Por Thozhil Movie review | சீரியல் கில்லர் கதை தான்... ஆனால் தனித்து நிற்கிறதா 'போர் தொழில்'..?
Por Thozhil(3 / 5)
உலகம் முழுக்க சீரியல் கில்லர் ஜானரின் ஒன்லைன் ஒன்று தான். பல கொலைகளை நிகழ்த்தும் ஒரு சீரியல் கில்லர், அந்த கில்லர் யார்? ஏன் கொலை செய்கிறான் என்பதை போலீஸ் கண்டுபிடிக்கிறதா?. ஆனால் அந்தக் கதை சொல்லப்படும் விதம் சுவாரஸ்யமாக இருந்தால் தான் தனித்து நிற்கும். அந்த மாதிரி தனித்து நிற்கிறதா `போர் தொழில்’?
திருச்சியில் தொடர்ந்து மர்மமான கொலைகள் நடக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க க்ரைம் ப்ரான்ச் எஸ்.பி லோகநாதன் (சரத்குமார்) மற்றும் புதிதாக பணிக்கு சேரும் காவலர் பிரகாஷ் (அஷோக் செல்வன்) இருவரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்களால் கொலைகாரனைப் பிடிக்க முடிந்ததா? கொலைக்கான காரணம் என்ன? என்பதே படத்தின் கதை. வழக்கமான த்ரில்லர் பாணி கதையாக இல்லாமல் இந்தப் படத்தை சுவாரஸ்யமாக்குவது விக்னேஷ் ராஜாவின் தெளிவான எழுத்தும் - இயக்கமும். இடைப்பட்ட காலங்களில் மெமரீஸ் ஆஃப் மர்டரர் துவங்கி, மைன்ட்ஹண்டர், ட்ரூ டிடெக்டிவ் எனப் பல மர்டர் மிஸ்ட்ரி கதைகள் நமக்குப் பரிட்சயம் ஆகியிருக்கிறது, எனவே கண்டிப்பாக இதன் சாயல் படத்தில் தெரிவது தவிர்க்க முடியாதது. ஆனால், அதைத் தாண்டி படம் சுவாரஸ்யமாக இருக்கக் காரணம் தெளிவான எழுத்தும், ஆக்கமும்.
இந்தப் படத்தில் இரண்டு Duality அல்லது Irony இருக்கிறது. ஒன்று காவலர்களான பிரகாஷ் மற்றும் லோகநாதனை மையப்படுத்தியது. இதில் பிரகாஷ் மிகவும் தன்மையானவர், இலகுவானவர். ஆனால், தனக்குள் இருக்கும் தயக்கங்களையும், பயங்களையும் மறைத்துக் கொண்டிருப்பார். அதே சமயம் லோகநாதன் கரடு முரடான மனிதர், எல்லோரிடத்திலும் எரிந்து விழுவார். ஆனால் வேலையில் கவனத்துடன் செயல்படும் திறமை கொண்டவர். இந்த இருவருக்கும் இடையேயான முரண்களும், ஈகோ மோதல்களும் படத்தை துவக்கத்தில் இருந்தே சுவாரஸ்யமாக்குகிறது. சில இடங்களில் ஹூமராகவும் ஒர்க் ஆகியிருக்கிறது.
இன்னொரு இரட்டைத் தன்மை பற்றி சொன்னால் படத்தின் சஸ்பென்ஸை உடைத்தது போல் ஆகிவிடும். ஆனால் இதை சொல்லலாம் Perfection vs Messed Up. இந்த குணாதீசியங்களை வைத்து இரண்டாம் பாதியில் ஒரு ப்ளே இருக்கிறது. அதை சிறப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மொத்தப் படத்திலும் Good இரண்டு துருவங்களில் காட்டப்படுவது போல Evilலையும் இரு துருவங்களில் வைத்து இந்தக் கதையை எழுதியிருக்கிறார்கள் ஆல்ஃப்ரெட் மற்றும் விக்னேஷ் ராஜா. மோசமான குழந்தைப் பருவம் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை எப்படி சிதைக்கும் என்பதையும் இந்தப் படம் குறிப்பிடுகிறது. சமூகமும், குழந்தை வளர்ப்பை சரியாக கையாளாத பெற்றோரும், குற்றவாளிகள் உருவாக ஒரு காரணம் என்பதையும் விவாதிக்கிறது. இந்த விறுவிறு த்ரில்லருக்குள், துருத்திக் கொண்டு இல்லாமல், கதையோட்டத்துடன் இந்த விஷயங்களை சொன்ன விதம் சிறப்பு.
நடிப்பு பொருத்தவரை, சரத்குமார் ஒரு சீனியர் அதிகாரியாக, எல்லோரிடமும் எரிந்து விழும் நபராக நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார். அதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை என்பதும் கவனிக்க வைக்கிறது. அசோக் செல்வன் புதிதாக பணியில் சேரும் காவலருக்கு உரிய துடுக்குத் தனத்தை தனது நடிப்பில் வெளிக்காட்டுகிறார். இதனையடுத்து ஒரு சர்ப்ரைசிங்கான நடிகர் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரைப் பற்றி சொன்னால் படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கான ஆச்சர்யம் கெட்டுவிடும். ஆனால் அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருக்கிறார் அந்த மிஸ்டர் எக்ஸ்.
இந்துலால் கவீதின் கலை இயக்கம் மிக இயல்பாக இருந்தது. 2010ல் நடக்கும் கதைக்களம் என்பதை அழுத்திக் காட்டும்படியாக இல்லாமல், அதே சமயம் முக்கியமான பொருட்களில் மூலம் மட்டும் அதை உணர்த்தியிருந்தார். கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு ஒரு ட்ரூ ஜானர் படத்திற்கு ஏற்றபடி மிகத் தரமாக இருந்தது. படத்திற்கு இசை ஜேக்ஸ் பிஜோய். சில பின்னணி இசையில் `ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்’ சீரிஸ் சாயலில் இசை வருகிறது. ஆனால் படத்திற்கு பொருத்தமான இசையை அளித்திருக்கிறார்.
படத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் எனத் தோன்றியது, ஒரு ஃப்ளாஷ்பேக் போர்ஷன். சிரிப்பை மையப்படுத்திய அந்த பின் கதை இன்னுமே கூட அழுத்தமாக இருந்திருக்கலாம். மேலும் திடீரென நிகிலா விமல் கதாபாத்திரம் காணாமல் போகிறது, பின்பு முக்கியமான ஒரு கட்டத்தில் திடீரென திரும்ப வருகிறது. அதை இன்னும் கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம்.
படத்தின் வீடியோ விமர்சனத்தைக் காண
இது போன்ற சிறு குறைகளை மறந்துவிட்டு பார்த்தால், ஒரு தரமான க்ரைம் த்ரில்லர் சினிமாக ஈர்க்கிறது `போர் தொழில்’. த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் தியேட்டரில் சென்று பார்க்க ஏற்ற சினிமா.