NEEK | தனுஷுக்கு நம்மேல் என்ன தான் கோபம்..?
NEEK (1.5 / 5)
முன்னாள் காதலியின் திருமணத்துக்கு செல்லும் இளைஞனும், அவனின் காதல் கலாட்டாக்களுமே கதை.
பிரபு (பவிஷ்) சமையல் கலைஞராக பணியாற்றும் இளைஞர். ப்ரேக் அப் ஒன்றில் இருந்து மீண்டு வரும் பிரபுவிற்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள் அவரது பெற்றோர். மணப்பெண் பிரபுவின் பள்ளித் தோழி ப்ரீத்தி (ப்ரியா ப்ரகாஷ் வாரியர்). இருவரும் மெல்ல மெல்ல நெருக்கமாகும் போது, பிரபுவின் எக்ஸ் கேர்ள் ஃப்ரெண்ட் நிலாவின் (அனிகா) திருமண அழைப்பிதழ் வருகிறது. புதிய உறவுக்குத் தயாராகிவிட்டாலும், பழைய காதலின் நினைவுகளை மறக்க முடியாமல் குழம்புகிறார் பிரபு. இதிலிருந்து வெளியே வர, நிலாவின் திருமணத்தில் கலந்து கொண்டு, அவரிடம் பேசி ஒரு முடிவுக்கு வருவதே தீர்வு என அட்வைஸ் கொடுக்கிறார் ப்ரீத்தி. உடனே பிரபுவும், அவரது நண்பர் ராஜேஷூம் (மேத்திவ் தாமஸ்) இணைந்து கோவாவில் நடக்கும் திருமணத்திற்கு செல்கிறார்கள். அங்கு என்ன நடக்கிறது? பிரபு- நிலா ஏன் ப்ரேக் அப் செய்தார்கள்? இறுதியில் யார் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை எல்லாம் சொல்வதே `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.
இப்படத்தைப் பொறுத்தவரை நன்று என சொல்வதற்கான விஷயங்கள் மிக குறைவே. முதல் ப்ளஸ், மேத்திவ் தாமஸ். ஹீரோ ஃப்ரெண்ட் என்ற மிக வழக்கமான ரோல் தான், அவருக்கு சற்றும் பொருந்தாத டப்பிங் குரல். ஆனால் அவற்றை தாண்டியும், இப்படத்தை ஓரளவு ரசிக்கும்படி செய்வது மேத்திவ் செய்யும் அட்டகாசங்களே. பைக் ஓட்டத் தெரியாது என சொல்லும் காமெடி, ஒன் சைட் லவ் பற்றி புலம்புவது, வேறு பெண்ணிடம் காதல் முயற்சிகள் செய்யும் போது, குறுக்கே வரும் ஹீரோவிடம் கெஞ்சுவது, ஹீரோ புலம்பும் போது தானும் சேர்ந்து அழுவது என இப்படத்தில் மிகவும் கனெக்ட் ஆவது மேத்திவ் நடித்துள்ள ராஜேஷ் பாத்திரம் தான். லியோன் பிரிட்டோவின் கேமிரா கலர்ஃபுல்லாக கதையைக் காட்டுகிறது. ஜிவி இசையில் ஏற்கெனவே ஹிட்டான கோல்டன் ஸ்பாரோ, மற்றும் ஏடி போன்ற பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை பொறுத்தவரை அவ்வளவு ஈர்க்கவில்லை. பல இடங்களில் ஏற்கெனவே கேட்ட பாடல்களே பின்னணி இசையாக ஒலிப்பது போன்ற உணர்வே எழுந்தது.
படத்தின் ப்ளஸ் என்பது Toppings போல கொஞ்சமாக இருந்தால், மைனஸ் என்பது ஆறிப்போன லார்ஜ் சைஸ் பீட்சா அளவில் இருக்கிறது. 2கே கிட்ஸ் காதல், ஜென் ஸி காதல் என சொல்லிவிட்டு மீண்டும் ஒரு வழக்கமான கதையையே எடுத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். பிரச்சனை இது எந்த தலைமுறையினரின் காதல் என்பதல்ல, அந்தக் காதலோ அல்லது அதற்குள் வரும் சிக்கல்களோ துளியும் சுவாரஸ்யமாக இல்லை என்பதுதான். பப் ஒன்றில் பார்த்து பழகும் பிரபு - நிலா இடையே காதல், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலாவின் பணக்கார அப்பா, ஹீரோ செய்யும் தியாகம் என அடித்துத் துவைத்த அரதப் பழைய கதை. அதையாவது ரசிக்கும் படி சொல்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. மிக செயற்கையான காட்சி அமைப்புகள் ஒரு பக்கம் ஹெவியாக சோதிக்கிறது. லீட் ரோலில் நடித்திருக்கும் தனுஷின் உறவினர் பவிஷ், பல இடங்களில் ஆரம்ப கால தனுஷை பிரதிபலிக்கிறார். குரல் கூட தனுஷ்தான் டப்பிங் பேசிவிட்டாரோ என்ற அளவுக்கு இருக்கிறது. ஆனால் முக்கியமான காட்சிகளில் கூட நடிக்க முடியாமல் திணறுகிறார். ஹீரோயின் அனிகா, அழகாக வருகிறார். ஆனால் நடிப்பு பொறுத்தவரை எமோஷனல் காட்சிகளில் இன்னும் சிறப்பாக நடித்திருக்கலாம் என்ற ஃபீல். இவர்கள் தவிர வெங்கடேஷ் மேனன், ரபியா, ரம்யா, பெற்றோராக வரும் சரண்யா, நரேன் போன்றோர் ஓக்கேவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமார் நடிப்பில் குறை இல்லை என்றாலும், அவர் கதாப்பாத்திரம் ஆயிரம் ஆண்டு பழமையானதாய் இருப்பதுதான் பிரச்சனையே.
பிரபு ரகசியமாக வைத்திருக்கும் ஒரு விஷயத்தை, நிலா எப்படி அறிந்து கொள்கிறார் என்பதற்கான திரைக்கதை எழுதப்பட்டிருந்த விதம் மிக மிக மிக மோசம். அதற்கு நிலா கொடுக்கும் ரியாக்ஷன் அதை விட மோசம். அதன் பின் நிலாவின் தோழி சொல்லும் ஃப்ளாஷ்பேக்... யப்பா ஆள விடுங்கப்பா ரகம். திருமணத்திற்கு சென்ற இடத்தில் எதாவது ட்ராமா நடக்கும் என எதிர்பார்த்தால், வெறுமனே எந்த முக்கியத்துவமும் இல்லாத காட்சிகள் தான் தொடர்ந்து வருகிறது. இளைஞர்களின் காதல் களம், அவர்கள் பற்றிய கதை என எடுத்துக் கொண்டு, அதற்குள் கேன்சர் பேஷண்ட், அப்பாவுக்கு செய்த சத்தியம் என பழமைகளை நிறைத்து வைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் இரண்டாம் பாதியில் வரும் காமெடிகள் மட்டும் ஓகே. மற்றபடி பொறுமையை அதிகமாக சோதிக்கும் பிலோ ஆவரேஜ் படமே, இந்த `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’.