருக்கிறது. இவர்களை முந்தி டாப் ஸ்க்கோர் செய்வது ராதிகா தான். மகனிடம் தன் விருப்பத்தை சொல்வது, ஒரு தர்ம சங்கடமான சூழலை இயல்பாக கையாள்வது என அசத்துகிறார். சுனில், ஜார்ஜ் மரியான், ரவீணா டான்டன், காளி வெங்கட் உட்பட துணை பாத்திரங்களும் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
ஒரு சிக்கலான களத்தை அழகா கையாண்டிருக்கார் இயக்குநர் வெங்கி அட்லுரி. காதலில் வயது வித்தியாசம் என்பதில் இருக்கும் நடைமுறை சிக்கல் என்ன என்று பேசி இருந்த விதம் சிறப்பு.
ஜி வி பிரகாஷ் இசையில் பட்டாம்பூச்சி பாட்டு சிறப்பு. பின்னணி இசையில் மாஸ் + எமோஷன் சீனுக்கு வலு சேர்க்கிறார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு படத்தை ரொம்ப ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறது. நவீன் நூலின் உணர்வுகளுக்கு இடம் கொடுத்து படத்தை தொகுத்திருக்கிறார்.
இது ஒரு சீரியஸ் சப்ஜெக்ட் என்றாலும், படம் முழுக்க இருக்கும் காமெடி ட்ரீட்மென்ட், படத்தை ரொம்ப எங்கேஜிங்காக கொண்டு செல்கிறது. "மனுஷங்க சண்டை போட்டு பிரியிறது சண்டையால இல்ல, சண்டைக்கு பிறகு எப்படி பேசறதுனு தெரியாததால" என வசனங்களும் சில இடங்களில் கவனிக்க வைக்கிறது. படத்தின் முக்கியமான ப்ளஸ் ஹீரோவை புனிதப்படுத்தாம, அவரையும் ஒரு சராசரி மனிதனின் குறைகளோடு படைத்த விதம் வெகு சிறப்பு.
இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தால், படத்தில் வரக்கூடிய சண்டைகாட்சிகளுக்கு காரணம் சொல்லப்பட்டாலும் அது சற்று துருத்திக் கொண்டு தான் இருந்தது. தொலைக்காட்சி பேட்டி சம்மந்தப்பட்ட காட்சி எமோஷானலாக ஈர்த்தாலும், இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். இது போன்ற சின்ன சின்ன குறைகளை கூட மறந்து பார்க்கும்படியாக, ஒரு ஃபேமிலி எண்டர்டெய்னர் இந்த விஸ்வநாத் & சன்ஸ்.

