STEPHEN REVIEW: ஸ்டீஃபனும் 9 பெண்களும்..!
STEPHEN(3 / 5)
நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள 'ஸ்டீஃபன்' திரைப்படம், 9 பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர் ஸ்டீஃபனின் கதையை த்ரில்லர் பாணியில் விவரிக்கிறது. மைக்கேல் என்ற காவல்துறை அதிகாரி கொலைக்கான காரணத்தை தேடுகிறார். ஸ்டீஃபனின் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் பிழைகள், ஸ்டீஃபனின் மனநிலையை எப்படி மாற்றியது என்பதை படம் ஆராய்கிறது.
சீரியல் கில்லர் ஒருவனின் கடந்த காலமும் , அந்தக் கொலைகளுக்கான காரணமுமே Netflixல் வெளியாகியிருக்கும் STEPHEN.
9 பெண்களை கேமரா ஷூட்டிங் பாணியில் கொலை செய்துவிட்டு கைதாகிறான் ஸ்டீஃபன். கொலையாளியைத் தேடும் மைக்கேலுக்கு கொலைக்கான காரணத்தை தேடும் பணி சேர்ந்துகொள்கிறது. ஸ்டீஃபனின் பெற்றோர்கள் யார் , அவர்கள் செய்த பிழை என்ன என ஒரு கடந்த காலக் கதை நமக்குக் காட்டப்படுகிறது. அந்தக் கதைகள் தான் ஸ்டீஃபனின் இந்த நிலைக்குக் காரணமா இல்லை வேறு காரணங்களாக என்பதை இரண்டு மணி நேர படமாக த்ரில்லர் பாணியில் எடுத்திருக்கிறார்கள்.
ஸ்டீஃபனாக கோமதி ஷங்கர். எல்லாவற்றையும் செய்துவிட்டு ஒன்றும் செய்யாதது போல் முகத்தை வைத்துக்கொள்ள சிலரால் மட்டுமே முடியும். கோமதி ஷங்கர் அதை சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார். “ அண்ணா, ஒரு காஃபி கிடைக்குமா? என காவல் நிலையத்தில் கேட்பது முதல் பல காட்சிகளில் அவர் குரலில் இருக்கும் எள்ளல் இந்தக் கதைக்கு கச்சிதமாக உதவுகிறது. ஸ்டீஃபனின் பெற்றோர்களாக குபேரனும், விஜயஶ்ரீயும். BAD Parenting என்பது ஒரு குழந்தையை எந்த அளவுக்கு மாற்றும் என்பதற்கு ஏற்ப இந்தக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இருவருமே கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள். காலையும் பிடிப்பேன், கழுத்தையும் பிடிப்பேன் பாணியில் விஜயஸ்ரீ நல்லதொரு சாய்ஸ். ஒட்டுமொத்த குடும்பமும் eccentricகாகவே இருப்பதால், மூன்று கதாபாத்திரங்கள் செய்யும் சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறது. மன நல நிபுணர் சீமாவாக ஸ்முருதி வெங்கட். ஸ்டீஃபனிடம் இருந்து உண்மையை வெளிக்கொண்டு வர அயராது பாடுபடும் கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்கள் அளவுக்கு காவல்துறை அதிகாரி(மைக்கேல்)யின் கதாபாத்திரத்தில் அடர்த்தி இல்லை என்பதால், புல்லட் பைக்கில் சாலையில் சாகசம் செய்து திருப்திப்பட்டுக்கொள்கிறார்.
யார் கொலையாளி என்பதை நமக்கு முதல் காட்சியிலேயே காட்டிவிடுகிறார்கள். வழக்கமான த்ரில்லர் சினிமாக்களில் இருந்து இது மாறுபடும் இடம் இதுதான். யார் கொலைகளை செய்தார் என்பதற்கான விடை நமக்கு முன்பே தெரிந்துவிடுகிறது. எப்படி செய்தார் என்பதற்கான பதிலும் முதல் காட்சியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. படத்தின் சுவாரஸ்யம் ஏன் செய்தார் என்கிற கேள்வி தான். அதைக் கடைசி வரை சுவாரஸ்யமாகவே கொண்டு போக முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி. GIANT WHEELம், அதற்கான லைட்டிங்கும், அதில் இருக்கும் கதாபாத்திரங்களும் ஸ்டீஃபனின் மனதுக்குள் உழல்பவை. அந்த வீலில் நம்மையும் பயணம் செய்ய வைத்துவிடுகிறது மிதுனின் திரைக்கதை. கொலைக்காட்சியை விவரித்துக்கொண்டிருக்கும் ஷாட்டுக்குள் , ஸ்முருதி வெங்கட்டின் கதாபாத்திரமான சீமா நுழைவது நல்லதொரு ஷாட். ஸ்டீஃபனின் காதலி சார்ந்த காட்சிகளில் இன்னும் அடர்த்தி சேர்த்திருக்கலாம்.
ஒரு த்ரில்லர் சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்வது டெக்னிக்கல் டீம் தான். இந்தப் படத்தின் டெக்னிக்கல் டீம் அந்த வகையில் சிறப்பாக வேலை செய்திருக்கிறது. எடிட்டிங், ஜெயிண்ட் வீல்,பின்னணி இசை, ஒளிப்பதிவு என எல்லாமே பக்காவாக இருக்கிறது. ஆனாலும் , ஃபிளாஷ்பேக் என்பதற்காக அரதப் பழைய காரை பயன்படுத்தாமல் இருந்திருக்கலாம். ஃபிளாஷ்பேக்கே 2006ல் தானே ஆரம்பிக்கிறது.
படத்தில் வரும் GIANT wheel போல சில காட்சிகள் உயரப் பறக்கின்றன. சில காட்சிகள் கீழிறக்கி விடுகின்றன. அதிலும் சுபத்துக்குப் பின் வரும் காட்சிகள் எல்லாம் ட்விஸ்ட் வெறி அன்றி வேறல்ல. நல்லாத்தானப்பா போய்க்கிட்டு இருக்கு, அப்புறம் எதுக்கு இதெல்லாம் என்பதாகவே அந்தக் காட்சிகள் நீள்கின்றன. இன்னும் ஸ்மார்ட்டாக அந்த காட்சிகளை யோசித்திருக்கலாம்.
சைக்காலஜிக்கல் த்ரில்லர் விரும்பிகள் தாராளமாக நெட்பிளிக்ஸில் ஸ்டீஃபனை விசிட் செய்யலாம்.

