Vijay Antony
Vijay AntonyPichaikkaran 2

Pichaikkaran 2 | மற்றுமொரு ' குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி'யா இந்த பிச்சைக்காரன் 2

ஒரு ஜனரஞ்சக படமாக குறைகள் இருந்தாலும் பரவாயில்லை என்பவர்களுக்கு இது பொழுதுபோக்கு படமாக இருக்கக் கூடும். ஆனால், எதாவது புதிதாக எனக் கேட்டால் வாய்ல அடிங்க வாய்ல அடிங்க “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி”னு சொல்லுங்க என்கிறது இந்த பிச்சைக்காரன் 2.
Pichaikkaran 2(1.5 / 5)

பணக்காரனாக வாழும் வாய்ப்பு கிடைக்கும் ஒரு பிச்சைக்காரன், நாட்டின் ஏழ்மையை போக்க அவனின் செயல்கள், அதற்கு வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிக்கிறான் என்பதே ஒன்லைன்

Vijay Antony
Vijay AntonyPichaikkaran 2

இந்திய பணக்காரர்களில் ஒருவர் விஜய் குருமூர்த்தி (விஜய் ஆண்டனி). இன்னொரு பக்கம் பிச்சைக்காரரான சத்யா (அதுவும் விஜய் ஆண்டனிதான்) 20 வருடங்களுக்கு முன் தொலைந்து போன தன் தங்கை ராணியை தேடிக் கொண்டிருக்கிறார். பணக்காரரான விஜயின் சொத்து மொத்தத்தையும் அபேஸ் செய்ய அவருடைய நண்பர்கள் தேவ் கில், ஜான் விஜய் மற்றும் அவரது மருத்துவர் ஹரீஷ் பெரேடி ஆகியோர் திட்டமிடுகிறார்கள். விஜய் குருமூர்த்தியின் மூளையை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக தாங்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் ஒருவரின் மூளையை விஜயின் தலைக்குள் வைப்பது தான் ப்ளான்(ஆனால் பணக்கார விஜய் ஆண்டனியே தேவ் கில், ஜான் விஜய் சொல்லும் விஷயங்களை கேட்டும் நடக்கும் கோபக்கார தலையாட்டி பொம்மை என்பது வேறு விஷயம்). அந்த மாதிரி ஒரு மூளைக்காக அவர்கள் கைவைக்கும் தலை சத்யாவுடையது. அவர் சாதாரண பிச்சைக்காரன் தான், கேள்வி கேட்க யாரும் இல்லை என்ற தைரியத்தில் ஆப்ரேஷனை முடிக்கிறார்கள். சத்யா, விஜய் குருமூர்த்தியாக கண் விழிக்கிறார், இதன் பிறகு என்ன நடக்கிறது? சத்யா இந்த சதியை முறியடித்தாரா? தனது தங்கையை கண்டுபிடித்தாரா? ஓவர் நைட்டில் வறுமையை ஒழித்தாரா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

இசை, நடிப்பு, எடிட்டிங் என பிஸியாக இருந்த விஜய் ஆண்டனி இந்த முறை இயக்குநராகவும் ஃபீல்டில் இறங்கியிருக்கிறார். 2016ல் வெளியான பிச்சைக்காரன் படத்திற்கும், இந்த பாகத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், பிச்சைக்காரன் என்ற ஒரே ஒரு கனெக்ட்டை மட்டும் இதிலும் கொண்டு வந்திருக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனியாக அவரது டெம்ப்ளேட் நடிப்பில் இருந்து சற்றும் விலகாமல் அதே டெய்லர்... அதே வாடகை. அவர்தான் அப்படி என்றால் படத்தில் எந்த மூலைக்கு திரும்பினாலும் எல்லா முகங்களும் நடித்து கொட்டுகிறார்கள் அல்லது நடிக்கத் திணறுகிறார்கள். சிறுவயது விஜய் ஆண்டனி மற்றும் அவரது தங்கையாக நடித்திருக்கு குழந்தை நட்சத்திரங்கள் மட்டும் கவனிக்க வைக்கிறார்கள். கதைக்கு சம்பந்தமே இல்லாமல் யோகி பாபுவுக்கு ஒரு ரோல் கொடுத்து, அவரும் சில காட்சிகள் வந்து போகிறார்.

மூளை மாற்று என நவீனமாக (சாத்தியமில்லைதான் ) யோசித்தது புதுசுதான். ஆனால் கூடு விட்டு கூடு பாயும் பிரபுவின் `சின்ன வாத்தியார்’ படத்தில் ஆத்மாவையே ஸ்வேப் செய்திருப்பார்கள். போதாதற்கு ப்ளாக் அண்ட் வொய்ட் காலத்தில் தொடங்கி பல படங்களில் ஒரே தோற்றத்தில் இருக்கும் இரண்டு பேரின் ஆள் மாறாட்டக் கதைகள் வந்திருக்கிறது. எனவே தமிழ் சினிமாவுக்கு இது புது களம் ஒன்றும் கிடையாது. ஆனால், அதை வைத்து சொல்லப் போகும் விஷயத்தை சுவாரஸ்யமாகக் கொடுக்கிறாரா? இல்லையா? என்பதுதான் பார்வையாளர்கள் எதிர்பார்ப்பது. இத்தனைக்கும் அதெப்படி குண்டு பல்பு மாதிரி மூளையைக் கழற்றி மாட்ட முடியும் என்ற லாஜிக் கேள்வியைக் கூட கேட்காமல், சரி சை-ஃபை என்கிறார்கள் என படத்தை தொடர்ந்து பார்க்கிறோம். ஆனால், நம்முடைய பெருந்தன்மையை, taken for grantedடாக எடுத்துக் கொள்கிறார் இயக்குநர், கதாசிரியர் விஜய் ஆன்டனி.

