Samuthirakani's Carmeni Selvam Review
SamuthirakaniCarmeni Selvam

பணத்துக்கும், பாசத்துக்குமான போராட்டத்தை அழுத்தமாக கூறியதா? | Carmeni Selvam Review | Samuthirakani

வாழ்க்கையில் தேவை பணமா, பாசமா என்ற பட்டிமன்ற டாப்பிக்கை எடுத்து அதை படமாக மாற்ற முயன்றிருக்கிறார் ராம் சக்ரி. அதை முடிந்த வரை நகைச்சுவையும், எமோஷனும் கலந்து கொடுத்திருக்கிறார்.
Published on
பணத்துக்கும், பாசத்துக்குமான போராட்டத்தை அழுத்தமாக கூறியதா?(1.5 / 5)

பணம் சம்பாதிக்கும் ஓட்டத்து நடுவே பாசம் சம்பாதிக்க மறந்தவரின் கதை!

Samuthirakani
Samuthirakani

செல்வம் (சமுத்திரக்கனி) தொழிலதிபரான சம்பத் (கௌதம் மேனன்) வீட்டில் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார். செல்வத்தின் மனைவி சாந்தி (லட்சுமி ப்ரியா சந்திரமௌலி), மகன் பாலு (கரண்). அன்றைய பொழுதை அமைதியாக கழித்தால் போதும் என நினைக்கும் செல்வத்தின் போக்கு சாந்திக்கு ஏனோ ஏற்புடையதாக இல்லை. எப்படியாவது பணம் சம்பாதித்து முன்னேற வேண்டும் என செல்வத்தைத் தூண்டிக் கொண்டே இருக்கிறார். அதற்கு ஒரு குறுக்கு வழியைத் தேர்வு செய்கிறார் செல்வம். இது ஒரு பக்கம் இருக்க, நிகழ்காலத்தில் துபாயில் கார் ஓட்டுநராக பணியாற்றுகிறார் செல்வம். அவர் தேர்ந்தெடுத்த வழி என்ன, பணம் சம்பாதித்தாரா, துபாய்க்கு செல்வம் வந்த கதை என்ன? அதன்பிறகு அவர் எடுக்கும் முக்கியமான முடிவு என்ன இவற்றைச் சுற்றி நகர்கிறது இப்படத்தின் மீதிக்கதை.

Samuthirakani's Carmeni Selvam Review
போரின் கோரமான உளவியலை பேசும் ’நீளிரா’.. தவறவிடக் கூடாத சினிமா! | Neelira Review

வாழ்க்கையில் தேவை பணமா, பாசமா என்ற பட்டிமன்ற டாப்பிக்கை எடுத்து அதைப் படமாக மாற்ற முயன்றிருக்கிறார் ராம் சக்ரி. அதை முடிந்தவரை நகைச்சுவையும், எமோஷனும் கலந்து கொடுத்திருக்கிறார்.

நடிப்பைப் பொறுத்தவரை லீட் ரோலில் சமுத்திரக்கனி, வழக்கம் போல் தன்னுடைய மீட்டரிலேயே ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அதில் செண்டிமெண்ட் காட்சிகளில் எல்லாம் பாஸ் மார்க் வாங்குகிறார். அபிநயா உடன் செய்யும் ஜாலியான திட்டங்களைச் செயல்படுத்துவதும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால் மகனை, மனைவியை கொஞ்சுவது, அவர்களிடம் ஜாலியாக பேசுகிறேன் என அவர் செய்வதெல்லாம் கொஞ்சமும் ஒட்டாமல் போலியாக இருக்கிறது.

Carmeni Selvam
Carmeni Selvam

குடும்பத் தலைவியாக லட்சுமி ப்ரியா சந்திரமௌலி. குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணி கலங்குவது, பின்னர் கணவனின் ஆசை பேராசையாக மாறுவதை நினைத்துப் பதறுவது என இரு நிலையையும் நன்றாக பிரதிபலிக்கிறார். மகனாக வரும் கரண் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார். எக்ஸ்டெண்டட் கேமியோ ரோலில் கௌதம் மேனன், தன்னுடைய வழக்கமான பாணியிலான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அது அந்தப் பாத்திரத்திற்குக் கச்சிதமாகவும் பொருந்துகிறது. சின்ன ரோலில் அபிநயா வந்து போகிறார்.

இப்படத்தைத் தரமானதாகக் கொடுத்திருக்கிறது யுவராஜ் தக்ஷனின் ஒளிப்பதிவு. கடற்புற வீடு, இரவு நேர சாலைகள், துபாயின் பிரம்மாண்டம் எனப் பலவற்றையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். படத்தின் இசையும் பாடல்களும் பெரிய அளவில் கவரவில்லை. படத்தில் வரக்கூடிய சில எமோஷனலான காட்சிகள் நன்றாக உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, ஓர் இழப்புக்குப் பிறகு கௌதம் மேனனை, சமுத்திரக்கனி சந்திப்பது. மீண்டும் இவர்கள் க்ளைமாக்சில் சந்திப்பது போன்ற இடங்களைச் சொல்லலாம்.

Carmeni Selvam
Carmeni Selvam

இப்படத்தின் குறைகள் சரியாக எழுதப்படவில்லை என்பதுதான். ஒரு மனிதனுக்குப் பணம் தேவை என்பதை உணராமல் இருக்கிறான், பின்னர் பணம் சேர்க்க பேயாய் அலைகிறான் என்கிற மாற்றம் நேர்த்தியாகச் சொல்லப்படவில்லை. அந்தப் பாத்திரம் ஏன் மாறியது என்பதை வெறுமனே வசனங்கள் மூலம் கடத்த முயல்கிறார்கள். மேலும் படம் முழுக்க பேசிக்கொண்டே இருக்கிறார்கள், எதுவும் காட்சிகளாக, உணர்வுகளாக இல்லை. வாழ்க்கை மேம்படுவதற்காகத்தான் சமுத்திரக்கனி கதாபாத்திரம் குடும்பத்தைப் பிரிந்து வெளிநாட்டுக்குச் செல்கிறது. ஆனால் அங்கு யாரோ கொத்தடிமையாகக் கூட்டி வந்தது போன்ற உணர்வைக் காட்டுகிறார். குடும்பத்தைப் பிரிந்து வந்து பணம் சம்பாதிக்க வேண்டியதெல்லாம் அவ்வளவு அவசியமா?, அதெல்லாம் ஒரு பிழைப்பா என்கிற ரேஞ்சில் இருக்கிறது இயக்குநர் சொல்லி இருக்கும் விஷயங்கள். இத்தனைக்கும் அவர் அங்கு போய் தவறான, சட்டத்துக்கு புறமான வேலை எதையும் செய்யவில்லை. அப்படி இருக்க, ஏன் மீண்டும் வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்று அவ்வளவு துடிக்கிறார் என்பதும் புரியவில்லை அல்லது புரியும்படி சொல்லவில்லை.

மொத்தமாகப் பார்க்கையில் பணம் பிரதானமில்லை எனச் சொல்லவந்தது, அது நிறைய ஓவர் டோஸ் ஆகி பணமே தேவை இல்லை என்ற ரீதியில் படம் சென்றுவிட்டது. அதனை கொஞ்சம் தெளிவாக எடுத்திருந்தால் கவனிக்கப்படும்படியான ஃபீல் குட் படமாக இருந்திருக்கும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com