Naangal Review | மனதை உலுக்கும் குடும்ப கதை: 'நாங்கள்'
Naangal(3 / 5)
உடைந்து போன குடும்பத்தில், பால்யம் சிதைவடையும் குழந்தைகள் பற்றியும்... தோல்வியடைந்த தந்தை பற்றியும் சொல்வதே... நாங்கள்
ஊட்டியில் வளரும் மூன்று சகோதரர்கள் கார்த்திக் (மிதுன் வி) கெளதம் (நிதின் டி) துருவ் (ரித்திக் மோகன்). வசதியான வீடு, அழகான வாழ்விடம், பள்ளி என பலவும் இருந்தாலும் அவர்களது வாழ்க்கை மிக சிக்கல் மிகுந்ததாய் இருக்கிறது. காரணம் அவர்களின் தந்தை ராஜ்குமார் (அப்துல் ரஃபே). சொத்துக்கள் ஏராளம் இருந்தாலும், ஒரு தோல்வியுற்ற நபராக இருக்கிறார் ராஜ்குமார். தான் நடத்தும் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பள பாக்கி, வீட்டில் தண்ணீர், மின்சாரம், சாப்பாடு என எல்லாவற்றிலும் சிக்கல். மேலும் மகன்களிடத்தில் மிகுந்த கண்டிப்புடன் இருப்பதால், அவரைப் பார்த்தாலே பயந்து நடுங்கிறார்கள். கணவன் மனைவி சண்டை காரணமாக இவர்களின் தாய், அவளது வீட்டுக்கு சென்று விட, தந்தையின் ராணுவ கட்டுப்பாட்டு சூழலில் வளர்க்கிறார்கள். இப்படியான இவர்களது வாழ்வில் 1998ல் இருந்து 2000 வரையிலான வாழ்க்கை பயணமே கதையாக விரிகிறது.
இயக்குநர் அவினாஷ் பிரகாஷ் குழந்தைகளின் Troubled Childhood பற்றியும், எல்லா விதத்திலும் தோல்வியுற்ற ஒரு மனிதன் பற்றியும் மிக அழுத்தமான கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். படத்தில் மிக முதன்மையாக கவனம் பெறுவது நடிப்பு. தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் அப்துல் ரஃபே அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். குழந்தைகளை மிரட்டும் காட்சிகள், அவர்களுடன் இயல்பாக பேச முயல்வது, குடி போதையில் தடுமாறுவது எனப் பல காட்சிகளில் சிறப்பு. ஒரு கட்டத்தில் நமக்கே இவரைப் பார்த்தால் பயம் வரும் அளவுக்கு அழுத்தமான நடிப்பு. மகன்களாக வரும் மிதுன் வி, நிதின் டி, ரித்திக் மோகன் ஆகியோரும் மிக இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள். அப்பாவுக்கு பயந்து நடுங்குவது, அவரை எதிர்க்க முயல்வது, அம்மா விட்டு செல்லும் போது கலங்குவது எனப் பல காட்சிகளில் வெகு சிறப்பு.
துவக்கத்தில் இது குழந்தைகள் மீதான தந்தையின் தவறான அணுகுமுறை என்பது போல் தெரிந்தாலும், போகப் போக அது அழுத்தமாக பேசுவது ஒரு உடைந்து போன குடும்பம் பற்றி. ஒரு தந்தையாக, ஒரு கணவராக, தன் தொழிலாளர்கள் இடத்தில் முதலாளியாக என பல கோணங்களில் தோல்வியுற்ற ஒருவரைப் பற்றி. குழந்தைகளிடம் கண்டிப்பாக இருப்பது என்ற பார்வை ஒரு தந்தையுடையது, அதுவே குழந்தை தரப்பில் இருந்து பார்த்தால் அவ்வளவு பெரிய Truma என்பதும் படத்தில் பார்க்க முடிகிறது. அதே நேரம் உங்களின் குழந்தைப் பருவத்தை நான் மீண்டும் தருவேன் எனச் சொல்லி அழும் தந்தை, ஒரு இழப்புக்காக அழும் தந்தையால் குழந்தைகளின் வளர்ப்பு மேல் கவனம் குவிக்க முடியாத அளவு பொறுப்புகளில் இருந்து விலகி இருக்கும் முரணும் படத்தில் இருக்கிறது.
வேத் ஷங்கர் இசையில் படத்தின் அழுத்தமான காட்சிகளோ, மென்மையான உணர்வுகளோ அழகாக கடத்தப்படுகிறது. இயக்கம் மட்டும் இல்லாமல், படத்தின் ஒளிப்பதிவும் அவினாஷ் தான். பசுமையான இடத்தில் இருள் மிகுந்த ஒரு கதையைக் கூரும் படி காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். திரைவிழாவில் 4.30 மணிநேரம் ஓடக்கூடிய படத்தின் சுருக்கப்பட்ட வடிவமே இப்போது வெளியாகிறது. எனவே நீக்கப்பட்ட காட்சிகளால் சில உணர்வுகளை நம்மால் முழுதாக புரிந்து கொள்ள முடியவில்லை. குறிப்பாக படத்தின் முடிவு என்ன சொல்ல முனைகிறது என்பது இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.
மொத்தத்தில் சொல்வதெனில், ஒரு அழுத்தமான சினிமா, வித்தியாசமான சினிமாவாக வந்திருக்கிறது நாங்கள். வழக்கமான சினிமா என்ற எதிர்பார்ப்பை இறக்கி வைத்துவிட்டு சென்றால் புதுமையான அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.