Jayam Ravi | Siren | YogiBabu
Jayam Ravi | Siren | YogiBabuSiren

Siren review | பழைய கதை தான்... ஆனால் ட்ரீட்மென்ட்டால் கவர்கிறதா இந்த சைரன்..?

இளைஞனாக இருக்கும் போது துறுதுறுப்பும், வயதான ஒருவராக சிறையில் இருந்து வெளிவரும் போது பொறுமையை காட்டுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் கோபத்தை வெளிப்படுத்துவது என ஜெயம் ரவி சிறப்பு. மேலும் யோகி பாபுவுடன் இணைந்து செய்யும் காமெடிகளிலும் கவர்கிறார்.
Siren(2 / 5)

கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான ஹீரோ, 14 நாட்கள் பரோலில் வெளியே வருகிறார். அதற்கு பின்னும் முன்னும் நடந்தது என்ன?

காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் திலகன் (ஜெயம் ரவி), இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி ஆகிறார். சிறையில் பல வருடங்கள் இருந்தும் பரோலில் சென்று தன் குடும்பத்தையோ, தாயை இழந்த தன் குழந்தையையோ பார்க்க மறுக்கிறார். காரணம் தன் மீது வெறுப்பில் இருக்கும் மகள் முன், கொலைகார முத்திரையுடன் நிற்பதை அவர் விரும்பவில்லை. ஆனால் தன்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கேள்விப்பட்டதும் பரோலில் செல்ல விருப்பம் தெரிவிக்கிறார். இன்னொரு புறம் அதே காஞ்சிபுரத்தை சேர்ந்த காவலர், நந்தினி (கீர்த்தி சுரேஷ்) தன் மீது சுமத்தப்பட்ட லாக் அப் டெத் கரையை துடைத்து மறுபடி பணியில் சேர்கிறார். திலகன் சிறையில் இருந்து காஞ்சிபுரம் வந்த பின் இரண்டு முக்கிய நபர்களின் கொலைகள் நிகழ்கிறது. இதை செய்தது திலகன்தான் என சந்தேகிக்கும் நந்தினி விசாரணையை முடுக்குகிறார். உண்மையில் கொலையாளி யார்? திலகனின் கடந்த காலம் என்ன? அப்பா - மகள் இடையேயான பிரச்சனை என்ன ஆனது? இவை எல்லாம் தான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் ப்ளஸ், இது ஒரு அரத பழைய கதைதான். ஆனாலும் அதை விறுவிறுப்பாக கொண்டு சென்ற விதத்தில் சுவாரஸ்யமாக்குகிறார் இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ். யோகி பாபுவை வைத்து எழுதப்பட்டிருக்கும் காமெடிகள் சில இடங்களில் நன்றாகவே சிரிக்க வைக்கிறது. செல்வகுமாரின் ஒளிப்பதிவு மிகக் கச்சிதமான விதத்தில் அமைந்திருக்கிறது. நடிப்பாக ஜெயம் ரவி தன்னால் முடிந்த வரை இரண்டு கால கட்டங்களை தன் நடிப்பால் உணர்த்துகிறார். இளைஞனாக இருக்கும் போது துறுதுறுப்பும், வயதான ஒருவராக சிறையில் இருந்து வெளிவரும் போது பொறுமையை காட்டுவது, ஆக்‌ஷன் காட்சிகளில் கோபத்தை வெளிப்படுத்துவது என எல்லாம் சிறப்பு. மேலும் யோகி பாபுவுடன் இணைந்து செய்யும் காமெடிகளிலும் கவர்கிறார்.

Jayam Ravi | Siren | YogiBabu
கடவுள், சாத்தான், விதி கொஞ்சம் கள்ளம்... மம்முட்டியின் நடிப்பில் ஈர்க்கிறதா BRAMAYUGAM..?

படத்தின் குறைகளாக பார்த்தால், முதலில் சொன்னது போல இது மிகவும் அடித்து துவைத்து பிழிந்து காய போட்டு கிளிப் மாட்டிவிட்ட கதை. ஜெயம் ரவியே கூட சில படங்களுக்கு முன்பு நடித்த `அடங்கமறு’ படத்திலும் இதே பாணியிலான கதைதான். எனவே படம் நமக்கு புதிதாக கொடுப்பது என எதுவும் இல்லை. இதே போன்ற நூற்றுக் கணக்கான படங்களை நாம் பார்த்து விட்டோம். படத்தின் திரைக்கதையும் சரியாக எழுதப்படாத காரணத்தால், காட்சிகளின் கோவையில் பெரிய தடுமாற்றம். உணர்ச்சிப் பூர்வமான காரணியாக அப்பா - மகள் பாசம் இருந்தாலும், அது மிகவும் தட்டையாக இருப்பதால், அது மற்றும் ஒரு காட்சியாக கடந்து செல்கிறது.

