Sikandar | என்ன முருகதாஸ் இதெல்லாம்..!
Sikandar(1 / 5)
மனைவிக்காக கணவன் எடுக்கும் காவலன் அவதாரமே `சிக்கந்தர்’
விமானத்தில் பெண் ஒருவரிடம் தவறாக நடந்து கொள்ளும் இளைஞனை, அடித்து துவைக்கிறார் சஞ்சய் ராஜ்கோட் (சல்மான்கான்). அந்த இளைஞரின் அப்பா ராகேஷ் பிரதான் (சத்யராஜ்) ஒரு அமைச்சர். தன் மகன் மீது கை வைத்தவனை கொல்ல சொல்கிறார். ஆனால் அடி கொடுத்த சஞ்சய் ராஜ்கோட்டின் மகாராஜா. மாளிகை வாழ்க்கை, அவரை மதிக்கும் மக்கள் கூட்டம் என நிஜமாகவே ஒரு மினி மன்னராட்சி நடத்தி வருகிறார். சஞ்சயின் செல்வாக்கிற்கு முன், அமைச்சர் ராகேஷால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த சூழலில், திடீரென நடக்கும் சம்பவம் ஒன்றால் தன் மனைவி சாய்ஸ்ரீக்காக (ராஷ்மிகா மந்தனா), மும்பையைச் சேர்ந்த மூன்று நபர்களை காக்கும் பொறுப்பு சஞ்சயிடம் வருகிறது. அமைச்சரின் கோபம் என்ன ஆனது? சஞ்சய் அந்த மூவரை காப்பாற்றினாரா இல்லையா? என்பதெல்லாம் தான் சிக்கந்தரின் மீதிக் கதை.
சிக்கந்தர் இந்திய சினிமா வரலாற்றில் நிகழும் ஒரு அபூர்வம். ஏனென்றால் எப்போதும் ஒரு படத்தில் குறைகள் இருந்தால், பாசிட்டிவ் என சொல்லவும் எதாவது இருக்கும். ஆனால் அப்படி எதுவுமே இல்லாத படங்கள் மிக அபூர்வமாக மட்டுமே வரும். எனவே சிக்கந்தர் ஒரு அபூர்வம். தன் மனைவியை சரியாக கவனிக்கவில்லை, அவளுடன் நேரம் செலவிடவில்லை என்பது போன்ற கோணங்கள் ஒரு மாஸ் ஹீரோ படத்தில் இருப்பது வரவேற்புக்குரியது. அதை மனதில் வைத்து ஹீரோ எடுக்கும் முடிவும் ஏற்றுக்கொள்ளும் படி இருக்கிறது. ஆனால் அதைத் திரைப்படமாக மாற்றியிருப்பதும், வைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், நடிப்பும் மிக மிக மோசமானதாய் இருக்கிறது.
சல்மான்கான் படம் முழுக்க சோர்வான நடிப்பை மட்டுமே கொடுத்திருக்கிறார். அவ்வளவும் செயற்கையாகவே இருக்கிறது. சண்டைக்காட்சியில் கூட அவரின் பிரசன்ஸ் சுவாரஸ்யமாக இல்லை. ராஷ்மிகா மந்தனாதான் படத்தில் ஓரளவு நல்ல நடிப்பைக் கொடுக்கிறார். ஆனால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளும் வசனங்களும் டிவி சீரியல் ரேஞ்சிலேயே இருக்கிறது. காஜல் அகர்வால் கொடுக்கப்பட்ட வேலையை முடித்துக் கொடுத்திருக்கிறார். சல்மானின் உதவியாளராக வரும் சர்மான் ஜோஷி நடிப்பும் சரி, டப்பிங்கும் சரி அத்தனை மோசம். வில்லனாக வரும் சத்யராஜ், டெம்ப்ளேட் கதாப்பாத்திரம். வருகிறார், கத்துகிறார், போகிறார். அதிலும் தகடு தகடு மாடுலேஷனை பயன்படுத்துவது எல்லாம் உச்சபட்ச கொடுமை.
ப்ரித்தம் இசையில் வரும் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. ஒரே ஒரு பாடல் மட்டும் நன்றாக இருந்தது, ஆனால் அது ப்ரித்தம் இசையமைத்த பாடல் இல்லை, Woh Kaun Thi படத்தில் இடம்பெற்ற Lag Jaa Gale பாடலை இப்படத்தில் பயன்படுத்தியிருந்தனர். திரு ஒளிப்பதிவில் சண்டைக்காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளன.
ஹீரோ மூன்று பேரைக் காப்பாற்றுகிறார். அதன் மூலம், ஒரு குடியிருப்பு பகுதியின் சுகாதாரத்தை உறுதி செய்கிறார், மோசமான ஒருவரை காதலிக்கும் பெண்ணை காப்பாற்றுகிறார், ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கலை தீர்க்கிறார் என மூன்று பிரச்சனைகளை சரி செய்கிறார் என்ற கான்செப்ட், எழுத்தளவில் சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அது படத்தின் திரைக்கதைக்கு சற்றும் பொருந்தவில்லை. ஒவ்வொரு காட்சியும் துளியும் மெனக்கெடல் இல்லாமல் எடுக்கப்பட்டதைப் போன்றே இருக்கிறது. சத்யராஜை சந்திக்கும் போது சல்மான்கான் “எனக்கு பிஎம், சிஎம் பற்றி எல்லாம் தெரியாது. ஆனால் நான் நினைத்தால் எம் எல் ஏ அல்லது எம் பி ஆகிவிடுவேன். ஆனால் அதில் எனக்கு ஆர்வம் இல்லை. அந்த ஆர்வத்தை எனக்கு ஏற்படுத்தாதீர்கள்” என்பார். படத்தின் கதைக்கும், காட்சியின் சூழலுக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் எதற்கு இப்படி ஒரு வசனம். மொத்தப் படமும் இந்த வசனம் போல தான் சம்பந்தமே இல்லாமல் ஏனோ தானோ என போகிறது.
மொத்தத்தில் நல்ல கதைக்களம் உள்ள, ஆனால் மிக மோசமாக எடுக்கப்பட்ட படம் என்ற அளவில் இருக்கிறது இந்த சிக்கந்தர்.