ஹாலிவுட்டுக்கு மினியன்ஸின் லவ் லெட்டர்! | Minions & Monsters Review
ஹாலிவுட்டுக்கு மினியன்ஸின் லவ் லெட்டர்!(3 / 5)
மான்ஸ்டரிடமிருந்து உலகை காக்க முயலும் மினியன்ஸ் கதை!
மினியன்ஸ் என்ற இனத்தின் கதையை அருங்கட்சியகம் ஒன்றில் அங்குள்ள வழிகாட்டி ஒருவர் சொல்வதாக துவங்குகிறது கதை. இதற்கு முன் வந்த ஆறு பாகங்களின் முன் கதை தான் இந்த பாகம். அதாவது மினியன்ஸ் இனம் எங்கிருந்து வந்தது என்ற கதையாக விரிகிறது. 1927ல் தங்களது பயணத்தை துவங்குகிறது மினியஸ் குழு. அவர்களின் ஒற்றை நோக்கம், மிக கொடூரமான வில்லன் ஒருவரை தேடி அவருக்கு அடிமையாக மாறி, சேவகம் செய்ய வேண்டும். அப்படி பலரை கடந்து வரும் இக்கூட்டம் இறுதியாக வந்தடைவது லாஸ் வேகாஸின் படப்பிடிப்பு தளம் ஒன்றுக்கு.
மினியன்ஸ் கூட்டத்தில் ஜேம்ஸ், ஹென்ரி மற்றும் எட் மூவரும் நண்பர்கள். இதில் ஜேம்ஸ் ஓவியத்தில் நாட்டம் கொண்டவன். சினிமா உலகை பார்த்த பின்னர் தானும் ஒரு படம் இயக்க வேண்டும் என விரும்புகிறான். இன்னொரு பக்கம் பூமியை சிறைபிடிக்க வந்த டார்ட் என்ற வேற்றுலக ரோபர்ட்டை தங்கள் மாஸ்டராக ஏற்கும் பிற மினியன்ஸ் அவரிடம் அடிமைகள் ஆகிறார்கள். ஒருகட்டத்தில் பூமிக்கே பெரிய ஆபத்து வருகிறது. இதன் பின் ஜேம்ஸின் சினிமா ஆசை என்ன ஆனது? டார்ட்டின் என்ன நிறைவேறியதா? பூமி காப்பாற்றப்பட்டதா? என்பதை எல்லாம் சொல்கிறது இந்த Minions & Monsters.
Despicable Me படத்தில் மினியன்ஸ் என்ற பாத்திரங்களை அழகாக கையாண்ட Pierre Coffin தான் இந்த பாகத்துக்கும் இயக்குநர். ப்ரீகுவல் படம் என்றாலும் ஒரு ஸ்பின் ஆஃப் போல படத்தை போல அணுகி ஜாலியான படத்தை கொடுத்திருக்கிறார். சினிமாவுக்குள்ளே ஒரு சினிமா, அதில் க்ளாஸிக் படங்களின் நினைவூட்டல், காமெடி, மனிதம் என படத்தை எவ்வளவு அழகாக கொடுக்க முடியுமோ அதனை எல்லாம் சேர்த்திருக்கிறார்.
மினியன்ஸ் பொறுத்தவரை அவர்களின் தேடல் ஒரு வில்லனிடம் சென்றடைவது என்றாலும், படங்களில் குரூரமான வில்லன்கள் இருப்பதில்லை. அப்படி இருந்தாலும் அவர்களிடமிருந்து மனிதம் வெளிப்படுவது தான் படத்தின் முடிவாக இருக்கும். இப்பட வரிசையின் சிறப்பே அதுதான், தீமைக்குள் இருக்கும் நன்மையை வெளிக்காட்டுவது. அப்படி இந்த பாகத்திலும் பூமியை கட்டுப்படுத்த நினைக்கும் ஒரு ரோபோவே, அந்த பூமியை காக்க துணை நிற்பது இந்த பாகத்தில் அதற்கான உதாரணம்.
மௌனப்படமாக இருந்த ஹாலிவுட், ஒளியும் - ஒலியுமாக மாறிய காலகட்டம், The Matrix, Elliot and E.T. படங்களின் பாத்திரங்களை காட்டியது, Ben-Hur படத்திற்கான ஹோமாஜ், The Viking வரலாற்றை காமெடியாக பதிவு செய்தது, சார்லி சாப்ளின் Modern Times பட காட்சியை பயன்படுத்தியது, Jaws பட காட்சியின் ரெஃபரான்ஸ் மேலும் சமீபத்தில் வெளியான Babylon படம் வரை ஹாலிவுட் மொத்தத்துக்குமான ஒரு லவ் லெட்டர் போல படத்தை வடிவமைத்திருக்கிறார்கள்.
அனிமேஷன் படங்கள் பிடிக்கும் என்றால், குறிப்பாக மினியன்ஸ் மீது ஆர்வம் இருக்கிறது என்றால், கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது.