போலீஸ் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் அவ்வளவு பொருத்தமாக இல்லை, நடிப்பும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. மேலும் அவரது கதாப்பாத்திரம் எழுதப்பட்ட விதம் தெளிவாக இல்லை. அனுபமா வரும் காட்சிகள், பாடலில் வரும் மாண்டேஜ் அளவிற்கான முக்கியத்துவத்துடன் மட்டுமே இருக்கிறது. எனவே லால் சலாமுக்கு ஒரு விக்ராந்த் போல், சைரனில் அனுபமா, அவ்வளவே. மற்ற நடிகர்கள் யாரும் சுத்தமாக மனதில் பதியவில்லை. வருகிறார்கள் போகிறார்கள்.

படம் முழுக்க பல இடங்களில் லாக் அப் டெத்தை வைத்து கீர்த்தி சுரேஷின் கதாப்பாத்திரம் விமர்சிக்கப்படுகிறார். ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷிடம் கேட்கும் அந்த ஒரு கேள்விக்காக தான் லாக் அப் டெத் என்பதை படத்தில் இணைத்திருக்கிறார்கள். மற்றபடி அது இந்தப் படத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. மேலும் இந்தப் படம் தடுமாற மிக முக்கிய காரணம், படத்தில் ஹீரோவுக்கு எந்த தடைகளும், சவால்களும் இல்லை. என்னவானாலும் அவர் திட்டம் எல்லாம் நடந்துவிடும் எனும் போது, அதைப் பார்ப்பதில் நமக்கும் சுவாரஸ்யம் போய்விடுகிறது. கூடவே வில்லன் கதப்பாத்திரமும் மிக பலவீனமாக இருக்கிறது.

சில காட்சிகள் எழுத்து அளவில் சுவாரஸ்யம் கொடுத்திருக்கலாம். உதாரணமாக, தன் நண்பனை காப்பாற்ற செல்லும் ஜெயம் ரவி, அங்கு சண்டையிடுவார். அடிவாங்கிய ஃபைட்டர்ஸிடம், என்ன சிகிச்சை எடுக்க வேண்டும், எங்கு கட்டு போடவேண்டும், எத்தனை தையல் போட வேண்டும் என ப்ரிஸ்க்ரிப்ஷனும் கொடுப்பார். இது ஒரு நகைச்சுவை கலந்த ஃபைட் சீன் போல் தோன்றலாம். ஆனால் பார்க்கையில் அதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. மேலும் சாதியை மையமாக வைத்து படத்தில் ஒரு பிரச்சனை எழும். ஆனால், சாதிக்கு எதிரான விஷயங்களை ஹீரோ பேசும் போது, அது எந்த முக்கியத்துவமும் இல்லாமல், போகிற போக்கில் இருக்கிறது. கதைக்குள் அது வலுவாக பதியவில்லை. மேலும் அவை எந்த அழுத்தமும் இன்றி, வெறுமனே ட்ரெண்டிற்கு சாதி எதிர்ப்பு வசனங்களை பதிவு செய்திருப்பது போன்ற தோற்றத்தில் இருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மோசம் என்றும் சொல்ல முடியாது, சூப்பர் எனப் பாராட்டவும் முடியாது. ஒரு முறை கேட்டு முடித்ததும் மறந்துவிடும் ரகம். சாம் சி.எஸ் பின்னணி இசை மிக கொடூரமாக இருந்தது. படத்திலிருந்தே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், படத்தில் ஒரு கொலைகாரன், தகர சீட்டை தரையில் தேய்க்க, எதிராளி காது சவ்வு வெடித்து, காது மூக்கில் ரத்தம் வந்து இறந்து போவார். அந்த கொலைகாரனின் டெக்னிக்கை படம் முழுக்க சாம் சி எஸ் பார்வையாளர்களுக்கு செய்கிறார்.

மொத்தத்தில் எந்த புதுமையும் இல்லாத, மிக வழக்கமான பழிக்குப் பழி கதைதான். எந்த புதுமையும் தேவை இல்லை, சாதாரண ரிவெஞ்ச் ட்ராமா போதும் என்றால் பார்க்கலாம். மற்றவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com