படத்தின் முதல்பாதி கூட ஓரளவு சுவாரஸ்யமாக நகர்கிறது. அதாவது ஒரு பக்கம் விஜய் குருமூர்த்தி, இன்னொரு பக்கம் மூளை மாற்று, சத்யா தன் தங்கையை தேடுவது, அந்த ஃப்ளாஷ்பேக், அண்ணன் - தங்கை சென்டிமென்ட், சத்யாவின் பழிக்குப் பழி, சில ஆக்‌ஷன் காட்சிகள் என நிறைய விஷயங்கள் நடக்கிறது. ஆனால் இடைவேளையில் தன்னுடைய எதிரிகளை தீர்த்துக்கட்டுகிறார் சத்யா. சரி இரண்டாம் பாதிக்கு கதையில் சொல்ல என்ன இருக்கிறது என நாம் யோசித்தால், ஏன் இல்லை? இருக்கவே இருக்கு நாட்டின் வறுமையும், ஏழைகளும் என `தேல்பத்ரி சிங்’ மோடுக்கு செல்கிறார் விஜய் ஆண்டனி.

Poverty Porn என்ற பதம் ஒன்று உண்டு, வறுமையும் - ஏழ்மையும் பற்றி பேசி நமது கழிவிரக்கத்தை சீண்டிப் பார்ப்பது. அதை இரண்டாம் பாதி முழுக்க தூவிவிட்டிருக்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் சீன், கிட்டத்தட்ட பிச்சைக்காரன் படத்தின் க்ளைமாக்ஸ் ட்ரான்ஸ்பர்மேஷன் காட்சி போன்று ஆரம்பிக்கிறது, இங்கிருந்து படம் பறக்கப் போகிறது என்று பார்த்தால், “சார் ஏழைங்க சார்... அவங்க எங்க சார் போவாங்க” என பம்மாத்து பண்ணுகிறார்கள். அதன் பின்பும் நாட்டின் ஏழ்மையை ஒழிக்க Anti Bigili என்ற இயக்கதை முன்னெடுக்கிறார், அதைத் தொடர்ந்து சொத்து யாருக்கு என கோர்ட்டில் கேஸ், வயிற்றில் வளரும் வாரிசு, நெஞ்சில் இருக்கும் துணிவு, லீகல் கேஸ் லியோ, தர்மத்தின் விடாமுயற்சி என கதை கன்னாபின்னாவென போய், படம் சின்னாபின்னமாகிறது. இன்னுமும் யூட்யூப் சேனல் போல மக்களிடம் மைக்கை நீட்டும் காட்சிகளை தமிழ் சினிமா எத்தனை காலத்துக்கு பிடித்துத் தொங்குமோ தெரியவில்லை.

விஜய் குருமூர்த்தி 5000 கோடி கைமாற்றுவது உட்பட எல்லா விஷயங்களையும் தேவ் கில்லிடம் கேட்டு தான் செய்கிறார். அவர் நினைத்தால் விஜய் ஆண்டனிய மேனுப்ளேட் செய்தே சொத்தை எழுதி வாங்கிவிடலாம், ஆனால் எதற்கு யூ-டர்ன் போட்டு டேபிளை உடைத்து? போலவே சத்யாவின் தங்கையை தேடுவது பிச்சைக்காரனாக இருக்கும் போது கடினம், ஆனால் பணக்காரராக மாறிய பின்பு மிக எளிமையாக நடக்கக் கூடிய விஷயம். அதை ஏன் செய்யவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

டெக்னிக்கலாக படத்தின் பின்னணி இசை ஓரளவுக்கு படத்தின் ஹைப் கூட்டுகிறது. பாடல்களில் கோவில் சிலையே பாடல் மட்டும் நன்று. ஆனால் படத்தை பிரம்மாண்டமாக காட்ட நினைத்து செய்யப்பட்டிருக்கும் சிஜி எல்லாம் மிக சொதப்பலாக பல் இளிக்கிறது. மிக சாதாரண காட்சிகளுக்கு கூட க்ரீன் மேட் தயவை நாடியிருப்பது ஏனோ தெரியவில்லை. அந்த குறையை படத்தின் கலர் க்ரேடிங் மற்றும் டிஐ மூலம் காப்பாற்றிய கலைஞர்களுக்கு பாராட்டுகள். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு மாஸ். ஸ்லோ மோஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி உழைத்திருக்கிறது. ராஜசேகர் மகேஷ் மேத்திவ் சண்டைக்காட்சிகள் தரம்.

ஒரு ஜனரஞ்சக படமாக குறைகள் இருந்தாலும் பரவாயில்லை என்பவர்களுக்கு இது பொழுதுபோக்கு படமாக இருக்கக் கூடும். ஆனால், எதாவது புதிதாக எனக் கேட்டால் வாய்ல அடிங்க வாய்ல அடிங்க “குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி”னு சொல்லுங்க என்கிறது இந்த பிச்சைக்காரன் 2.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com