இயல்பான குடும்பக் கதையாக ஈர்க்கிறதா ‘ஹபீபி’? | Habeebi Review | Meera Kathiravan
இயல்பான குடும்ப கதையாக ஈர்க்கிறதா ஹபீபி?(2 / 5)
பல சவால்களை கடக்கும் ஒரு குடும்பத்தின் கதையே `ஹபீபி'
கண்ணாடி வாப்பா குடும்பத்தைச் சேர்ந்தவர் முகமது யூசுப் (கஸ்தூரி ராஜா). மகன் அபுதாஹிர் (ஈஷா) இரு மகள்களுடன் சற்றே வறுமையில் வாழ்ந்தாலும் கைத்தறி நெசவையே கைவிடுவதில்லை என்கிற மனமில்லை அவருக்கு. ஆனால் அவரது சகோதரர் உட்பட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் துபாய்க்கு பணிக்குச் செல்கிறார்கள்.
மகன் அபுதாஹிர் படித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார் என நம்பினால் அவரோ நிலோஃபர் (மாளவிகா மனோஜ்) மீது காதல் கொண்டு திரிகிறார். ஒருகட்டத்தில் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு அபுவின் கைகளுக்கு வர அதன்பின் என்ன ஆகிறது என்பதே கதை.
இஸ்லாமிய பின்னணியில் ஒரு குடும்பத்தின் கதை என துவங்கும் படம், சில நிமிடங்களில் அன்றாடம் நாம் பார்க்கும் ஒரு குடும்பத்தின் கதையாக மாறிவிடுகிறது. அவர்களும் சகஜமான மனிதர்கள்தான் என்பதை உணர்வுபூர்வமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.
யூசுப் பாத்திரத்தில் கஸ்தூரிராஜா நல்ல அறிமுகம். வெறுமையை வெளிக்காட்டுவது, நெசவை கைவிடும்போது, மகனைக் காப்பது, இழப்பை நினைத்து வருந்துவது என அழுத்தமான காட்சிகளில் கவனிக்க வைக்கிறார். அபுதாஹிர் பாத்திரத்தில் வரும் ஈஷா, பள்ளிக்கால காட்சிகளில் குறும்புத்தன காதலை வெளிப்படுத்தும்போது மட்டும் நன்று. மற்ற அனைத்துக் காட்சிகளிலும் ஒரேவிதமான முகபாவத்தில்தான் இருக்கிறார். நிலோஃபர் பாத்திரத்தில் வரும் மாளவிகா மனோஜ், வசனமே இல்லாமல் முதல் பாதியில் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மன உணர்வுகள் அத்தனையையும் வார்த்தைகள் இன்றி கடத்தும் பணியை அட்டகாசமாகச் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தின் பெரிய பலம் மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு மற்றும் சாம் சி எஸ் இசை. அந்த ஊரின், அந்த தெருக்களின், அந்த வீடுகளின் பிரதிபலிப்பைக் கச்சிதமாக காட்டியும், அவர்களின் அன்றாடங்களைப் பதிவு செய்தும் படத்தின் நம்பகத்தன்மையையும் கூட்டி இருக்கிறார். சாம் சி எஸ் பின்னணி இசை படத்துக்கு உணர்ச்சி சேர்க்கிறது. ரூஹே பாடலும் கேட்க அத்தனை இனிமையாக இருக்கிறது.
இந்தப் படம் மூலமாக இஸ்லாமியர்கள் ஏதோ தனித்துவிடப்பட்ட குழு அல்ல, அவர்களும் நம் சமூகத்தில் ஓர் அங்கமானவர்கள் என்பதைப் பேச நினைத்திருக்கிறார் மீரா கதிரவன். அது படத்திலும் பிரதிபலிக்கிறது. மேலும் காலத்துக்கு ஏற்ப எல்லா மனிதர்களும் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொண்டதை போல, இங்கும் பல மாற்றங்கள் நிகழ்வதைப் போகிறபோக்கில் பதிவு செய்திருக்கிறார். சித்தியாக வரும் அனுஸ்ரேயா ராஜன் பாத்திரம் மூலம் அடுத்த தலைமுறை மாற்றத்தை நோக்கி நகர்வதையும், பர்வீன் பாத்திரம் மூலம் மாறி இருப்பதையும் காட்டி இருந்தது சிறப்பு.
இந்தப் படத்தின் குறைகள் எனப் பார்த்தால், இப்படம் என்ன கூற வருகிறது என்பதில் எந்த தெளிவும் இல்லாமல் இருப்பதே. இது நெசவுத் தொழிலை கைவிட மனமில்லாதவரின் கதையா, தங்களின் சமூகக் கட்டுப்பாடுகளால் காதலை இழந்த ஓர் இளைஞனின் கதையா, பொருளாதாரம் ஈட்டுவதற்காக வெளிநாடு சென்ற கணவனைப் பிரிந்திருக்கும் மனைவியின் கதையா என எதிலும் ஒரு தெளிவில்லாமல், எல்லாவற்றிலும் கொஞ்சம் என இருக்கிறது. அதனாலேயே படம் முடியும்போது நம்மால் எந்த முழுமையையும் உணர முடியவில்லை.
முதல் முறை இஸ்லாமியப் பின்னணியில் ஒரு குடும்பக் கதையை சொன்னதுபோல, அதைத் தெளிவாகவும் இன்னும் அழுத்தமாகவும் சொல்லி இருந்தால் சிறப்பான படைப்பாக இருந்திருக்கும் இந்த ஹபீபி.

