காமெடியன்கள் பட்டாளத்துடன், கலகலப்பாக இருக்கிறதா முஸ்தபா முஸ்தபா? - Mustafa Mustafa Review | Sathish
காமெடியன்கள் பட்டாளத்துடன், கலகலப்பாக இருக்கிறதா முஸ்தபா முஸ்தபா?(1.5 / 5)
வீடியோ ஒன்றால் ஏற்படும் சிக்கலும், அதை சரி செய்ய ஓடும் ஹீரோவும் தான் `முஸ்தபா முஸ்தபா' படம்.
கார்த்திக் (சதீஷ்) தன் நண்பர் வாசு (சுரேஷ் ரவி) உடன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றிவருகிறார். தான் தயாரிக்கும் புதிய நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் ஸ்டெஃபியை (மோனிகா) பார்த்த உடன் கார்த்திக்கு காதல் வருகிறது. சில காட்சிகளில் அது டபுள் சைடு காதலாக மாறி, கல்யாணத்தை நோக்கி நகர்கிறது. அப்போது கார்த்திக் மொபைலுக்கு வீடியோ ரூபத்தில் வருகிறது ஒரு ஆபத்து. அந்த வீடியோ `மேட்டர்' வெளியே தெரிந்தால் தன் திருமணமே நிற்கும் என்ற சூழல் வருகிறது. இதனை சரி செய்ய கார்த்திக் & கோ என்ன செய்கிறது, பிரச்சனையிலிருந்து தப்பித்ததா இல்லையா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.
சமீர் சுல்தான் இயக்கத்தில் தருண் பாஸ்கர், வாணி போஜன் நடித்து 2019ல் தெலுங்கில் வெளியான `Meeku Maathrame Cheptha' படத்தை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் பிரவீன் சரவணன்.
லீட் ரோலில் சதீஷ் பிரச்சனைகளை கண்டு திடுக்கிடுவது, காதலியை சமாளிப்பது, இதை எல்லாம் செய்வது யார் என்று குழம்புவது என பல உணர்வுகளை காட்ட வேண்டிய பொறுப்பு. ஆனால் அதில் எதுவும் முழுமை இல்லை. படத்தின் பிரதான பாத்திரத்தின் தன்மை அவரது நடிப்பில் இன்னும் வெளிப்பட்டிருக்கலாம். துணை பாத்திரமாக வரும் சுரேஷ் ரவி நடிப்பிலும் பெரிய அழுத்தம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்த அளவு சிரிக்க வைக்க முயற்சிக்கிறார். உப காமெடியன்களாக வரும் கருணாகரன், புகழ் இருவரும் வந்து போகிறார்கள். ஹீரோயினாக மோனிகா பாத்திரத்துக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. கிளாமர் ஹீரோயினாக வரும் ஐஸ்வர்யா தத்தா வழக்கமான நடிப்பை கொடுக்கிறார். மானசா சௌத்ரிக்கு க்ளைமாக்சில் மட்டும் ஒரு சீரியஸ் காட்சி, அதை பக்காவாக முடிக்கிறார்.
ஜோன்ஸ் ரூபர்ட் இசையில் பாடல்களோ, பின்னணி இசையோ அத்தனை சுவாரஸ்யமாக இல்லை. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு படத்தை இளைமையாக எனர்ஜியாக கொடுக்க முயல்கிறது. படத்தில் பெரிய சுவாரஸ்யம் எதுவும் இல்லை என்பதால் 2 மணிநேரத்துக்கும் குறைவான படம் என்றாலும் மிக நீளமான படமாக தோன்றுகிறது.
இப்படத்தின் சிக்கலே, ஒரிஜினல் படத்தில் இருந்த எனர்ஜி மிஸ் ஆவது தான். ஒவ்வொரு காட்சியிலும் என்ன நடந்ததோ, அதை எடுத்தால் போதும் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது மேக்கிங். ஆனால் அந்தக் காட்சிக்குள் இருக்கும் காமெடி இந்த ரீமேக்கில் மிஸ்ஸிங். படத்தில் கோர்வை மிஸ் ஆவதால், ஒவ்வொறு காட்சியும் துண்டு துண்டாக இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. நடிப்பாக, ஆக்கமாக, தொழிநுட்ப ரீதியாக என பல விதங்களில் படம் பின்தங்கி தான் இருக்கிறது.
படத்துக்குள் எந்த சுவாரஸ்யமும், காமெடியும் இல்லாததால், மற்றும் ஒரு ரீமேக் என்ற அளவிலேயே முடிகிறது இந்த `முஸ்தபா முஸ்தபா'

